News
Loading...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

‘பே டிஎம்’, ‘ரிலையன்ஸ்’ போன்ற தனியார் நிறுவன விளம்பரங்களில் பிரதமர் மோடியின் போட்டோக்களை பயன்படுத்தியதற்கு, நீங்களே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவில் மிகப்பெரும் தொகையை அபராதமா போடலாம். சொன்னா ஷாக்காயிடுவீங்க, அந்த அதிகபட்ச தொகை,  ஐந்நூறு ரூபாய். ஏற்கனவே நம்ம பிரதமர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பரபர மாடல், இதுல அவரை விளம்பர மாடலாவும் யூஸ் பண்ணிக்க ஆரம்பிச்சா என்னவென்ன ஆகும்? 

* கையேந்தி பவன்களில் கடன் சொல்லி சாப்பிடப் போறவங்களையும், ‘மொய் குறைஞ்சிடுச்சு’னு முகம் சுளிக்கிற மாப்பிள்ளை வீட்டாரை சாப்பிடக் கூப்பிடுற மாதிரி, கைகூப்பி மோடியே வரவேற்கிற மாதிரி ஆளுயர கட்அவுட் வைக்கலாம்.

* ‘சரோஜா தேவி ஜாக்கெட், சவுகார் ஜானகி ஜாக்கெட்’னு இன்னமும் சிக்ஸ்டீஸ் சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிறு, குறு நகர டெய்லர்கள், தங்கள் கடை பெயர்ப் பலகைகளில் வித வித குர்தாக்களில் மோடி இருக்கும் போட்டோக்களைப் போட்டு, கோட்டு சூட்டு மாடலாய் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். 

* இந்த துணிக்கடைங்க எல்லாம், அம்பது லட்சம் கொடுத்து சினிமா நடிகர் நடிகைங்கள ஆடவிடுறத விட்டுட்டு அம்பது ரூவாக்கு மோடியோட மாஸ்க் வாங்கி, ஐயாயிரத்துக்கு ஆட விட்டுட்டு, தேவைன்னா ஐநூறு ரூபாய் அபராதம் கட்டிக்கலாம். 

* ‘பிரதமர் அறுவது தாண்டியும் ஆரோக்கியமா இருப்பதற்கு காரணம், எங்களோட குழம்பு மசாலா... ரச மசாலா’ன்னு மசாலா கம்பெனிங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம். 

* உள்நாட்டு, வெளிநாட்டு டூர் ஆபரேட்டர்ஸ்க்கு, மழை பொழியும் மாலை நேரத்துல மணக்கும் சமோசா சுடச்சுட கிடைச்ச மாதிரி சந்தோஷப்படலாம். ஃப்ளைட் ஏறும்போது டாட்டா காட்டுறதுல இருந்து ஆப்ரிக்கால டிரம்ஸ் அடிச்சும் ஜப்பான்ல பியானோ வாசிச்சும் பிரதமர் சேட்டை காட்டுற வரைக்கும் எந்த போட்டோவை வேணா வச்சு விளம்பரம் போடலாம். 

* எல்லோரையும் விட பாக்கியசாலிகள் போட்டோ ஸ்டுடியோக்காரர்கள்தான். ‘போஸ் கொடுத்ததெல்லாம் கொடுத்தார், அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தருக்கா கொடுத்தார், அவர் ஊருக்காக கொடுத்தார்’னு பாடுற அளவுக்கு ஊருல இருக்கிற ஒவ்வொரு போட்டோ ஸ்டுடியோவும் ஒவ்வொரு தனித்தனி போட்டோ பயன்படுத்திக்கிற அளவுக்கு அத்தனை போஸ்களும் கொடுத்திருக்கிறார் நம்ம பிரதமர். அதை பாஸ்போர்ட் சைஸ் முதல் பேனர் சைஸ் வரை பிரின்ட் அடித்து பயன்படுத்திக்கொள்ளலாம். 

இந்த ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதுன்னு சொன்னதுக்குக் காரணம் ‘தீவிரவாத ஒழிப்பு, கள்ளப்பணத்தை அழிக்க, கள்ளநோட்டுகளை முடக்க, கேஷ்லெஸ் எகானமி’னு மத்திய அரசு தினம் தினம் புது காரணத்தோடு என்ன சொல்றதுன்னே தெரியாம குனிஞ்சுக்கிட்டு வருது. 

