News
Loading...

2016-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதர்: டைம் கருத்துக்கணிப்பில் மோடி வெற்றி

2016-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதர்: 'டைம்' ஆன்லைன் கருத்துக்கணிப்பில் மோடி வெற்றி

'டைம்' பத்திரிகை நடத்தும், 2016-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதர் யார் என்பது குறித்த ஆன்லைன் கருத்துக்கணிப்பில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்களை பின்னுக்குத் தள்ளி பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் உலக பிரசித்தி பெற்ற ஆங்கில வார இதழான 'டைம்' சார்பில் ஒவ்வோர் ஆண்டும், உலகளாவிய நிகழ்வுகளிலும் செய்திகளிலும் அதிகம் செல்வாக்கு செலுத்திய நபரைத் தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம்.

'பர்ஸன் ஆஃப் தி இயர்' (Person of the year) என்ற தலைப்பில் 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்வு செய்ய முதல்கட்டமாக வாசகர்கள் மத்தியில் இணைய வழியாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், புரட்சியாளர்கள், விஞ்ஞானிகள் என பலதரப்பட்ட ஆளுமைகளில், 2016-ம் ஆண்டுக்கு சிறப்பாக வடிவம் கொடுத்த, அதிகபட்ச பங்களிப்பு வழங்கிய நபரைத் தேர்வு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

டிசம்பர் 4-ம் தேதி இரவோடு முடிவடைந்த ஆன்லைன் கருத்துக்கணிப்பில், இந்தியப் பிரதமர் மோடி 18% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரின் போட்டியாளர்களான அமெரிக்க அதிபர் ஒபாமா, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் ஆகியோர் 7% வாக்குகளே பெற்றுள்ளனர்.

இந்த வருடத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் (2%), அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் (4%) ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார் மோடி.

இப்பட்டியலில், எப்பிஐ தலைவர் ஜேம்ஸ் கோமி, ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீனத் தலைவர் ஸி ஜின்பிங் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

அக்டோபர் 16

'டைம்' பத்திரிகை வாக்கெடுப்பில், போட்டியாளர்கள் 2016-ம் ஆண்டில் எதற்காக அதிகம் பேசப்பட்டார்கள் என்பதை ஆராயும்.

இதில் பிரதமர் மோடி அக்டோபர் 16ம் தேதியன்று பேசியது அதிகம் பேசப்பட்டது. கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கே அவர் பாகிஸ்தானை, தீவிரவாதத்தின் தாயகம் என்று கூறியது அதிக அளவில் பேசப்பட்டது என்று 'டைம்' பத்திரிகை கூறியுள்ளது.

இரண்டாம் முறை வெற்றி

2014-ம் ஆண்டிலும் டைம் நடத்திய இதே கருத்துக்கணிப்பில் அந்தாண்டுக்கான மனிதராக மோடி தேர்வு செய்யப்பட்டார். எனினும், 2015-ல் முதல் 8 பேர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெறவில்லை.

2015-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதர் என்ற பெருமையை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் பெற்றிருந்தார்.

'டைம்' பத்திரிகை டிசம்பர் 7-ம் தேதியன்று, 2016-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதரைத் தேர்ந்தெடுக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்