News
Loading...

ஆடை சர்ச்சை: சுராஜ் மன்னிப்பு கோர தமன்னா வலியுறுத்தல்

ஆடை சர்ச்சை: சுராஜ் மன்னிப்பு கோர தமன்னா வலியுறுத்தல்

டிகைகளின் ஆடைகள் குறித்து இயக்குநர் சுராஜின் சர்ச்சையான கருத்துக்களுக்கு தமன்னா காட்டமாக பதில் தெரிவித்துள்ளார். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கத்தி சண்டை'. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும், வசூலிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

'கத்தி சண்டை' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அளித்துள்ள பேட்டியில், "நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும் போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத் தான் விரும்புவார்கள். நடிக்க வேண்டும் என்றால் அதுக்கு தனியாக தான் படம் பண்ண வேண்டும்.

கிளாமராக செய்பவர்கள் தான் இன்று பெரிய நாயகியாக இருக்கிறார்கள். பசங்க படம் பார்க்கும் போது சந்தோஷமடைய வேண்டும். ஆடை வடிவமைப்பாளர் எல்லாம் முட்டி வரை மூடி உடை எடுத்து வருவார். இதெல்லாம் கட் பண்ணிடா, ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாங்க, நடிக்க சொல்லுடா என்று சொல்வேன்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுராஜ்.

இக்கருத்துக்களுக்கு அவரை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் சுராஜ் கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுராஜ் கருத்துகளுக்கு தமன்னா, "இது 2016; மேலும் இந்த விவகாரத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றிய 'தங்கல்' திரைப்படத்திலிருந்து நான் பாதியிலேயே எழுந்து வந்தது ஒரு முரண். எனது இயக்குநர் சுராஜ் நடிகைகள் பற்றி தெரிவித்த கருத்துகள் எனக்கு கடும் கோபமூட்டுவதோடு காயப்படுத்துகிறது. அவர் இதற்காக என்னிடம் மட்டுமல்ல திரைத்துறையில் பணியாற்றும் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.

நாங்கள் நடிகைகள், ரசிகர்களை உற்சாகப்படுத்தவே நடிக்கிறோம், ஆனால் அதற்காக எந்த ஒரு நிலையிலும் எங்களை காட்சிப் பொம்மைகளாக, பொருட்களாக்கக் கூடாது. தென் திரையுலகில் நான் 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன், நான் எனக்கு சவுகரியம் தரும் உடைகளை அணிகிறேன்.

நம் நாட்டின் பெண்களைக் கேவலமாக பேசுவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எனவே ஒரு தனிநபர் கூறிய இத்தகைய கருத்துகளை வைத்துக் கொண்டு திரைத்துறையே இப்படித்தான் என்று பொதுமைப் படுத்த வேண்டாம் என்று என் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...