News
Loading...

பேமென்ட் பேங்க்! பணமில்லா பரிவர்த்தனைக்கு இன்னொரு வடிவம்

பேமென்ட் பேங்க்! பணமில்லா பரிவர்த்தனைக்கு இன்னொரு வடிவம்

ருப்புப் பணம், கள்ளப் பணம் ஆகியவற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கையே Demonetization என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் மக்களை வங்கிப் பரிவர்த்தனைகளுக்குள் கொண்டு வருவதே முதன்மையான நோக்கம். மற்ற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் நம்மிடம் பணப் பரிவர்த்தனை அதிகமாக உள்ளது. இந்தியாவில் மக்கள்தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையில் வங்கிகள் அதிக அளவில் இல்லை. 

எளியவர்களும் சுலபமாக வங்கி சேவைகளைப் பயன்படுத்த வசதியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 நிறுவனங்களுக்கு ‘பேமென்ட் பேங்க்’ எனப்படும் வங்கிகளைத் துவக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ரிலையன்ஸ், ஆதித்ய பிர்லா, ஏர்டெல், வோடஃபோன், டெக் மஹிந்த்ரா உள்ளிட்ட இந்த நிறுவனங்கள் ‘இப்போதுதான் சரியான தருணம்’ என பிஸியாக களத்தில் இறங்கியுள்ளன.

வங்கிக் கணக்கு துவங்க வேண்டுமானால் ஏராளமான KYC (Know Your Customer) நெறிமுறைகள் வாயிலாக நிறைய ஆவணங்களை சமர்ப்பிக்க நேரிடுகிறது. மினிமம் பேலன்ஸ், வேறு கட்டணங்கள் என சில அசெளகரியங்கள். அதனை ஈடு செய்யவே டிஜிட்டல் வாலட்கள் உருவெடுத்தன. (டிஜிட்டல் வாலட் பற்றிய கட்டுரை சென்ற ‘குங்குமம்’ இதழில் வெளியாகியுள்ளது!) 

ஏர்டெல் நிறுவனத்தின் டிஜிட்டல் வாலட்டான ‘ஏர்டெல் மணி’ 2012 முதல் மார்க்கெட்டில் உள்ளது. PayTM இந்த டிஜிட்டல் வாலட் சந்தையில் மார்க்கெட் லீடர். PayUMoney, State Bank Buddy, ICICI Pockets என ஏராளமான வாலட்கள் உலவுகின்றன. செலவு செய்யாமல் வைத்திருந்தால் இவற்றில் பணம் அப்படியே இருக்கும். பத்து வருடம் டிஜிட்டல் வாலட்டில் பணம் வைத்திருந்தாலும் அதற்கு நயா பைசா வட்டி கிடையாது. 

இந்த டிஜிட்டல் வாலட்டின் மேம்பட்ட வடிவமே ‘பேமென்ட் பேங்க்’ ஆகும். இது முழுமையான வங்கி வடிவம் கிடையாது. ஆனால் வங்கி மாதிரியே செயல்படும். உதாரணத்திற்கு, நாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போம். அதில் உள்ள பேலன்ஸ் தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுப்போம். அதனை ஆன்லைன் டிரான்ஸ்பர் செய்வோம். அதன் மூலம் டிக்கெட் புக் செய்வோம். மின் கட்டணம் அல்லது போன் பில் செலுத்துவோம்.  

அந்தக் கணக்கிலிருந்து ஏ.டி.எம்.மில் பணம் எடுப்போம். அது போக, வங்கியானது நம் போன்ற வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையை கடனாக மற்றவர்களுக்குக் கொடுக்கும். அதற்கு வட்டி வசூலித்து லாபம் ஈட்டும். ஒரு வங்கிக் கணக்கில் நாம் இத்தனை விஷயங்கள் செய்தாலும், பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் தமது கிளைகளுக்கு வருவதை வங்கிகள் விரும்புவதில்லை. இயன்றவரை அனைத்தையும் மின்னணுப் பரிவர்த்தனைகளாக மேற்கொள்ளவே நம்மை ஊக்குவிக்கிறார்கள். நாட்டில் உள்ள வங்கிகளின் எண்ணிக்கையும், அவற்றின் கிளைகளும் எல்லா மக்களுக்கும் சேவை செய்யப் போதுமானதாக இல்லை. 

இதனை நிவர்த்தி செய்யவே பேமென்ட் பேங்க் எனப்படும் வங்கிகள் வருகின்றன. இந்த வங்கிகளில் நாம் ஒரு லட்ச ரூபாய் வரை பணம் செலுத்தலாம். தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம். மொபைல் பில் - எலெக்ட்ரிசிட்டி பில் போன்றவை கட்டுவது, பஸ் - ரயில் டிக்கெட்டுகள் வாங்குவது என்பதான தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். நமது கணக்கில் உள்ள பணத்திற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட வட்டியைத் தந்தாக வேண்டும். வட்டி தருவதாக ஒப்புக் கொள்ளவில்லையென்றால் தர வேண்டிய கட்டாயம் இல்லை. 