ஆனா இந்த திடீர் தேச பக்தர்களோ, ‘‘ஜனவரி ஒண்ணாம் தேதில இருந்தே இந்தியா வல்லரசாகிடும், விலைவாசி குறைஞ்சிடும், வாழ்வாதாரம் விளங்கிடும்’னு ஆரம்பிச்சுட்டானுங்க.  ‘ஜனவரி ஒண்ணுல இருந்து பெட்ரோல் விலை லிட்டர் முப்பத்தஞ்சு ரூவாய்க்கு வந்திடும்; அப்ப அடிச்சுக்கலாம். இடையில பெட்ரோல் அடிக்கக் கூடாதுன்னு இப்பவே டேங்க்கை ஃபில் பண்ணிட்டேன்’னு சொல்றான் ஒருத்தன். 

‘ஜனவரி ஒண்ணுல இருந்து பருப்பு விலை கிலோ முப்பது ரூபாய்க்கு வந்திடும்’னு இந்த மாசம் முழுக்க சாம்பார் வைக்காம புளிக் குழம்பா சாப்பிடுறான் ஒருத்தன். இன்னொரு அங்கிள், ‘ஜனவரி ஒண்ணுல இருந்து சமையல் கேஸ் விலை குறையும்’னு, இப்போ பொண்டாட்டி புள்ளைங்கள சண்டை போட்டு மாமியார் வீட்டுக்குத் துரத்தி காசை மிச்சம் பண்றாரு. 

இன்னொருத்தன் ‘ஜனவரி ஒண்ணாம் தேதில இருந்து எல்லோருக்கும் இலவச மின்சாரம்’னு டிவி வாங்குற திட்டத்தை ஒரு மாசம் தள்ளிப் போட்டிருக்கான். இதெல்லாம் பரவாயில்ல, எங்கூர்ல ஒருத்தன் ‘எப்படியும் மோடிஜி தேர்தல் வாக்குறுதில சொன்ன மாதிரி ஒவ்வொரு இந்தியர்கள் அக்கவுன்ட்டுலயும் பதினைஞ்சு லட்சம் போடுவார்’னு இப்பவே அட்வான்ஸ் டேக்ஸ் கட்டி வச்சிருக்கானாம்.

நானும் பார்க்கிறேன், இந்த ‘நடா’ புயல் வந்துட்டுப் போனதுல இருந்து மொத்த தமிழ்நாடும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்ச பால் குண்டாவாட்டம் ஒருவித மதமதப்பு மிகுந்த சிலுசிலுப்போட இருக்கு. கைலாசத்து சிவன் போலோ மிட்டாயை சாப்பிட்டுட்டு தமிழ்நாட்டு மேல ஊதி விளையாடுறாரான்னு தெரில... ஊர்கள் எல்லாமே ஊறுன துணியாட்டம் ஈரமா இருக்கு. கழுவிவிட்ட கிச்சன் மாதிரி கூலிங்கா க்ளைமேட் இப்படியே மசமசன்னு இருந்தா, என்னென்ன நடக்கும்? 

* ஏ.டி.எம் வாசல்ல ரெண்டாயிரம் பணமெடுக்க ரெண்டு நாளா நிற்கிறவங்க கொஞ்சம் நிம்மதியா நின்னு பணத்தை எடுக்கலாம். 
* இன்னமும் ஒரு பத்து நாளுக்கு சன் ஸ்க்ரீன் லோஷன்களின் விற்பனை குறையலாம். 
* டீக்கடைகளில் மொளகா பஜ்ஜிகளின் விற்பனை தெறிக்கலாம்.
* தெருக்களில் குளிருக்கு ஸ்வெட்டர்களும் ஜெர்கின்களும் அதிகம் விற்கப்படலாம். 
* அம்மாவுக்கு சூப்பு வைக்கத் தெரியுமென வீட்டில் பலருக்கும் முதன்முதலாய் தெரிய வரலாம். 
* டாஸ்மாக்கில் பீர் விற்பனை குறைந்து குவாட்டர் விற்பனை எகிறலாம். 
* மெடிக்கல் ஷாப்களில் ஜலதோஷ மாத்திரைகள் விற்பனை அதிகரிக்கலாம். 
* இதைவிட தொலைநோக்குப் பார்வையோடு பார்த்தால், அடுத்த ஆகஸ்ட், செப்டம்பர்ல மகப்பேறு மருத்துவமனைகள் ரொம்ப பிசியாகலாம். 
* இன்னமும் தொலைநோக்கோடு பார்த்தால், அடுத்து ரெண்டு வருடம் கழித்து பெரிய பெரிய ஸ்கூல்களில் ப்ரீகேஜி சீட்டுக்கு க்யூவில் நிற்பவர்களின் எண்ணிக்கை இன்னமும் கொஞ்சம் கூடலாம்.                         

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.