News
Loading...

போயஸ்கார்டன் வீட்டில் எனக்கும் பங்கு உண்டு: அண்ணன் மகள் தீபா பேட்டி

போயஸ்கார்டன் வீட்டில் எனக்கும் பங்கு உண்டு: அண்ணன் மகள் தீபா பேட்டி

றைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

எனது அத்தை (ஜெயலலிதா) மரணம் பற்றி மக்களிடமும் இன்னமும் சந்தேகம் உள்ளது. அரசியல் கட்சிகளும் அது தொடர்பான விபரத்தை வெளியிட கோரி வருகின்றன. நானும் அதைத்தான் சொல்லி வருகிறேன்.

எனது அத்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி நான் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றெல்லாம் நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

எனது அத்தை மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட நாட்கள் எப்படி இருந்தார் என்பதை மருத்துவமனை நிர்வாகம் மேலும் அதிகமான விளக்கங்களுடன் தெரிவிக்க வேண்டும். நான் அவரது (ஜெயலலிதா) குடும்பத்தை சேர்ந்தவள் என்ற முறையில் இதில் எனக்கு கவலை உண்டு.

அப்பல்லோ மருத்துவமனை என் அத்தைக்கு உலகத்தரத்துக்கு இணையான மிகச் சிறப்பான சிகிச்சையைக் கொடுத்தனர் என்பதை நான் முழுமையாக அறிவேன். வெளிநாட்டில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணரையெல்லாம் வரவழைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த மருத்துவ சிகிச்சை நடைமுறைகள் என்ன என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.

எனது அத்தையின் சொத்து விவகாரங்களில் எந்த தெளிவான நிலையும் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதுவரை நான் அவரது எந்த சொத்துக்கும் உரிமை கொண்டாடவில்லை. அந்த பணத்துக்கோ அல்லது புகழுக்கோ நான் ஆசைப்படவில்லை என்பதை முதலில் மிகவும் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் போயஸ் கார்டனில் எனது அத்தை வாழ்ந்த வேதா நிலையம் மாறுபாடானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வீட்டின் பெயரே அதைச் சொல்லும்.

எனது பாட்டி வேதவல்லி பெயரில் அந்த வீடு உள்ளது. அது எனது மூதாதையர்களின் சொத்து என்று நான் நம்புகிறேன். அது நேரடியாக எங்கள் பரம்பரைக்குரியது.

மூதாதையர்களின் சொத்துக்களில் அவர்களது வாரிசுகள் அனைவருக்கும் சம அளவில் பங்கு உள்ளது. பெண்களுக்கும் தங்கள் மூதாதையர் சொத்தில் உரிய பங்கு பெற உரிமை இருக்கிறது. அந்த வகையில் போயஸ்கார்டன் வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் எனது அத்தையின் அரசியல் வாரிசாக வருவது பற்றி, நான் ஒரு தெளிவான சிந்தனையுடன் இருக்கிறேன். இப்போது நான் அரசியல் களத்தில் புகுந்து அப்படியொரு பிரசாரத்தில் ஈடுபட விரும்பவில்லை.

ஆனால் எனக்கான அரசியல் கதவு திறக்க நான் காத்து இருக்கிறேன். சரியான திசையில் நகரும்பட்சத்தில் அதுபற்றி ஒரு முடிவுக்கு வருவேன்.

இது தொடர்பாக நான் அ.தி.மு.க.வில் யாரையும் சந்தித்துப் பேசவில்லை. நான் எந்த கோஷ்டியிலும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் களம் என்பது மிகவும் சவாலானது என்ற கருத்து எனக்கு உண்டு. ஆனால் நான் ஜனநாயகத்தை நம்புகிறேன்.

ஜனநாயகத்தில் மக்கள் முடிவே இறுதியானது. அவர்கள்தான் தலைவர்களை தேர்வு செய்வார்கள். தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும்.

அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக என்னை முன் நிறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்படுவதாகவும் பிறகு அவை அகற்றப்படுவதாகவும் கேட்கிறீர்கள். அதுபற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. எனக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்காலத்துக்காக எனது பக்கத்தில் இருந்து எல்லாம் சரியான திசையில் செல்லும் என்று கூறிக்கொள்கிறேன். பிரார்த்திக்கிறேன். எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் என் படம் போட்டு போஸ்டர் எதுவும் அச்சடித்து ஒட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவையெல்லாம் தேவை இல்லை.

இத்தகைய பப்ளிசிட்டியை நான் விரும்பவில்லை. உண்மையிலேயே இதை நான் விரும்பத்தகாததாக நினைக்கிறேன். இதை எனது வேண்டுகோளாகவும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு விடுக்கிறேன்.

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். எனது பெயரில் எந்த சர்ச்சையையும் உருவாக்கி விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல நான் அரசியல் களம் புகுவதற்கு உரிய காலம் வர வேண்டும். இது ஒன்றும் பொழுதுபோக்கான சமாச்சாரம் அல்ல. மிகவும் தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய வி‌ஷயமாகும்.

எனவே அதற்குரிய காலம் வரை நாம் ஒவ்வொருவரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் பொறுமையை கையாள வேண்டும்.

இந்த இக்கட்டான சமயத்தில், என் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை கருத்தில் கொண்டு, நான் அமைதியாக துக்கத்தை அனுசரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அ.தி. மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.