News
Loading...

ராம மோகன ராவின் ராஜ்யங்கள்!

ராம மோகன ராவின் ராஜ்யங்கள்!

ளும்கட்சியின் பவர்ஃபுல்கள் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி வீடுகளில் வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு புகுந்தபோது அது வழக்கமான ரெய்டு இல்லை என பலரும் வாய் பிளந்தார்கள். அந்த ரெய்டு அமைச்சர் எடப்பாடிக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர் ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வரையில் துரத்தியது. அதன் கிளைமாக்ஸ்தான் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனை. ‘தமிழ்நாட்டில் முதன்முறையாக தலைமைச் செயலாளர் வீட்டில் நடந்த சோதனை இது’ என்ற ரிக்கார்டை மட்டும் பதிக்கவில்லை. ஆளும் கட்சியின் காக்கிகளைக்கூட நம்பாமல் துணை ராணுவத்தைக் கொண்டு நடத்தப்பட்டது என்கிற சாதனையும் படைத்தது. அதுமட்டுமா? தலைமைச் செயலகத்துக்கு உள்ளே புகுந்து சோதனை போட்டது எல்லாம் தமிழகம் இதுவரை கண்டிராத அசிங்கம். அப்படி ராம மோகன ராவ் என்ன செய்தார். அவரின் ஜாதகம் என்ன?

பி.ராம மோகன ராவ் 1985-ம் வருட பேட்ச் நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1957-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி ஆந்திராவில் பிறந்தவர். தாய் மொழி தெலுங்கு என்றபோதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகள் தெரியும். பி.காம், அடுத்து எம்.காம் காஸ்ட் அக்கவுன்டிங் முடித்து பொருளாதாரமும் படித்துவிட்டு ஐ.ஏ.எஸ். ஆனார். நில வருவாய் மேலாண்மையில் உதவி கலெக்டராக 1987-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியை தொடங்கினார் ராம மோகன ராவ். அதன்பிறகு படிப்படியாக உயர்ந்தார். 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது அவரின் செயலாளர்களில் ஒருவர் ஆனார். அந்த 5 ஆண்டுகளில் தமது திறமைகளை அவர் சிறப்பாக(!) வெளிப்படுத்தியதற்கான பரிசுதான் தலைமைச் செயலாளர் பதவி.

ராம மோகன ராவின் ராஜ்யங்கள்!

‘‘தலைமைச்செயலாளர் பதவிக்கு அவர் தகுதி இல்லாதவர் என பேச்சு இருந்தும் அவர் நியமிக்கப்பட்டார். மூத்த அதிகாரிகளுக்கு இல்லாத சில சிறப்புத் தகுதிகள் ராம மோகன ராவுக்கு இருந்தன. ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு உதவியாக இருந்தார். அதிகாரத் தரகராக மாறினார். அமைச்சர்கள் எந்தெந்த பணிகளுக்காக யாரிடம் பேரம் பேசுகின்றனர். அதற்காக எவ்வளவு தொகை கைமாறுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரித்து முதலமைச்சரிடம் தெரிவிப்பதுதான் அவரின் தகுதிகளாகும்’’ என ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த ராம மோகன ராவ்தான் ஊழலை ஒழிப்பதற்கான தமிழக அரசின் கண்காணிப்பு ஆணையராகப் பணியாற்றி வந்தார் என்பது தமிழகத்தின் தலைகுனிவு.

லிவிங் டுகெதர்!

‘ஆசை காட்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி... சித்ரவதை செய்த மனைவி! ஓர் அபலையின் கண்ணீர்’ என்ற தலைப்பில் 11.05.2014 தேதியிட்ட ஜூ.வி. இதழில் ஒரு ஸ்டோரி வெளியானது. மிகவும் பலம் பொருந்திய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் புயல் வீசிய கதை பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பெயர் குறிப்பிடாமல் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்போது வெளிச்சத்துக்கு வருகிறார். ஆம், வருமான வரித் துறை சோதனைக்கு ஆளாகியிருக்கும் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ்தான் அவர். ‘லிவிங் டுகெதர்’ என வாழ்ந்த ராம மோகன ராவின் பக்கங்களைப் புரட்டுவோம்.

