News
Loading...

அதிமுக இனி: எம்ஜிஆர் வழியா, ஜெயலலிதா வழியா?

அதிமுக இனி: எம்ஜிஆர் வழியா, ஜெயலலிதா வழியா?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்துவிட்டதால், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வருவார் என்பதுதான் ஆரம்ப நாட்களில் நிலவிய சூழல். அதை உறுதிசெய்யும் வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று சசிகலாவுக்கு ஆதரவளித்தனர். ஆனால், கடந்த ஒருவார காலமாக அவர்களுடைய குரலில் ஒரு பெருமாற்றம் தெரிகிறது. பொதுச்செயலாளராக மட்டுமல்ல, நாட்டின் முதல்வராகவும் சசிகலா வர வேண்டும் என்ற குரல் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

சட்டபூர்வமாக ஒரு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வேறொரு முதலமைச்சர் வேண்டும் என்ற குரல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் மத்தியிலிருந்து எழுந்தால், அதனை ஒரு கட்சிக்காரனின் கருத்து, தொண்டனின் உணர்வு என்று இயல்பாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களே அந்தக் கருத்தைப் பகிரங்கமாகவும் ஊடகங்களிலும் சொல்லும்போது, அது கூடுதல் கவனத்துடன் அணுக வேண்டிய ஒன்றாகப் பரிணாமம் பெறுகிறது.

சசிகலாவா.. பன்னீர்செல்வமா?

இன்று முதலமைச்சராகியிருப்பவர், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர். ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில், அவரது விருப்பத்தின் பேரிலேயே முதல்வருக்கான பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. அத்தகைய ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் வர வேண்டும் என்று அமைச்சர்களே சொல்வதை வெறுமனே உட்கட்சி ஜனநாயகம் என்று சுருக்கிப் பார்த்துவிடமுடியாது. அதில் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகவே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆக, கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒற்றைத் தலைமை வேண்டுமா, அல்லது இருவேறு தலைமைகள் வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான விடைதேடி வேறெங்கும் செல்லத் தேவையில்லை. அதிமுகவின் கடந்த கால வரலாற்றிலேயே சில வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளன.

வழிகாட்டு நெறிமுறைகள்

அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் அதன் பொதுச்செயலாளராகச் செயல்பட்டார். ஆட்சியைப் பிடிக்கும் வரை அந்தப் பதவியில் இருந்த அவர், முதலமைச்சரான பிறகு, கட்சியின் தலைமைப் பொறுப்பான பொதுச்செய லாளர் பதவியைத் தனது நம்பிக் கைக்குரிய ப.உ.சண்முகத்திடம் கொடுத்தார். பிறகு, மூத்த அமைச் சரும் எம்ஜிஆரின் மதிப்புக்குரியவருமான நாவலர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தார். அடுத்து, அந்தப் பதவியை மூத்த தலைவர் ராகவானந்தத்திடம் கொடுத்தார். எம்ஜிஆர் மறைவதற்கு முன்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார். ஆக, எம்ஜிஆரின் காலத்தில் பெரும்பாலும் கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடமே இருந்திருக்கிறது.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, ஆட்சியைப் பிடித்து முதல்வரான பிறகும்கூட கட்சித் தலைமையைத் தன்வசமே வைத்திருந்தார். எந்தக் காலத்திலும், யார் வசமும் அந்தப் பதவியை விட்டுக்கொடுக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக முதல்வர் பதவியை இழக்க வேண்டிய இரண்டு தருணங்களிலும்கூட ஆட்சித் தலைமையை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தாரே தவிர, கட்சித் தலைமையை எப்போதும்போல் தன்வசமே வைத்திருந்தார்.

கவனமாகச் சேர்த்த விதி

மேற்கண்ட இரண்டு நடைமுறைகளும் வெவ்வேறாக இருந்தாலும், அணுகு முறையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எம்ஜிஆர் தன் காலத்தில் பொதுச் செயலாளர் பொறுப்பை மற்றவர் களிடம் ஒப்படைத்திருந்தாலும், அவர்கள் எம்ஜிஆரை மீறிச் செயல்படக் கூடியவர் களாக இருந்திருக்கவில்லை. எம்ஜிஆர் ஒன்று, நாங்களெல்லாம் பூஜ்ஜியம். எம்ஜிஆர் இல்லாவிட்டால் எங்களுக்கு மதிப்பில்லை என்று பெருமிதப்பட்ட வர்கள். கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித் தால், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வருவதற்குக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதற்காகவே கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கூடிப் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் விதியைக் கவனமாகச் சேர்த்திருந்தார் எம்ஜிஆர்.

அதேபோல, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றிருந்தாலும், அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பவராக இருந்தார். ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக ஒருமுறை அல்ல, இரண்டு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து எவ்விதமான தயக்கமும் இல்லாமல் விலகியவர் ஓ.பன்னீர்செல்வம்.

யாருடைய பாதை?

தற்போது ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அதிமுக எந்த மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றப்போகிறது என்பது முக்கியமான கேள்வி. எம்ஜிஆர் பாதையா, ஜெயலலிதா பாதையா? எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அதிமுகவுக்கு இருக்கும் சவால்களுள் முக்கியமானது. ஏனென்றால், எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் மக்கள்சக்தி பெற்ற மாபெரும் ஆளுமைகள். ஆனால், இன்று இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவருக்குமே அத்தகைய பலம் எதுவும் இப்போதுவரை இல்லை என்பதுதான் கள யதார்த்தம்.

ஒருவேளை, கட்சியும் ஆட்சியும் தனித்தனி நபர்களிடம் இருக்கட்டும் என்று முடிவுசெய்து, அதிகாரக் குவிப்பைத் தவிர்த்து அதிகாரப் பகிர்வை அமல்படுத்தும் பட்சத்தில், அங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஏனென்றால், அதிகாரப் பகிர்வு (Power Sharing) என்பது எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் அதிகார மையங்களாக (Power Centres) மாற வாய்ப்பு இருக்கிறது. ஓபிஎஸ் பிரிவு, சசிகலா பிரிவு என்றெல்லாம் பிரிந்து நிற்கும் பட்சத்தில், அது கட்சிக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் ஆபத்து.

ஆக, இதுவரை இல்லாத வகையில் அதிமுகவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. அது எவ்வளவு பெரியது என்பது டிசம்பர் 29 அன்று கூடும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு எடுக்கும் முடிவில் இருக்கிறது!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். 'மொழிப்போர்', 'கச்சத்தீவு', 'மதுவிலக்கு' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.