News
Loading...

கொல்கத்தா தொழில் அதிபர் சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

கொல்கத்தா தொழில் அதிபர் சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த தொழில் அதிபரும் காண்டிராக்டருமான சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத ரூ.131 கோடி பணம், தங்கம் பறிமுதல் செய்தனர்.

இவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மணல் குவாரிகள் நடத்தி வந்தார். அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தார். இவரிடம் பிடிபட்ட பணத்தில் ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும்.

இந்த நிலையில் சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

ராம மோகனராவ் வீட்டில் சோதனை நடந்த மறுநாள் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் பரம் எம்.லோதா கைது செய்யப்பட்டார். இவர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘பியர்லெஸ்’ நிதி நிறுவனத்தின் இணை உரிமையாளர் ஆவார். கொல்கத்தா தவிர டெல்லியில் 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சுரங்க தொழிலிலும் பல்வேறு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

டெல்லியில் ரோகித்தாண்டன் என்ற வக்கீலுக்கு சொந்தமான சட்ட நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகள் சிக்கியது. இந்தப் பணத்தை கொல்கத்தா தொழில் அதிபர் பரஸ் எம்.லோதா மாற்றிக் கொடுத்தது தெரிய வந்தது.

அதன்அடிப்படையில் விசாரித்த போது பரஸ் எம்.லோதாவுக்கும் சென்னை தொழில் அதிபர் சேகர்ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதும், லோதா தான் சேகர்ரெட்டிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தவர் என்றும் தெரிய வந்தது. சேகர்ரெட்டியும் விசாரணையின் போது லோதாவின் பெயரை குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து லோதாவை கைது செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டனர்.

லோதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. அப்போது மும்பை விமான நிலையத்துக்கு வந்த லோதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அங்கிருந்து அவர் டெல்லி கொண்டு செல்லப்பட்டார்.

விசாரணைக்குப் பின்பு லோதா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து லோதாவிடம் விசாரணை நடந்து வருகிறது.

லோதாவிடம் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் அவருக்கு தமிழ்நாட்டில் பினாமிகள் பலர் இருப்பது தெரிய வந்தது. அவர்களுடன் லோதா அடிக்கடி தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதே போல் தமிழக அரசியல் தலைவர்கள் சிலருக்கும் லோதாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுடன் பணபரிமாற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் கரூர் தொழில் அதிபர் அன்பு நாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது லோதாவின் பெயர் அடிபட்டது. அன்பு நாதனிடம் இருந்து ரூ.4.87 கோடி ரொக்கப்பணம், லேப்டாப், செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. அந்த லேப்டாப்பில் முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. அவர்கள் அன்புநாதன், லோதா மூலம் கோடிக்கணக்கான பணத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்து இருப்பதாக கூறப்பட்டது. லோதா பல முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்றதும் தெரிய வந்துள்ளது.

எனவே நீண்ட காலமாகவே அன்புநாதன், லோதா, சேகர்ரெட்டி தொடர்பு இருந்து வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் லோதாவிடம் டெல்லியில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...