மனைவி, இரண்டு பிள்ளைகள் என வாழ்க்கை நடத்திவந்த ராம மோகன ராவ், லலிதாவோடும் வாழ்க்கை நடத்தியதைத்தான் அந்த கட்டுரையில் சொல்லியிருந்தோம். விகடன் அலுவலகத்திற்கு வந்து லலிதாவே அனைத்தையும் அப்போது கொட்டித் தீர்த்தார். அந்தக் கட்டுரையில் இருந்த தகவல்கள் இதுதான். லலிதாவின் அம்மா வரலெட்சுமியும் ராம மோகன ராவின் மனைவி ஈஸ்வரியின் தாயாரும் சகோதரிகள். பி.எஸ்சி முடித்துவிட்டு வேலை வேண்டி ராம மோகன ராவிடம் வந்தார் லலிதா. லலிதாவை தன் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் லலிதாவுடன் நெருக்கமானார். லலிதாவுக்கு வில்லிவாக்கத்தில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை வாங்கிக் கொடுத்தார். அப்போது ராம மோகன ராவ் வீட்டுவசதி வாரியத்தில் உயர் பதவியில் இருந்தார். லலிதாவும் அவருடைய தாயும் அந்த வீட்டில்தான் இருந்தனர். 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ராம மோகன ராவு முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளர்களில் ஒருவர் ஆனார். அதன்பிறகு என்ன நடந்தது என்று (அப்போது) லலிதா சொன்னது இது. 

‘‘என்னை அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், கணவன் மனைவியாக வாழ்ந்தோம். என்னுடைய செலவுக்கு மாதம்தோறும் பணமும் கொடுத்தார். அவருடன் நான் வாழ்ந்திருக்கிறேன். 2011-ல் ஆட்சி மாறிய பிறகு அவரைப் பார்க்க முடியவில்லை. மாதம்தோறும் பண உதவி செய்துவந்தார். ஈஸ்வரி (ராம மோகன ராவின் மனைவி) அவரை என்னோடு பேசவிடாமல் தடுத்துவிட்டார். 2014 பிப்ரவரியில் என் வீட்டுக்கு வந்த ஈஸ்வரியும் அவரது ஆட்களும் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அள்ளிச் சென்றார்கள். என்னையும் என் அம்மாவையும் அவருடைய அண்ணா நகர் வீட்டில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தினார்கள். என் பெயருக்கு தரப்பட்ட வில்லிவாக்கம் வீட்டை ஹரிபாபு என்பவர் பெயரில் வலுக்கட்டாயமாக எழுதி வாங்கினார்கள். செல்வாக்கைப் பயன்படுத்தி ரெஜிஸ்ட் ராரை வீட்டுக்கே அழைத்துவந்து பத்திரப்பதிவு செய்தார்கள். அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என எழுதி வாங்கினார்கள். அதோடு என் வங்கிக் கணக்கு, செல்போன், ஆவணங்கள் என எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள். ‘எங்கேயாவது போய் தொலை. இல்லை, பிச்சை எடு’ என விரட்டி அடித்தார் ஈஸ்வரி. 

இதன் பிறகு அவரை எப்படியாவது தொடர்புகொள்ள முயன்று முடியவில்லை. பிறகு, ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டம் மாவூடூர் என்ற ஊரில் தங்கவைக்கப்பட்டோம். ஈஸ்வரி அங்கேயும் என்னைத் தேடிவந்தார். ‘மரியாதையா என் வீட்டுக்காரரை விட்டு ஒதுங்கிடு...’ என்று என்னையும், என் அம்மாவையும் அடித்தார். இதில் என் அம்மா மண்டை உடைந்தது. அவருடைய மகன் விவேக் என்னிடம் சமரசம் பேசினார். ‘இனி நீ சென்னைக்கு வரக் கூடாது. உனக்கு மாதம் 30 ஆயிரம் தருகிறேன். இந்தப் பிரச்னையை இத்துடன் விட்டுவிடு’ என்றார். நானும் என் அம்மாவும் தினம் தினம் கஷ்டப்படுகிறோம். எங்கள் உயிர் எப்போது போகுமோ தெரியாது. ஆனால், அதற்குக் காரணமானவர்கள் தப்பவிடக் கூடாது’’ என்றார்.

