News
Loading...

பினாமி சொத்துக்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்- மோடி

பினாமி சொத்துக்களுக்கு எதிராக கடுமையான சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்-பிரதமர் மோடி

பினாமி சொத்துக்களுக்கு எதிரான கடுமையான சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மான்கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சிக்காக வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழத்தல் நடவடிக்கை, ஊழலுக்கு எதிரான போரின் தொடக்கம்தானே தவிர முடிவல்ல என்றார். 

ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கூறிய பிரதமர், இதனை நிறுத்துவது அல்லது பின்வாங்கிச் செல்வது என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தார். கருப்பு பணத்திற்கு எதிரான யுத்தம் அசாதாரணமானது என்று குறிப்பிட்ட மோடி, ராணுவத்துடன் மோதுவது போன்று அந்த போர் நடைபெறுவதாக கூறினார்.

நாடு முழுவதும் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்த பிரதமர், பொதுமக்கள்தான் இது குறித்து அரசுக்கு அதிக அளவில் தகவல் அளிப்பதாக குறிப்பிட்டார். ஊழல்பேர்வழிகள் குறித்த தகவல்களை அரசு இமெயில் முகவரிக்கோ மைகவர்மென்ட் என்ற மொபைல் ஆப் மூலமாகவோ மக்கள் தெரியப்படுத்தலாம் என்று அவர் கூறினார். பினாமி சொத்துக்களுக்கு எதிரான சட்டம் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர், விரைவில் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.

ரொக்கப் பணமற்ற பரிவர்த்தனை சமீப காலங்களில் நாடு முழுவதும் 200 முதல் 300 சதவீதம் அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நுகர்வோர் மற்றும் சிறுவணிகர்களிடையே ஊக்குவிக்க 2 பரிசு திட்டங்களை மத்திய அரசு இன்று தொடங்கி உள்ளதாக மோடி கூறினார். வணிகம் செய்பவர்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொண்டால், வருமான வரி சலுகைகளை பெற முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகள் அனைத்து சலுகைகளையும் பெறுவதாக சிலர் வதந்திகளை பரப்புவதாக மோடி குற்றம்சாட்டினார். சட்டத்தின் முன் தனிநபராக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும் சமம்தான் என்றும் அவர் தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் படும் சிரமங்களை குறைப்பதற்காகவே விதிமுறைகளில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டது என பிரதமர் விளக்கம் அளித்தார்.

நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்த நாள் வாழ்த்தும் கூறினார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கும், உலக கோப்பையை வென்ற ஜுனியர் ஹாக்கி அணி, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...