News
Loading...

கள்ள நோட்டை ஒழிக்க பாலிமர் கரன்சி!

கள்ள நோட்டை ஒழிக்க பாலிமர் கரன்சி!

பிரதமர் மோடியின் பொருளாதார சர்ஜிகல் ஸ்ட்ரைக், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதோடு இந்த நடவடிக்கையின் முக்கியமான இன்னொரு இலக்கு, கள்ள நோட்டுகளை வேரறுப்பது! ‘‘புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் சிறிய சைஸில் இருக்கின்றன’’ என சிலர் கிண்டல் செய்ய, இன்னொருபுறம் ‘‘உலக நாடுகள் பலவும் இப்படி கச்சிதமான கரன்சி வடிவத்துக்கு மாறிக்கொண்டிருக்கின்றன’’ என வேறு சிலர் நியாயம் கற்பிக்கிறார்கள். 

ஆனால், ‘‘கள்ள நோட்டு அடிப்பது இருக்கட்டும். புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்துக்கொடுத்தே நிறைய பேர் பணப் பரிவர்த்தனை செய்துவிட்டார்கள். ஒருவேளை இந்தியா பாலிமர் கரன்சிக்கு மாறியிருந்தால் இது நிகழ்ந்திருக்காது’’ என்கிறார்கள் நிபுணர்கள். அது என்ன பாலிமர் கரன்சி? பாலிபுரொபிலீன் மற்றும் பாலி எத்திலீன் ஃபைபர் இழைகளால் உருவாக்கப்பட்ட காகிதம் போன்ற ஒரு மெட்டீரியலில் அச்சடிப்பதுதான் பாலிமர் கரன்சி. 

கிட்டத்தட்ட சாதாரண பேப்பர் ரூபாய் நோட்டுகள் போல இருந்தாலும், லேமினேட் செய்யப்பட்ட மெல்லிய பிளாஸ்டிக் அட்டை போல இவை இருக்கும். கடந்த 2014ம் ஆண்டே இந்தியா பாலிமர் கரன்சிக்கு மாறும் பரிசோதனை முயற்சியில் இறங்கியது. சுமார் 100 கோடி என்ற எண்ணிக்கையில் பத்து ரூபாய் நோட்டுகளை பாலிமரில் அச்சிட்டு கொச்சி, மைசூர், சிம்லா, ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வர் நகரங்களில் புழக்கத்தில் விட ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. 

மழை, குளிர், வெயில் என வித்தியாசமான தட்பவெப்பம் நிலவும் இந்த வெவ்வேறு நகரங்களில் இது எவ்வளவு ஆயுள்காலம் தாங்குகிறது என்று பார்க்கவே இந்த ஏற்பாடு. ஆனால் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவே இல்லை. பாலிமர் ரூபாய் நோட்டுகளை உலகிலேயே முதன்முதலாக அறிமுகம் செய்த நாடு ஆஸ்திரேலியா. கடந்த 1967ம் ஆண்டு முதன்முதலாக கலர் ஜெராக்ஸ் தொழில்நுட்பம் அறிமுகமானது. ஆஸ்திரேலியாவில் பலரும் 10 டாலர் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த ஆரம்பிக்க, அந்த நாட்டுக்கு கள்ள நோட்டுப் பிரச்னை பெரும் தலைவலி ஆனது. 

‘காமன்வெல்த் சயின்டிஃபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் ஆர்கனைசேஷன்’ என்ற அமைப்பு அப்போது ‘‘பாலிமர் மெட்டீரியலில் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம்’’  என ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்தது. இப்படி ஒரு மெட்டீரியலை உருவாக்கி, அதற்குக் காப்புரிமை பெற்று பயன்பாட்டுக்குக் கொண்டு வர 1988 ஆகிவிட்டது. அடுத்த எட்டு ஆண்டுகளில் தனது எல்லா கரன்சியையும் பாலிமராக மாற்றிவிட்டது ஆஸ்திரேலியா.

இப்போது ஆஸ்திரேலியா, புரூணே, கனடா, நியூசிலாந்து, ருமேனியா, வியட்நாம் உட்பட உலகின் 14 நாடுகள், முழுவதும் பாலிமர் கரன்சியையே பயன்படுத்துகின்றன. இதுதவிர இன்னும் 18 நாடுகளில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் பாலிமரில் அச்சிடப்படுகின்றன. ‘‘பாலிமர் கரன்சி எல்லா வகையிலும் சிறந்தது. இது சாதாரண பேப்பர் கரன்சி நோட்டுகளை விட நான்கு மடங்கு அதிக காலம் உழைக்கும். அச்சிடுவதும் சுலபம். 

ஒரு பேப்பர் கரன்சியை அச்சிடும் நேரத்தில் நான்கு பாலிமர் கரன்சிகளை அச்சிட்டு விடலாம். மேலும் இதில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய சேர்க்க முடியும். கள்ள நோட்டு அச்சிட முடியாத வகையில் பிரத்யேக வண்ணங்களில் இதை அச்சிடுவதும் சாத்தியம்’’ என்கிறார் ஜெர்ரி வில்சன். இவர் ஆஸ்திரேலியாவுக்கு பாலிமர் நோட்டு உருவாக்கிக் கொடுத்த காமன்வெல்த் சயின்டிஃபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் எனும் நிறுவனத்தின் இயக்குனர்.

‘‘இந்தியா போன்ற எப்போதும் வெயில் அடிக்கும் நாடுகளுக்கு பாலிமர் கரன்சிகளே ஏற்றவை. பாக்கெட்டில் மடித்து வைத்து, வியர்வையில் நனைந்து கசங்கியே பெரும்பாலான நோட்டுகள் அழுக்காகி கிழிகின்றன. நிறைய பேர் நோட்டுகளில் அழுத்தமாக எழுதி அவற்றைக் கிழிந்து போக வைக்கிறார்கள். பாலிமர் நோட்டுகள் மடியாது, விரைவில் கிழியாது. நீண்ட ஆயுள் வரும்’’ என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து விலக்கப்பட்டு பழைய குப்பை ஆக்கப்படுகின்றன. புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் ஐந்தில் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் கிழிந்து போய் குப்பைக்குப் போகிறது. 

இப்படி பழைய கிழிந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்பப் பெற்று, அவற்றைப் பாதுகாப்பாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி, துண்டு துண்டுகளாக சிதைத்து அழிப்பதற்கு நிறைய உழைப்பும் தேவைப்படுகிறது; பெரும் செலவும் பிடிக்கிறது.  பாலிமர் நோட்டுகள் நீண்ட நாள் உழைக்கும் என்பதால் இந்த செலவும் மிச்சம்; இவற்றை அழித்து சிறுசிறு பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றிவிடலாம் என்பது இன்னொரு வசதி.

இந்தியாவில் சுமார் 400 கோடி கள்ள நோட்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் தங்களிடம் வரும் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்வதும் இல்லை; ரிசர்வ் வங்கிக்கு தகவல் சொல்வதும் இல்லை. இந்த சூழலில் பாலிமர் நோட்டு மட்டுமே இந்த சிக்கலிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.