இதுதான் லலிதா நமக்கு அப்போது அளித்த பேட்டி. அந்தப் பேட்டி வந்த பிறகு தொடர்ந்து நமது அலுவலகத்துக்கு அவர் பேசிக் கொண்டிருந்தார். ‘‘விவேக் மாவூடூர் வந்து, ‘உன் பேட்டியால் எங்க அப்பாவுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கு. அதுவும் அப்பாவின் திருமண நாளான மே 7-ம் தேதி அந்த பேட்டி ஜூ.வி-யில் வெளியாகியிருக்கிறது. இது நீ திட்டம் போட்டு செய்த சதி. அவர் மீது உனக்கு அன்பு இருந்தால் கையெழுத்துப் போடு’ என சொல்லி என்னிடம் பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எழுதி வாங்கினார்கள். வில்லிவாக்கம் வீடு, நகை மற்றும் பொருட்களை அபகரித்ததற்காக 50 லட்சம்  ரூபாய் என் பெயரில் டெபாசிட் செய்வதாக சொன்னார்கள். அவருக்கு நான் அனுப்பிய கடிதங்களும் ஃபேக்ஸ்களும் விவேக் கையில் இருந்தன. ‘நீ எந்த கடிதம் புகார் அனுப்பினாலும் அது என் கைக்கு வந்துவிடும்’ என விவேக் சொன்னார். ‘அவரை நேரில் பார்க்க வேண்டும்’ என விவேக்கிடம் சொன்னேன். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு சென்னைக்கு வரவே கூடாது என்றும் சொன்னார்கள். 

மாவூடூரை சேர்ந்த ஒருவருக்கு மாதம்தோறும் பணம் அனுப்பி அதை எனக்கு கொடுத்து வந்தார்கள். இரண்டு முறை வந்தபோது விவேக் என்னிடம் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டுப் போனார். ராம மோகன ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் ரமணா. அவர் தயவால்தான் அமைச்சர் ஆனார். அவர் பத்திரப்பதிவு அமைச்சராக இருந்த நேரத்தில்தான் அவர் மூலம் பத்திரப்பதிவு அதிகாரியை வீட்டுக்கே வரவழைத்து என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். ரமணாவிடம் பி.ஏ-வாக இருந்த கிருஷ்ணாராவின் உறவினர் ஹரிபாபு மூலம்தான் எனக்கு வீடே வாங்கி கொடுத்தார் ராம மோகன ராவ். நான் திருப்பி ஹரிபாபுவுக்கே வீட்டை ஒப்படைத்துவிடுவதாக எழுதி வாங்கிவிட்டார்கள்’’ என சொன்னார். அதன்பிறகு லலிதா நமது அலுவலகத்திற்கு பேசுவது நின்று போனது. அவர் எங்கே இருக்கிறார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

ராம மோகன ராவின் ராஜ்யங்கள்!