இந்த பேமென்ட் வங்கிகள் டெபிட் கார்டுகள் வழங்கும் அதிகாரம் பெற்றவை. (டிஜிட்டல் வாலட்களுக்கு இது சாத்தியமில்லை) ஆனால் இந்த பேமென்ட் வங்கிகள் நமது பணத்தை மற்றவர்களுக்குக் கடன் தர இயலாது. மற்ற வங்கிகளைப் போல கிரெடிட் கார்ட் எல்லாம் வழங்க இயலாது. அவை அரசின் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஏர்டெல் நிறுவனம் தனது பேமென்ட் வங்கியை சமீபத்தில் துவங்கியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளோட்டம் விட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைக்கு 7.25% வட்டி தருவதாக அறிவித்துள்ளது. வழக்கமான வங்கிகள்கூட 4%-3% என வட்டி விகிதத்தைக் குறைத்து வரும் சூழலில் இது கவனிக்க வேண்டிய செய்தி. அறிவிப்பு வெளியான இரண்டே நாட்களில் பத்தாயிரத்திற்கும் மேலான கணக்குகளைத் துவங்கியுள்ளது இந்நிறுவனம். பேமென்ட் பேங்க் துவங்குவதற்கான ஒப்புதலை சென்ற ஆண்டே பெற்றிருந்த பல நிறுவனங்கள் இன்னும் சேவையைத் துவக்கவில்லை. Demonetizationஐத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் களத்தில் முதலாவதாகக் குதித்துள்ளது.

பொதுவாக வாடிக்கையாளரைப் பற்றிய தகவல்கள் (KYC) அனைத்தையும் சேகரித்த பிறகே வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்க வேண்டும். வங்கிக் கணக்குகள் என்றில்லை, மொபைல் போன் சிம் கார்ட் வாங்குவதற்கே அவையெல்லாம் தேவை. ஆனால் ஆதார் அட்டை வந்த பிறகு இது இலகுவாகியிருக்கிறது. உதாரணத்திற்கு ஏர்டெல் ஷோரூம் ஒன்றில் உங்கள் கைவிரலை வைத்தால், கைரேகையை ஸ்கேன் செய்து உங்கள் ஆதார் விவரங்களை எடுத்து விடுவார்கள். KYC சம்பிரதாயங்களுக்கு இதுவே போதுமானது.  

ஏர்டெல் பேமென்ட் வங்கியில் வழக்கம் போல் பில் பேமென்ட், ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் எல்லாம் செய்யலாம். ஆனால் அவர்கள் டெபிட் கார்ட் வழங்கப் போவதில்லை. கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டுமானால் ஏர்டெல் ஷோரூமிற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். வங்கிகளை எளிதில் அணுக முடியாத ஆட்களுக்கு இது உண்மையிலேயே நல்ல செய்தி. ஏற்கனவே நாடெங்கும் விரிந்திருக்கும் ஏர்டெல் கட்டமைப்பு இதற்கு வலுவூட்டும். 

50 ரூபாய், 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது போல, பேமென்ட் பேங்க் சேவையை அணுகும் சாத்தியம் உள்ளது. தற்போது டெபிட் கார்ட் வசதி இல்லையென்றாலும் வாடிக்கையாளர் தேவை (அல்லது போட்டி நிறுவனங்களின் போக்கு) கருதி எதிர்காலத்தில் அதற்கு ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. பேமென்ட் பேங்க் குறித்து பொதுமக்கள் அச்சப்பட ஏதுமில்லை. 

ரிசர்வ் வங்கியால் நெறிப்படுத்தப்பட்டு முறையான வங்கி நடவடிக்கையில் அவை ஈடுபடவுள்ளன. ஃபினான்ஷியல் மார்க்கெட்டில் இதுவுமொரு வடிவம். நம்பகமான வடிவம் என்றே கூறலாம். PayTM நிறுவனமும் கூடிய விரைவில் பேமென்ட் பேங்க் தொடங்கப் போகிறது. மொபைல் உலகில் ஜியோ சிம் கார்டுகள் மூலம் சலனங்களை உண்டாக்கிய ரிலையன்ஸ் நிறுவனமும் 2017ல் பேமென்ட் பேங்க் ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். 

ஆனால் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளின்படி மட்டுமே (லோன் கொடுக்காமல், கிரெடிட் கார்ட் கொடுக்காமல்) இயங்கினால், பேமென்ட் வங்கிகள் லாபகரமாக இயங்க முடியுமா? அவற்றால் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியுமா? ஈர்த்தாலும் தக்க வைக்க இயலுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. டிஜிட்டல் வாலட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு பேமென்ட் வங்கிகளுக்குக் கிடைக்குமா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும், இரண்டு நாட்களில் பத்தாயிரத்துக்கும் மேலான கணக்குகளைத் துவங்கியிருப்பது கவனிக்க வேண்டியிருக்கிறது. 
வாடிக்கையாளர்களாகிய நமக்கு இது இன்னுமொரு மாற்று வடிவம். வாய்ப்புள்ளோர் பயன்படுத்தலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.