News
Loading...

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

ணவுப் பழக்கங்களை மட்டும் முறையாகப் புரிந்துகொண்டால், எந்த நோயைக் கண்டும் அஞ்சத் தேவை இல்லை. எந்த மனிதர் தனது உடலுக்கும் உணவுக்குமான உறவை மதித்து நடக்கிறாரோ, அவரே ஒரு மருத்துவர்தான். நமது மரபுவழிப்பட்ட கொள்கைகளின் வெளிச்சத்தில் இருந்து அவ்வாறான உணவுப் பழக்கங்களை உங்களிடம் தெரிவிக்கிறேன்.

ஐம்பூதக் கொள்கை (பஞ்சபூதக் கொள்கை) என்பதுதான் நம் முன்னோர் கடைப்பிடித்த அடிப்படைக் கோட்பாடு (Theory). கட்டடக் கலை, சிற்பக்கலை, வானியல், கப்பல் கட்டும் கலை, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அடிநாதம் ஐம்பூதக்​ கொள்கைதான். மருத்துவத்துக்கும் இதுவே அடித்தளம். 

‘ஐம்பூதங்களால் ஆனதுதான் இவ்வுலகம்’ என தொல்காப்பியர் பதிவுசெய்தார். சங்க இலக்கியங்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள் யாவும் ஐம்பூதங்களைத்தான் அடிப்படை அறிவியல் காரணிகளாகக் கொண்டுள்ளன. இந்த ஐம்பூதங்களையும் வாதம், பித்தம், கபம் என மூன்றாகச் சுருக்கியது சித்த மருத்துவம்.

இந்த மூன்றும் உடலில் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்றார் ஆசான் வள்ளுவர். உணவுப் பழக்கங்களின் வழியே இந்தச் சமநிலையைக் கடைப்பிடிக்கும் எளிய குறிப்புகளைக் குறிப்பிடுகிறேன்.
நமது மரபு வழிப்பட்ட உணவுக்கொள்கையின் அடிப்படைகள் மூன்று:

1. பசிக்கும்போது மட்டும் உண்ண வேண்டும்.

2. எந்த நிலத்தில் வாழ்கிறோமோ, அந்த நிலத்தில் இயற்கையாக விளைபவற்றை உண்ண வேண்டும்.

3. உணவின் தன்மைகள் அறிந்து உண்ண வேண்டும்.

பசியைப் பற்றி ஏற்கெனவே விளக்கிவிட்டதால், அடுத்த நிலைகளுக்குச் செல்வோம். தமிழகத்தில் இயற்கையாக விளையும் எல்லா பொருட்களும் நமக்கான உணவுகள்தான். கேரட், பீன்ஸ் போன்றவைகூட இயற்கைமுறையில் விளைகின்றன. அவை நமக்கான உணவுகள்தான். உணவுப்பொருட்களைப் பொறுத்தவரை, எந்த விளைபொருளை நிலம் ஏற்றுக்கொண்டதோ, அதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் மரபியல். பழைமைவாதக் கருத்துக்களில் இருப்போர், இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மரபு என்பது, காலமாற்றத்துக்குத் தேவையான கருத்துக்களை உள்வாங்கி வளர்வது. இயற்கை எதை ஏற்றுக்கொள்கிறதோ, அதை மனிதர்களும் ஏற்கத்தான் வேண்டும். இந்த அடிப்படையில் தமிழகத்தில் இயற்கையாக விளையும் அனைத்தும் நமக்கான உணவுகள்தான்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

அடுத்ததாக, உணவின் தன்மைகளைப் புரிந்துகொள்வோம். எல்லா விளைபொருட் களிலும் ஐம்பூதங்கள் உண்டு. ஆனால், ஒவ்வொரு விளைபொருளிலும் ஏதேனும் ஒரு பூதம் கூடுதலாக இருக்கும். `இது வாயுப்பண்டம்', `இது சூடு தரும் பொருள்’ என்று எல்லாம் மூத்தோர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். ஒரு விளைபொருளைக் கண்டதும் அதில் எந்தப் பூதம் மிகுதியாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள சில எளிய வழிமுறைகள் உள்ளன.

