News
Loading...

தலைமை செயலாளர் ராமமோகனராவ், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் எப்படி சிக்கினார்

தலைமை செயலாளர் ராமமோகனராவ், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் எப்படி சிக்கினார்

லைமை செயலாளர் ராமமோகனராவ், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் எப்படி சிக்கினார் என்ற புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

இது பற்றிய முழு விபரம் வருமாறு:-

மணல் குவாரி நடத்தி பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்த சேகர்ரெட்டியை சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்த போது பிரமிக்கத்தக்க வகையில் நிறைய சொத்து ஆவணங்கள் கிடைத்தன. அப்போதே அதிகாரிகளுக்கு, சேகர் ரெட்டி பல வி.வி.ஐ.பி.க்களுக்கு பினாமியாக இருப்பார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சேகர்ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர். அந்த தீவிர விசாரணையின் போது தமிழ்நாட்டில் எந்தெந்த முக்கிய புள்ளிகளுக்கு தாம் உதவியாகவும், பினாமியாகவும் இருக்கும் தகவலை தெரிவித்தார்.

இதனால் ராமமோகன ராவுக்கும், சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பது வருமான வரித்துறையினருக்கும் தெரிய வந்தது.

சேகர்ரெட்டி வாய் வழியாக சொன்னாலும் அதற்கான ஆதாரம் வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். ஆதாரம் இருந்தால்தான் ராமமோகன ராவை நெருங்க முடியும், அவர் வீடுகளில் சோதனை நடத்த முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ராமமோகனராவ் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்களைத் தேடி அலைந்தனர். பல்வேறு கோணங்களில், பல்வேறு துறைகளில் இதற்காக ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சேகர்ரெட்டி நடத்தி வரும் மணல் குவாரிகளில் தலைமை செயலாளர் ராமமோகன ராவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் வி‌ஷயத்தில் சலுகைகள் காட்டப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

இது பற்றி மணல் குவாரிகளுக்கு உரிய அனுமதி வழங்கும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது ராமமோகன ராவுக்கும் சேகர்ரெட்டிக்கும் உள்ள தொழில் ரீதியான நட்பை சுற்றுச்சூழல் ஆணைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள்.

அதற்கான ஆவணங்களையும் அவர்கள் வருமான வரித்துறையினரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

இதற்கிடையே வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய மற்றொரு விசாரணையில் ராமமோகனராவும், சேகர்ரெட்டியும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த தினத்தன்று அவர்கள் போனில் பேசியுள்ளனர்.

அந்த போன் உரையாடலை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ‘‘பல நூறு கோடி ரூபாயை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது?’’ என்று ராம மோகனராவும், சேகர்ரெட்டியும் விவாதித்து இருப்பது தெரிந்தது.

ஜெயலலிதா மரணம் அடைந்து பரபரப்பான சூழ்நிலை உருவான நேரத்தில் தலைமை செயலாளர் பணத்தை பதுக்குவது பற்றி பேசி இருப்பதை கேட்டதும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் அடைந்த தினத்தன்று இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, சேகர்ரெட்டியிடம் பல தடவை ராமமோகனராவ் பேசி இருப்பது எங்களுக்கு தெரிந்தது. அதை ஆய்வு செய்த போதுதான் அவர்களது முறைகேடு உறுதியானது.

தொடர்ந்து நாங்கள் சேகர் ரெட்டியின் போனை கண்காணித்தோம். அதன் மூலம் ராமமோகனராவ் தொடர்பு மிக எளிதாக எங்களுக்கு தெரிந்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

ராமமோகனராவ் வீட்டில் எப்போது சோதனை நடத்துவது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டபடி இருந்தனர். நேற்று அவர்கள் அதிரடியை அமல்படுத்தினார்கள்.

ராமமோகனராவ் வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற போது அங்கிருந்த காவலாளியும், சில தலைமை செயலக ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் சோதனைக்கான உத்தரவை காட்டியதும் அனைவரும் ‘‘கப்-சிப்’’ ஆகிவிட்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...