News
Loading...

டிசம்பர் மாத ராசிபலன்

டிசம்பர் மாத ராசிபலன்

மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
பொது: உங்கள் ராசிநாதன் செவ்வாய் அதிபலம் பெற்று 10-ஆமிடத்தில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக உள்ளது. 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறுவது வரவேற்கத்தக்கது. 16-ஆம் தேதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறினாலும் ஓரளவு நலம் புரிவார். 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் அளவோடு நலம் உண்டாகும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். குருவுக்கும் சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: கண், வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். மக்களின் நடத்தையில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

பொருளாதார நிலை: பண வரவு கூடும். சுபச் செலவுகள் அதிகமாகும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைத்துவரும்.

தொழில்: இயந்திரப்பணிகள் லாபம் தரும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண வழிபிறக்கும். எரிபொருட்கள், வெடிப்பொருட்கள், தளவாடங்கள், மின் சாதனங்கள், கட்டடப் பொருட்கள், செந்நிறப்பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும்.

மாதர்களுக்கு: சிறுசிறு பிரச்னைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

மாணவர்களுக்கு: அளவோடு வளர்ச்சி தெரியவரும். விளையாட்டுகளிலும் போட்டிகளிலும் வெற்றி கிட்டும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 26, 27, 28 (காலை).
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 5, 9, 13, 16 (முற்பகல்), 23, 29 (முற்பகல்).



ரிஷபம்: (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் வரை.)
பொது: புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவது விசேடமாகும். 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 16-ஆம் தேதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவது குறை. 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது குறை ஆகும். சூரியன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: மறைமுக நோய் நொடி உபாதைகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

பொருளாதார நிலை: பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

நிலபுலங்கள்: 11-ஆம் தேதி முதல் சொத்துக்களால் வருவாய் கிடைக்கும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும் நிகழும்.

தொழில்: உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். மாத முன்பகுதியில் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: முன்னேற்றமான பாதை தெரியவரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மாணவர்களுக்கு: புத்திசாலித்தனம் பளிச்சிடும். போட்டிகளிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிட்டும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 1, 2, 3, 28, 29, 30.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 4, 5, 9, 13, 16 (முற்பகல்), 23.



மிதுனம்: (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் வரை)
பொது: சூரியன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவது நல்லது. 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 16-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறுவது குறை ஆகும். 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது நல்லது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவது விசேடமாகும். கணபதியையும், சுப்பிரமணியரையும் வழிபடுவது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: மறைமுக நோய் நொடிகள் ஏற்படும். ஜனனேந்திரய உபாதைகள் உண்டாகும். சிலர் ஆபரேஷன் செய்து கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். உடலில் காயம்பட நேரலாம்; கவனம் தேவை. குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். தந்தையால் நலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். உடன்பிற்ந்தவர்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும்.

பொருளாதார நிலை: பண வரவு அதிகரிக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கைக்கும் இடமுண்டு. உழைப்பு வீண்போகாது.

நிலபுலங்கள்: சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

தொழில்: அரசியல், நிர்வாகம், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பொதுப்பணியாளர்களுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

மாதர்களுக்கு: அனுகூலமான போக்கு தென்படும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

மாணவர்களுக்கு: சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். விளையாட்டு, விநோதங்களைத் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 3, 4, 5, 30 (இரவு), 31.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 9, 13, 16 (முற்பகல்), 23, 29 (முற்பகல்).



கடகம்: (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)
பொது: புதன் ஒருவரே அனுகூலமாக உலவுகிறார். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவது குறை ஆகும். 16-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறுவது நல்லது. 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவது நல்லது. நவக்கிரகங்களையும் வழிபடவும். கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.

ஆரோக்கியம், குடும்பம்: மார்பு, நுரையீரல், வலது காது சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடலில் காயம்பட நேரலாம். எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். அந்நியரால் பிரச்னைகள் சூழும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும், உடன்பிறந்தவர்களாலும் சங்கடங்கள் ஏற்படும். மாதப் பின்பகுதியில் தந்தையால் நலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: சாதாரணமாகவே காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. ஏமாற்றமும் இழப்பும் உண்டாகும். அதிர்ஷ்ட இனங்களில் ஈடுபட வேண்டாம்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளைச் சந்திக்க வேண்டிவரும். பராமரிப்புச் செலவுகள் கூடும்.

தொழில்: வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைக்கும். மாதப் பின்பகுதியில் அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைப்படும். விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலைமாற்றமோ உண்டாகும். செய்தொழிலில் அதிக கவனம் தேவை.

மாதர்களுக்கு: பிரச்னைகள் அதிகரிக்கும். எதிரிகள் இருப்பார்கள்; எச்சரிக்கை தேவை.