காற்று மிகுதியாக உள்ள பொருட்களைப் பார்ப்போம். எல்லா வகையான பருப்புகளும் பயறுகளும் காற்றுப் பொருட்கள்தான். துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவற்றில் காற்று மிகுதியாக இருக்கும். துவரைச் செடிகளைப் பாருங்கள். அவற்றில் துவரைப் பிஞ்சுகள் முளைக்கும்போது, முதலில் வானத்தைப் பார்த்தவாறு செங்குத்தாக இருக்கும். அவை வளர வளர, படுக்கைவசத்தில் இருக்கும். துவரை எப்போது படுக்கைவசத்தை அடைகிறதோ, அப்போது அதில் காற்று மிகுந்துவிட்டது எனப் பொருள். படுக்கை நிலையில் உள்ள துவரை முற்றி காயத் தொடங்கியதும் அறுவடையாகும். இந்தப் பருப்புதான் நமக்கான உணவாகிறது. 

கொத்தவரங்காய் அல்லது சீனி அவரைக்காய் செடிகளும் இதேபோலத்தான். அவற்றின் பிஞ்சுகள் முதலில் வானை நோக்கிச் செங்குத்தாக இருக்கும். வளரும்போது பக்கவாட்டில் காணப்படும். அந்த நிலையில்தான் அறுவடை செய்யப்படும். நவீன தாவரவியலில் இவற்றை `இருவித்திலைத் தாவரங்கள்' என்பார்கள். இவை யாவும் காற்றில் இருந்து தழைச்சத்து உறிஞ்சும் திறன்மிக்கவை என்பதும் நவீன தாவரவியல் பாடம்தான். இதைத்தான் நமது மரபுவழிப்பட்ட புரிதலில் இருந்து உங்களுக்கு விளக்குகிறேன்.

தட்டைப்பயறு, காராமணி, கொண்டைக் கடலை, மொச்சை, அவரை போன்றவை காற்று மிகுதியாக உள்ள பொருட்கள். உடலில் காற்றுத் தொல்லைகள் உடையோர், இந்த உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தேவைப்பட்டால், சில காலத்துக்கு முற்றிலும் தவிர்ப்பது சிறப்பு.

இதே பயறுகள் காய்ந்துபோகாமல் நீர்த்தன்மையுடன் இருந்தால், அவற்றில் காற்றும் நீரும் கலந்திருக்கும். இந்த நிலையில் அவற்றைச் சமைத்து உண்பது நன்மை தரும். துவரைத் தோட்டங்களில் இருந்து துவரைக் காய்களைப் பறித்து அவித்து உண்ணும் வழக்கம் நம்மிடம் இருந்தது. இதேபோல, தட்டை, காராமணி, மொச்சை ஆகியவற்றையும் உண்ணுதல் நமது கிராமங்களில் இருந்த அருமையான உணவுப் பழக்கம். பொங்கல் உணவில் மொச்சையைப் பச்சையாக அவித்து, பிற காய்கறிகளுடன் சேர்த்து உண்ணும் வழக்கத்தை நினைத்துப்பாருங்கள். 

பயறுகளும் பருப்புகளும் நீர்த்தன்மையுடன் இருக்கையில், மிகுந்த நன்மை தர வல்லவை. அவை காய்ந்து உலர்ந்துவிட்டால், நீர் குறைந்து காற்று மிகுந்துவிடும். இவ்வாறு காற்று மட்டும் கூடுதலாக உள்ள எந்த உணவும் செரிமானத்துக்குச் சிக்கல் தரத்தக்கது.

