News
Loading...

கொல்கத்தா தொழில் அதிபர் வீட்டில் சோதனை: சுவிஸ் வங்கி ஆவணங்கள் பறிமுதல்


காண்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு பழைய நோட்டுகளை மாற்றிக்கொடுத்த கொல்கத்தா தொழிலதிபர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுவிஸ் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கருப்பு பணம் பதுக்கலை தடுக்கும் நோக்கில் உயர் மதிப்பு கொண்ட நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் சிக்கி வருகிறது.

சென்னையில் காண்டிராக்டர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது கணக்கில் வராத ரூ.131 கோடி ரொக்கப்பணம், 171 கிலோ தங்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. நாட்டிலேயே அதிக அளவு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகளான சீனிவாசரெட்டி, பிரேம் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். 

இதைப்போல டெல்லியில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13.5 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான விசாரணையின் போது கொல்கத்தாவை தொழில் அதிபர் பராஸ் எம்.லோதா கைது செய்யப்பட்டார். புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்ததாக. மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பியபோது அமலாக்கப்பிரிவிடம் சிக்கினார். இவரை காவலில் எடுத்து அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது.

இதற்கிடையே கொல்கத்தாவில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது சுவிஸ் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கம்பியூட்டர் தகவல் தரவுகள் மற்றும் பிற முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கப்பிரிவு தகவல்கள் தெரிவித்து உள்ளன. பெண் பெயரில் சுவிஸ் வங்கி கணக்கு உள்ளது என்றும் அவர் லோதாவுடன் தொடர்பு உடையவராக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக லோதாவுடன் தொடர்பு உடையவர்களுக்கு மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப உள்ளோம், விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்