மாணவர்களுக்கு: முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. மறதியால் அவதி ஏற்படும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 5 (இரவு), 6, 7.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 9, 13, 16 (முற்பகல்), 23, 29 (முற்பகல்).



சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் வரை)

பொது: செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் சாதகமாக உள்ளது. 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவது குறை. 16-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது ஓரளவு சிறப்பாகும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சனி, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது அவசியமாகும்.

ஆரோக்கியம், குடும்பம்: இதயம், முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குரு வலுத்திருப்பதால் மோசமான நிலை என்று ஏதும் ஏற்படாமல் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மக்களால் நலம் உண்டாகும். நண்பர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சங்கடங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவை.

பொருளாதார நிலை: பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும்.

நிலபுலங்கள்: சொத்து சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. பராமரிப்புச் செலவுகள் கூடும்.

தொழில்: உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களை நம்பி முக்கியப் பொறுப்புக்களையும் பணத்தையும் கொடுக்க வேண்டாம். கூட்டாளிகள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லவும் நேரலாம்.

மாதர்களுக்கு: எதிர்ப்புக்கள் கூடும். முன்னேற்றம் தடைப்படும். உடல் நலனில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 8, 9, 10 (காலை).
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 5, 13, 16 (முற்பகல்), 23, 29 (முற்பகல்).



கன்னி: (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் வரை) 
பொது: சூரியன், புதன், சுக்கிரன், சனி, கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவது விசேடமாகும். 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவது குறிப்பிடத்தக்கது. 16-ஆம் தேதி முதல் சூரியன் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது குறை. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. ராகுவுக்கும் குருவுக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: மார்பு, நுரையீரல், வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி காணலாம். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் மாத முன்பகுதியில் உதவுவார்கள். மக்களால் அளவோடு நலம் ஏற்படும்.

பொருளாதார நிலை: பண வரவு கூடும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும்.

நிலபுலங்கள்: 11-ஆம் தேதி முதல் நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புண்டு.

தொழில்: வியாபாரம் பெருகும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பொது நலப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வரவேற்பு அதிகமாகும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். 11-ஆம் தேதி முதல் இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி பெருகும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். மக்களால் அனுகூலம் ஏற்படும்.

மாணவர்களுக்கு: மாத முன்பகுதி சிறப்பாக அமையும். பின்பகுதியில் எச்சரிக்கை தேவை.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 10, 11.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 5, 9, 13, 16 (முற்பகல்), 23, 29 (முற்பகல்).



துலாம்: (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் வரை)
பொது: சுக்கிரன், ராகு ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ஆமிடம் மாறுவது குறை. 16-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவது நல்லது. 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது நல்லது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவது நல்லது. குரு, சனி, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: வயிறு, கால் பாதம், கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி காண அரும்பாடுபட வேண்டிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். மாதப் பின்பகுதியில் தந்தையால் நலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை நம்பி ஏமாற வேண்டாம்.

நிலபுலங்கள்: புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், பயணம் சம்பந்தமான தொழில், ஏற்றுமதி-இறக்குமதி மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களை விற்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு முன்னேற்றம் தடைப்படும். மாதப் பின்பகுதியில் அரசு உதவி கிடைக்கும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும்.

மாதர்களுக்கு: சுகமும் சந்தோஷமும் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மாணவர்களுக்கு: படிப்பில் அதிக கவனம் தேவை. விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும். ஞாபக சக்திகுறையும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 12, 13.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 5, 9, 16 (முற்பகல்), 23, 29 (முற்பகல்).



விருச்சிகம்: (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை வரை)
பொது: செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவது நல்லது. 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 4—ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 16-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவது குறை ஆகும். 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவது நல்லது. ஜன்மச் சனிக்கும் 4-ல் உள்ள கேதுவுக்கும் பிரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: தலை, மார்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப நலம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மக்களால் அனுகூலம் உண்டாகும். தந்தைக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

பொருளாதார நிலை: பண நடமாட்டம் அதிகமாகும். பாக்கிப் பணம் வசூலாகும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். சேமிப்பு உயரும்.

நிலபுலங்கள்: 10-ஆம் தேதிக்குள் சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். அதன்பிறகு சொத்து சம்பந்தமான பிரச்னைகள் சூழும்.

தொழில்: வியாபாரம் பெருகும். கலைத்துறை ஊக்கம் தரும். இயந்திரப்பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். தகவல் தொடர்பு பயன்படும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

மாதர்களுக்கு: மன உற்சாகம் பெருகும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு: வெற்றிகள் குவியும். புத்திசாலித்தனம் பளிச்சிடும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 14, 15, 16 (காலை). 
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 5, 9, 13, 23, 29 (முற்பகல்).



தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் வரை)

பொது: உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவது விசேடமாகும். 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறுவது நல்லது. 16-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது குறை. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவது நல்லது. சனிப் பிரீதி செய்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: தலை, கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கைத்துணைவராலும், தொழில் கூட்டாளிகளாலும் நலம் ஏற்படும். மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும்.

பொருளாதார நிலை: பண வரவு சற்று அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும்.

நிலபுலங்கள்: 11-ஆம் தேதி முதல் சொத்துக்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும்.

தொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஆன்மிகப்பணிகள் ஆக்கம் தரும். அறப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். 11-ஆம் தேதி முதல் இயந்திரப்பணிகள் லாபம் தரும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறையினருக்கு செழிப்புக் கூடும். தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். முக வசீகரம் கூடும்.

மாணவர்களுக்கு: அளவோடு வளர்ச்சி தெரியவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 16, 17, 18.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 5, 9, 13, 23, 26, 27.



மகரம்: (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் வரை)
பொது: சூரியன், குரு, சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது நல்லது. 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 16-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவதும் குறை ஆகும். 19-ஆம், தேதி முதல் புதன் வக்கிர நிலை பெறுவது நல்லது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். துர்கையையும் விநாயகரையும் வழிபடவும்.

ஆரோக்கியம், குடும்பம்: கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புக்கள் அதிகரிக்கும். மக்களாலும், தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் சூழும்.
பொருளாதார நிலை: குரு பலத்தால் பண வரவு சீராக இருந்துவரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும்.

நிலபுலங்கள்: 10-ஆம் தேதிக்குள் சொத்துக்களால் வருவாய் கிடைக்கும். அதன்பிறகு சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்.

தொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், இரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். மாத முன்பகுதியில் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும்.

மாதர்களுக்கு: மன உற்சாகம் கூடும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். வெளிநாடு சென்று படிக்க சிலருக்கு வாய்ப்பு உருவாகும். கல்லூரிகளில் மேற்படிப்புப் படிப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 18 (பிற்பகல்), 19, 20.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 5, 9, 13, 16 (முற்பகல்), 23, 26.



கும்பம்: (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் வரை)
பொது: சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவது நல்லது. 11-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு மாறுவது குறை. 16-ஆம் தேதி முதல் சூரியன் 11-ஆமிடம் மாறுவது விசேடமாகும். 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது நல்லது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவது நல்லது. செவ்வாய், குரு, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும்.

ஆரோக்கியம், குடும்பம்: தலை, கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடலில் காயம் பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. குடும்ப நலம் சீராக இருந்துவரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீர்பெறும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவை. 

பொருளாதார நிலை: பண வரவு கூடும். என்றாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. ஸ்பெகுலேஷன் துறைகள் மாத முன்பகுதியில் லாபம் தரும்.

நிலபுலங்கள்: சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். பழைய சொத்துக்களை விற்க வேண்டிய நிலை சிலருக்கு உண்டாகும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

தொழில்: அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முன்னேற்றமான பாதை புலப்படும். நிர்வாகிகள் வளர்ச்சி காண்பார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். தொழிலாளர்களது நிலை உயரும். இயந்திரங்கள், எரிபொருட்கள், ஆயுதங்கள், மின்சாதனங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்புத் தேவை.

மாதர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும்.

மாணவர்களுக்கு: படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். விளையாட்டு, விநோதங்களைத் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 21, 22, 23 (காலை).
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 5, 9, 13, 16 (முற்பகல்), 26, 29 (முற்பகல்).



மீனம்: (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை).
பொது: செவ்வாய், புதன், குரு, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 2-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவது விசேடமாகும். 11-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 16-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவது நல்லது. 19-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவது ஓரளவு சிறப்பாகும். சனிக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். 2-ஆம் தேதி முதல் கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். மக்களால் நலம் ஏற்படும். 11-ஆம் தேதி முதல் உடன்பிறந்தவர்களால் தொல்லைகள் சூழும். 16-ஆம் தேதி முதல் தந்தை நலம் ஓரளவு சீராகும். தொழில் கூட்டாளிகள் உதவுவார்கள்.

பொருளாதார நிலை: பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

நிலபுலங்கள்: 10-ஆம் தேதிக்குள் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும் நிகழும். அதன்பிறகு சொத்து சம்பந்தமான பிரச்னைகள் சூழும். கவனம் தேவை.

தொழில்: அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண மாத முன்பகுதி சிறப்பாக அமையும். மாதப் பின்பகுதியில் அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள் ஆகியோர் 11-ஆம் தேதி முதல் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். பிரச்னைகள் தீர வழிபிறக்கும்.

மாணவர்களுக்கு: மாத முன்பகுதி சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 23, 24, 25.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 1, 4, 5, 9, 13, 16 (முற்பகல்), 26, 29 (முற்பகல்).

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...