ஓ.பி.எஸ்... சேகர் ரெட்டி...  பொதுப்பணித் துறை!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட போது முதல்வர் ‘மணிமுடி’ தரித்த ஓ.பன்னீர்செல்வம், அவர் விடுதலை ஆனபோது ‘தலைமுடி’யையும் தலைவிக்காக இழந்தார். திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். இந்த வைபவத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் போஸ் கொடுத்தப்படி நின்றார் சேகர் ரெட்டி. வேலூர் காட்பாடி அருகே உள்ள தொண்டன்துளசிதான் சேகர் ரெட்டியின் பூர்விகம். ரோடு, கேபிள் அமைக்க பள்ளம் என சின்ன கான்ட்ராக்ட்களை எடுத்து செய்து வந்த சேகர் ரெட்டி, அரசியல்வாதிகளின் நட்பைப் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக அகலக்கால் வைத்தார். கான்ட்ராக்ட் மற்றும் டெண்டர் விஷயங்களின் சூட்சுமங்களை கற்றுக் கொண்டார். ‘அரசியல் தொடர்புகள்’ காரணமாக அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்துக்குள் நுழைந்தார். இப்போது அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் ஆரம்பகாலத்தில் சேகர் ரெட்டியுடன் நண்பராக இருந்தார். இருவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். அரசு கான்ட்ராக்ட்டுகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிமுகம் ஆனார். இந்த நெருக்கம்தான் திருப்பதி வரையில் டிராவல் ஆனது. பன்னீர்செல்வம் திருப்பதியில் மொட்டை போடும் ஏற்பாட்டை செய்தது சேகர் ரெட்டி. காரணம் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக அப்போது இருந்தார் சேகர் ரெட்டி. அவரை அந்த பதவியில் அமர்த்தியதே ஓ.பன்னீர்செல்வம். 

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பொதுப் பணித் துறைக்கும் சேர்த்து அமைச்சராக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அதனால் பொதுப் பணித்துறை கான்ட்ராக்ட்டுகள் சேகர் ரெட்டிக்கு தடங்கல் இல்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தன. எந்த ஆட்சி வந்தாலும் மணல் பிசினஸில் கோலோச்சியவர் ஆறுமுகச்சாமி. அவர் இடத்துக்கு சேகர் ரெட்டி வந்தார். ‘இந்த மணல் பிசினஸ் பின்னால் ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது’ என கண் சிமிட்டுகிறார்கள் மணல் மனிதர்கள். ‘‘எம்.பி-யாக இருக்கிறவர்களுக்கு எம்.எல்.ஏ ஸீட் தரமாட்டார்கள். ஆனால், ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்த கே.வி.ராமலிங்கத்துக்கு 2011 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. அதோடு முக்கியமான பொதுப் பணித்துறைக்கும் அமைச்சர் ஆக்கினார். 

செல்வாக்கு பெற்ற கே.வி.ராமலிங்கத்திடம் இருந்து பொதுப் பணித் துறையை திடீரென்று பறித்தார் ஜெயலலிதா. ஒரு அமைச்சரின் பதவி பறிக்கப்படுவதற்கு பின்னால் அரசியல் எதிரிகள் யாராவது ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால், கே.வி.ராமலிங்கத்தை வீழ்த்து வதற்கான வேலைகள் கேபினெட்டிலேயே அரங்கேறின. 2013 நவம்பர் 11-ம் தேதி ராமலிங்கத்துக்கு இறங்கு முகம் தொடங்கியது. அவரிடம் இருந்த பொதுப் பணித்துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டார். பொதுப் பணித்துறை ஓ.பன்னீர்செல்வம் வசம் போனது. அடுத்து மாவட்டச் செயலாளர் பதவியும் போனது. பிறகு அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த பதவி பறிப்புக்கு இரண்டு மாதங்கள் முன்புதான் ஆறுமுகச் சாமியிடம் மணல் கான்ட்ராக்ட் பறிக்கப்பட்டது. அதன்பிறகு ஆறுமுகச்சாமிக்கு இறங்கு முகம். அந்த இடத்தை பிடித்த சேகர் ரெட்டிக்கு ஏறுமுகம். பொதுப்பணித்துறை ஓ பன்னீர்செல்வம் வசம் வந்து சேர நடத்தப்பட்ட காய்நகர்த்தல்கள் எல்லாம் சேகர் ரெட்டிக்காக செய்யப்பட்ட ஏற்பாடு’’ என விவரிக்கிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.