News
Loading...

பணத்தட்டுப்பாடு இன்னும் 6 மாதம் நீடிக்கும்: அருண் ஜெட்லி தகவல்

பணத்தட்டுப்பாடு இன்னும் 6 மாதம் நீடிக்கும்: அருண் ஜெட்லி தகவல்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள பணப்புழக்கத்தில் இது 86 சதவீதம் ஆகும்.

இவ்வளவு பணத்தையும் ஒட்டு மொத்தமாக செல்லாது என அறிவித்த அதே நேரத்தில், அதற்கு ஈடாக 100 ரூபாய், 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவில்லை. இதனால் மக்களிடம் பணப்புழக்கம் முற்றிலும் முடங்கி உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கு வங்கிகளிலும் பணம் இல்லை. ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பூட்டியே கிடக்கின்றன.

திறந்து இருக்கும் ஒன்றிரண்டு ஏ.டி.எம்.களிலும் தேனீக்கள் மொய்ப்பது போல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகளில் கணக்கு இருந்தால் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கிகளிலும் கையிருப்பில் பணம் இல்லை. எனவே, பணம் கேட்டு வருபவர்களுக்கு மிக குறைந்தபட்ச தொகையை கொடுக்கிறார்கள். அல்லது பணம் இல்லை என்று கவுண்ட்டரையே மூடி விடுகிறார்கள்.

இதனால் எங்கு பார்த்தாலும் பண தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாடுகிறார்கள். புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கும் சில்லரை கிடைக்கவில்லை. அதை கடைகளில் கொடுத்தாலும் சில்லரை தட்டுப்பாடு காரணமாக வாங்க மறுக்கிறார்கள். இதனால் மக்கள் பெரும் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பணத்தட்டுப்பாடு பிரச்சனை இன்னும் 8 மாதங்கள் வரை நீடிக்கும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி இருக்கிறார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில ஒடிசா கலை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அருண் ஜெட்லி கூறியதாவது:-

நாட்டின் முன்னேற்றத்துக்காகவே பெரிய பண நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் முடிவுக்கு வந்ததும் இந்தியா பல்வேறு வகைகளிலும் முன்னேற்றம் அடையும். குறிப்பாக இந்திய உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) பெரும் வளர்ச்சியை காணும். வரிவிதிப்பு முறைகள் விரிவடையும்.

தற்போது வங்கியில் குவிந்துள்ள முதலீடுகள் மூலம் மக்களுக்கு பல்வேறு இனிப்பான திட்டங்களை கொண்டு வர முடியும். பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் ஏற்படும்.

இப்போதுள்ள பணத்தட்டுப்பாடு இன்னும் 3 மாதத்தில் இருந்து 6 மாதங்கள் வரை நீடிக்கலாம். அதன் பிறகு இந்தியா ஒரு நல்ல பலனை நிச்சயம் காணும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த போது, பிரதமர் மோடி வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் வந்ததும் மக்களின் பிரச்சனை சீராகி விடும் என்று கூறினார். ஆனால், வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் போதிய பணம் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மக்கள் திண்டாடினார்கள்.

இதையடுத்து கூறிய பிரதமர் இன்னும் 50 நாட்களில் நிலைமை சீராகி விடும் என்றார். ஆனால் மத்திய மந்திரி அருண் ஜெட்லி இன்னும் 6 மாதம் வரை நீடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

இப்போதே நிலைமையை சமாளிக்க முடியாமல் மக்கள் பல்வேறு அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்னும் 6 மாதம் என்றால் நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்பு உள்ளது.

English Summary : Arun Jaitley Says Money shortage could last another 6 months

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...