நிலக்கடலைப் பிஞ்சுகள் முதலில் செங்குத்தாக நிலத்துக்குள் நுழையும். பின்னர், வளர்ச்சிப் போக்கில் படுக்கைவசமாக மேல் நோக்கி நிமிரும். அவை படுக்கை நிலை அடைந்த பின்னர் அறுவடை ஆகும். இவ்வாறு படுக்கை நிலையில் இருக்கும் நிலக்கடலையில் பால் அதிகமாக இருக்கும். `பச்சைக்கடலை' என அழைப்போம். பச்சைக்கடலைகளை அவித்து உண்பது சிறந்த உணவுப் பழக்கம். பால் மாறாத கடலைகளைப் பொரியலாகச் சமைப்பதும் சிறந்த உணவு. நன்கு உலர்ந்த நிலக்கடலைகளில் காற்றின் குணம் மிகுந்துவிடும். இவற்றை வறுத்து உண்டாலும் செரிமானம் சரியாக இருக்காது. இதனால்தான், வறுத்த நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்துச் சாப்பிடும் முறையை நம் முன்னோர் கடைப்பிடித்தனர். ஏனெனில், இனிப்பு சுவை செரிமானத்தைத் தூண்டவல்லது.

கொத்தவரை, வெண்டை ஆகிய இரு காய்களைப் பாருங்கள். இவை இரண்டும் செங்குத்து நிலையில் இருக்கும்போது அறுவடை செய்தால்தான், அவை சமைப்பதற்கு ஏற்ற பிஞ்சுக்காய்கள். இவை படுக்கை வசத்துக்குச் சாயத் தொடங்கினால் முற்றிவிடுகின்றன. அதாவது காற்று மிகுந்த காய்களாகிவிடுகின்றன.

பல காய்கள் முளைக்கும்போது, வானைப் பார்த்து செங்குத்தாகத்தான் இருக்கின்றன. இந்த நிலையில் அவற்றில் வெப்பத்தின் தன்மை கூடுதலாக இருக்கும். வானில் இருந்து இறங்கும் வெப்பத்தை உள்வாங்கி வளரவேண்டிய தேவை அவற்றுக்கு இருப்பதால், இவ்வாறு வான் பார்க்கின்றன. அவரைக் கொடியில் உள்ள பிஞ்சுகளும் இப்படித்தானே முதலில் வானை நோக்கிச் செங்குத்தாக இருக்கின்றன! வெப்பத்தை உள்வாங்கினால்தான் விரைவாக வளர முடியும். குறுகியகாலப் பயிர்கள் அனைத்தும் இவ்வாறுதான் நடந்துகொள்கின்றன. அவரைப் பிஞ்சுகளில் நீர் இருக்கும். அவை வளர வளர, நீர் குறைந்துபோகும். நன்கு முற்றிய அவரைக் காய்களின் விதைகளைப் பாருங்கள். கடினமானவையாகிவிடுகின்றன. அந்த நிலையில் உள்ளவை நமக்கான உணவுகள் அல்ல. 

நெற்பயிர்களும் முதலில் செங்குத்தாகத்தான் பிஞ்சுவிடுகின்றன. செங்குத்து நிலையில் அவற்றில் பால் இருக்கிறது. இந்தப் பால் வற்றித்தான் அரிசி ஆகிறது. நெல்லை அறுவடை செய்யும்போது, அது காற்று மிகுந்த பொருள்தான். நீரில் ஊறவைத்து அவித்து அரைத்த பிறகுதான் அரிசியில் உள்ள காற்று குறைந்து நீர்த்தன்மை உருவாகிறது. அவிக்காமல் அரைக்கப்படும் `பச்சரிசியில் வாயு அதிகம்’ என, கிராம மக்கள் கூறுவதை இப்போதும் கவனிக்கலாம். ஏனெனில், நெல்லை ஊறவைக்காமல் அரைத்தால், அதில் நீர்த்தன்மை அதிகரிக்கும் வாய்ப்பே இல்லாமல்போகிறது அல்லவா!

புழுக்கம் என்றால், வெப்பமும் ஈரமும் இணைந்திருப்பது எனப் பொருள். அதாவது காற்று குறைவாக உள்ள நிலையைத்தான் `புழுக்கம்' எனக் கூறுவது நம் வழக்கம். புழுங்கல் அரிசி என்பது, காற்று குறைவாகவும் நீரும் வெப்பமும் சற்றே கூடுதலாகவும் உள்ள அரிசி.

ஒருவருக்கு உடலில் செரிமானச் சிக்கல்கள் இருப்பதை எப்படி எல்லாம் அறிந்து​கொள்ளலாம் என்பதற்கு, சில குறிப்புகளைத் தருகிறேன்.

