News
Loading...

எடப்பாடியின் நிழல்... கரன்சி பதுக்கல்! - ஐ.டி. பாய்ச்சல்

எடப்பாடியின் நிழல்... கரன்சி பதுக்கல்! - ஐ.டி. பாய்ச்சல்

லைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்திய அதே நாளில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் அதிரடி. அந்த வங்கியின் தலைவர் இளங்கோவன் அலுவலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டிருப்பதுதான் சேலத்தின் ஹாட் டாபிக். 

சென்னையில் இருந்து வந்த 8 பேர், சேலம் வருமானவரித் துறை உதவி இயக்குநர் சுரேஷ் தலைமையிலான 10 அதிகாரிகள் என மொத்தம் 18 பேர் சோதனை போட்டு 3 கோணிப் பைகள் நிறைய முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றார்கள்.

இளங்கோவன் யார்?

சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்குத் தலைவராக இருப்பவர் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் இளங்கோவன். 8-ம் வகுப்பு வரை படித்த இவர் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள நிவேதா எலெக்ட்ரிகல்ஸ் கடையின் உரிமையாளரும் தி.மு.க பிரமுகருமான வரதராசனுக்கு உதவியாக இருந்தார். அந்தத் தருணத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் படித்துக்கொண்டிருந்த பானுமதியை காதல் திருமணம் செய்தார்.

எலெக்ட்ரிகல்ஸ் கடைக்கு வந்து சென்றுகொண்டிருந்த பெத்தநாயக்கன்பாளையம் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அன்பரசனிடமும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதோடு அ.தி.மு.க-விலும் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு உமையாள்புரம் யூனியன் கவுன்சிலர் ஆனார். சேலம் மாவட்டச் செயலாளராக இருந்த மஞ்சினி முருகேசன் உதவியுடன் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பதவியைப் பெற்றார்.

மஞ்சினி முருகேசன் பதவி பறிக்கப்பட்டு செல்வத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது. கட்சிக்காரர்கள் அனைவரும் மாவட்டச் செயலாளர் பக்கம் இருந்தனர். ஆனால், இளங்கோவன் மட்டும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தார். சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியபோது, இளங்கோவனின் கையும் ஓங்கியது.

எடப்பாடி பழனிசாமி மூலமாக மாநில கூட்டுறவு வங்கி மற்றும் சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்டார். சேலத்தின் நிழல் அமைச்சராக இளங்கோவன் வலம் வந்தார். அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சார்பாக அதிகாரிகளையும் கட்சிக்காரர்களையும் இளங்கோவன்தான் சந்திப்பார்.

எடப்பாடியின் நிழல்... கரன்சி பதுக்கல்! - ஐ.டி. பாய்ச்சல்

எடப்பாடி பழனிசாமிக்கு குறியா?

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மிகப் பெரியது ‘சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி’. இந்த வங்கிக்கு சேலம், நாமக்கல் என 2 மாவட்டங்களிலும் மொத்தம் 64 கிளைகள் உள்ளன. 3,500 கோடி ரூபாய் டெபாசிட் தொகை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் சுமார் 5 கோடி ரூபாய் டெபாசிட் செய்கின்றனர். மத்திய அரசின் ‘செல்லாக்காசு’ அறிவிப்புக்குப் பிறகு நவம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நான்கு நாட்களில் மட்டும் 162.37 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நபார்ட் வங்கி மூலமாக 79.25 கோடிக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கின்றன. ‘இந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் கடனாகக் கொடுத்திருக்கிறார்களா என்று ஆய்வு செய்யத்தான் இந்த ரெய்டு’ என்று வங்கி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஆனால், இது உண்மையல்ல என்றும், அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நெருங்குவதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் பேச்சு அலையடிக்கிறது.

தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், எடப்பாடி பழனிசாமி, சேகர் ரெட்டி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள். இவர்களை எடப்பாடி பழனிசாமி சார்பாக நேரடியாக சந்திக்கக் கூடிய நபர் இளங்கோவன். தற்போது சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டில் கைப்பற்றப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகள், நபார்ட் வங்கி வழங்கிய புதிய நோட்டுகள் எனக் கண்டறிந்திருக்கிறார்கள்.   

அதே போல, கடந்த மாதம் கர்நாடக அரசு அதிகாரிகள் சிக்கராயப்பா, ஜெயசந்திரா வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டில் 5.4 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர். இவை அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ராமலிங்கம் மூலமாக மாற்றப்பட்டன என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கர்நாடக வருமானவரித் துறை அதிகாரிகள் ஈரோட்டில் ராமலிங்கத்தின் வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடத்தியதோடு பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றார்கள். ராமலிங்கத்தின் மூத்த மகன் சந்திரகாந்தும் கைதுசெய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாம். 

தன் வீட்டில் ரெய்டு நடத்தப்படலாம் என்பதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பினாமிகளை உஷார்படுத்திவிட்டாராம். இனிமேல் ரெய்டு நடந்தாலும் பெரிய அளவில் அவர்களிடம் இருந்து எதுவும் அகப்படாது என்கிறார்கள்.

எடப்பாடியின் நிழல்... கரன்சி பதுக்கல்! - ஐ.டி. பாய்ச்சல்

இதுபற்றி சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொதுச் செயலாளர் ரமேஷ், ‘‘எங்க வங்கியில் நடைபெறும் ஆய்வு வழக்கமாக நடைபெறக் கூடியது. நபார்டு வங்கி கொடுத்த 70 கோடி ரூபாய் பயிர்க் கடனுக்கும், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே கொடுத்திருக்கிறோம். பழைய நோட்டுகளை மாற்றுபவர்களுக்காகப் புதிய நோட்டுகளை நாங்கள் தரவில்லை. இந்த ரெய்டுக்கும் வங்கித் தலைவருக்கும் தொடர்பு இல்லை. வங்கிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் பல தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்’’ என்றார்.

இளங்கோவனிடம் பேசியபோது, ‘‘இந்த ரெய்டு சேலத்தில் மட்டுமல்ல, இந்தியா  முழுவதும் நடைபெற்று வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு நபார்ட் வங்கியில் இருந்தும் ஆய்வு செய்துவிட்டுப் போனார்கள். இதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மாவட்டச் செயலாளராக அமைச்சர் இருக்கிறார். நான் ஒரு பேரவைச் செயலாளராக இருக்கிறேன். மற்றபடி என்னை அமைச்சரின் பினாமி என்று சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மிக நேர்மையான முறையில் செயல்பட்டு வருகின்றன’’ என்றார்.

அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச முயன்றபோது அவருடைய உதவியாளர் மணி, ‘‘அமைச்சர் மீட்டிங்கில் உள்ளார். தற்போது அவரிடம் பேச முடியாது’’ என்றார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்