News
Loading...

முதல்வரை நெருங்க முடியவில்லை! கொந்தளிக்கும் புதுச்சேரி காங்கிரஸார்

முதல்வரை நெருங்க முடியவில்லை! கொந்தளிக்கும் புதுச்சேரி காங்கிரஸார்

மைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என யாரையும் நெருங்கவிடாமல் முன்னாள் எம்.எல்.ஏ-வால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வளைக்கப்பட்டு இருப்பதாக கொந்தளிக்கிறார்கள் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர்.

கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடாமலே, முதல்வராக தேர்வுசெய்யப்பட்டவர், நாராயணசாமி. அவர், தேர்தலை சந்தித்து வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருந்ததால், நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ-வான ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அங்கு முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, “ஜான்குமார் தரப்பு செய்யும் அட்ராசிட்டியைத் தாங்க முடியவில்லை” என்று கதறுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம், “முதல்வர் நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ஜான்குமார் ராஜினாமா செய்தார். 

இடைத்தேர்தலில் முதல்வர் வெற்றி பெற்றார். அவர்கள் இவருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட டீலிங் அது. அதற்காகக் கட்சியில் இருக்கும் அனைவரும் ஜான்குமாரையும் அவரைச் சார்ந்தவர்களையும் தூக்கிவைத்து கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறார் முதல்வர். அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் என அனைவரையும் ஓரம்கட்டிவிட்டு அரசு விழா உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் ஜான்குமாரை கூடவே அழைத்துச்செல்கிறார் முதல்வர். கிட்டத்தட்ட ஒரு துணை முதல்வரைப்போல ஜான்குமார் வலம் வருகிறார். முதல்வரை எங்களால் நெருங்க முடியவில்லை.

பணம் இருப்பவர்களுக்குத்தான் கட்சியில் முக்கியத்துவம் கிடைக்கும் என்றால் வருடக் கணக்கில் கட்சிக்காக உழைத்த எங்களுக்கு என்ன மரியாதை? தனக்கு நியமன எம்.எல்.ஏ பதவி கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் தன் மனைவிக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் ஜான்குமார் கேட்டு வருவதாகத் தெரிகிறது. அப்படி நடந்தால் அது கட்சிக்கும், தொண்டர்களுக்கும் முதல்வர் செய்யும் துரோகம். இதுகுறித்து காங்கிரஸ் தலைமைக்கு விரைவில் புகார் அளிக்க இருக்கிறோம்” என்றார் ஆவேசமாக.

முதல்வரை நெருங்க முடியவில்லை! கொந்தளிக்கும் புதுச்சேரி காங்கிரஸார்

“தினமும் காலை 8.30 மணிக்கு தன் நண்பரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ஏ.கே.டி.ஆறுமுகத்துடன் சட்டப்பேரவைக்கு வரும் ஜான்குமார், நேராக முதல்வர் நாராயணசாமியின் அறைக்குச் செல்கிறார். பிறகு முதல்வர் செல்லும் எல்லா விழாக்களுக்கும் முதல்வர் காரிலே சென்று கலந்துகொள்கிறார். அமைச்சர்களோ, கட்சி நிர்வாகிகளோ தனிப்பட்ட முறையில் முதல்வரை சந்தித்து ஆலோசனைகூட நடத்த முடியவில்லை. நாராயணசாமியின் நாடாளுமன்ற செயலராக இருந்த ஜான்குமார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு, எம்.எல்.ஏ அறையைக்கூட ஒப்படைக்கவில்லையாம். தினமும் அங்கே வந்து உட்கார்ந்து அவருடைய ஆதரவாளர்கள் அரட்டை அடித்துச் செல்கிறார்கள். `என்னால்தான் நாராயணசாமி முதல்வராகி இருக்கிறார். அதனால் விரைவில் நியமன எம்.எல்.ஏ பதவி கிடைத்துவிடும். மீண்டும் அதே அறையில் அமர்வேன்’ என்று ஜான்குமார் சொல்லி வருகிறாராம்” என்கிறது சட்டப்பேரவை வட்டாரம்.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் தொலைபேசியில் நாம் கேட்டபோது, “இதை உங்களுக்கு யார் சொன்னார்கள். ஒரே ஒரு அரசு விழாவுக்குத்தான் ஜான்குமார் வந்தார். அதன் பிறகு வருவது இல்லை” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

கட்சியினரின் அதிருப்தியை முதல்வர் நாராயணசாமி எப்படி சமாளிக்கப் போகிறார்?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்