பசி இன்மை, பசி மந்தம் ஆகியவை இரண்டும் முக்கியமான அறிகுறிகள். நேரம் பார்த்துச் சாப்பிடாமல் பசிக்கும் வரை காத்திருந்தால்தான் இந்த அறிகுறிகளைப் புரிந்துகொள்ள முடியும். ஒருவர் பசிக்கும் வரை காத்திருந்து உணவு உண்கிறார். அவருக்கு மீண்டும் பசிப்பதற்கு அதிகமான நேரம் ஆகிறது என்றால், அவருக்கு செரிமானத்தில் சீரற்ற நிலை உள்ளது எனப் பொருள். அதிகமான நேரம் என்பதை அவரவர் நடைமுறையில் கண்டுகொள்ளலாம். நீண்டநேரம் ஆகியும் பசிக்கவில்லை என்பதற்காக, கவலைப்படத் தேவை இல்லை. எப்போது பசிக்கிறதோ, அப்போது மட்டும் சாப்பிடும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால்... சில நாட்களில் பசியின் அளவும் கால இடைவெளியும் சீரான நிலைக்கு வந்துவிடும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

அதிகமான ஏப்பம், மலச்சிக்கல் ஆகிய இரண்டும் செரிமானச் சிக்கலின் அறிகுறிகள். இவற்றை நீங்களே உங்கள் அன்றாட அனுபவங்கள் வழியே அறிந்துகொள்ளலாம். 

செரிமானச் சிக்கல்கள் உள்ள அனைவரும் காற்று குறைவான நிலையில் உள்ள காய்கறிகள், தானியங்களை உட்கொண்டால், மிக விரைவாக உடல் தன்னைச் சீரமைத்துக்கொள்வதை உணரலாம். வழக்கமாக நான் கூறும் எளிய வழி இதுதான், ‘உடல் சீராகும் வரை பருப்பு, பயறுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். சீரான பின்னர் இவற்றைக் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள்.’

ஐம்பூதக் கொள்கை வழியில் சென்று இயற்கையைப் பார்வையிட்டால், ஒவ்வொரு தாவரமும் நமக்கு நிறையப் பாடங்களை நடத்தக் காத்திருக்கிறது. பசி, என்பது வெப்பம் எனும் பூதத்தின் வெளிப்பாடு. ஆம், உங்களுக்குப் பசிக்கிறது என்றால், உங்கள் உடலில் வெப்பம் அதிகரித்துள்ளது எனப் பொருள். இந்த வெப்பம்தான் உள்ளே வரும் உணவைச் செரிப்பதற்கான மூல ஆற்றல். வெப்பம் இல்லாத உடலுக்குள் திணிக்கப்படும் உணவு, வயிற்றுக்குள் செரிமானம் ஆகாமல் அழுகிப்போகும். `தொப்பை' எனப்படும் பெருவயிறு உருவாவதற்கான காரணங்களில் இதுதான் முதன்மையானது. நீரில் நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகும். வெப்பம் உருவானால்தான், அந்த நுண்ணுயிர்கள் சிதைக்கப்படும். இதுதான் இயற்கை விதி. இந்த விதிதான் உடலுக்குள்ளும் செயலாற்றும்.

உணவு, எளிதில் செரிமானம் ஆகும் தன்மையில் இருக்க வேண்டும். வெப்பம், நீர் ஆகியவை மிகுதியாகவும் காற்று குறைவாகவும் உள்ள எந்த உணவுப்பொருளும் எளிதில் செரிக்கக்கூடியது. சமையல் முறைகளிலும் இந்தப் பக்குவத்தை நீங்கள் கடைப்பிடிக்கலாம். இட்லி, இடியாப்பம் ஆகியவை வெப்பமும் நீரும் இணைந்த முறையில் சமைக்கப்படுபவை. இவற்றின் செரிமானத்தன்மை எவ்வளவு எளிதாக உள்ளது!

இயற்கையும் இவ்வாறுதான் நமக்காகச் சமைத்துவைத்துள்ளது. நாம் இயற்கையின் மொழியைப் புரிந்துகொண்டால் மட்டும் போதுமானது!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...