News
Loading...

சின்ன அம்மா... மக்களின் சின்ன அம்மா! - போஸ்டர் யுத்தம் விறுவிறு...

‘சின்ன அம்மா’... ‘மக்களின் சின்ன அம்மா’! - போஸ்டர் யுத்தம் விறுவிறு...

மிழக முதல்வராகவும், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, ஆட்சியிலும் கட்சியிலும் நடந்துவரும் அதிரி புதிரி மாற்றங்கள் தமிழக மக்களுக்குப் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம்கூட காயாத நிலையில், அவரது சொத்துக்கள் மற்றும் கட்சிப் பதவி ஆகியவற்றை அடைவதற்கான சண்டை ஆரம்பித்துவிட்டது. இந்த இரு தரப்பினரின் ஆதரவாளர்கள், போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவருக்கு விசுவாசிகளாக இருந்த கட்சி சீனியர்கள் அனைவரும் சசிகலாவின் பக்கம் சாய்ந்துவிட்டனர். தலைமைக்குப் போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் கூட, ‘சின்ன அம்மா’ தலைமை ஏற்க வேண்டுகிறோம் என போஸ்டர் அடிக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு கொடுத்துவந்த அத்தனை பட்டங்களையும் இப்போது சசிகலாவுக்குக் கொடுத்து வருகிறார்கள். போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்கள், சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் புகைப்படங்கள் என அனைத்திலும் சசிகலா முகம்தான். மாவட்ட அளவில் கட்சி அமைப்புகளின் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அ.தி.மு.க தலைமையை ஏற்க வருமாறு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து  தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருச்சியில் அ.தி.மு.க-வினர், சசிகலா கட்சித்தலைமைப் பொறுப்பை ஏற்கும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர். 

 இவற்றுக்கெல்லாம் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் சசிகலா மெளனம் சாதித்து வந்தாலும் அ.தி.மு.க-வினரின் அழைப்பை மறுக்கவில்லை. பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களில் சின்ன அம்மா என குறிப்பிட்டு ஜெயலலிதா படத்துடன் சேர்த்து விளம்பரம் செய்ய வேண்டும் என சசிகலா தரப்பில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். 

 இன்னொருபுறம், சசிகலாவின் தலைமையை ஏற்கத் தயாராக இல்லாதவர்களும் அ.தி.மு.க-வில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை வைத்துப் பார்க்க அவர்கள் விரும்பவில்லை. இவர்கள் தங்களுடைய எதிர்ப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மூலம் காட்டி வருகின்றனர். தீபாவுக்கு ‘மக்களின் சின்ன அம்மா’ என்று இவர்கள் பட்டம் சூட்டியுள்ளனர். ‘மக்களின் சின்ன அம்மா தீபாவின் தலைமையில் அணி திரள்வோம்’ என இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். ஜெயலலிதாவின் ஜாடையில் இருக்கும் தீபாதான், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக வரவேண்டும் என்று இவர்கள் அழைக்கிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபா போட்டியிடுவார் என்றும் அரசல்புரசலாக அறிக்கை விடுகிறார்கள். ஆனால், இதுவரை தீபா இதுகுறித்து எதுவும் பேசவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரைப் பார்க்கவிடாமல் துரத்தப்பட்டதைத்தான் மீண்டும் மீண்டும் சோகத்துடன் சொல்லிவருகிறார். 

 ஜெயலிலதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரக்கூடிய தகுதிகொண்டவர்கள் தீபாவும், அவருடைய சகோதரர் தீபக்கும்தான். சசிகலாவே சரணம் என தீபக் ஆகிவிட்டார். ஆகவே, ‘சதியை முறியடித்து, விதியை மாற்றி, தொண்டர்களை வழி நடத்து’ என தீபாவை வாழ்த்தி அதிமுக-வினர் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.

 இப்படி போஸ்டர்கள் மூலம் அ.தி.மு.க-வினர் இரு பிரிவுகளாக மோதிக்கொண்டாலும் இவற்றை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. பொதுச் செயலாளர் சசிகலா தான் என்பது அ.தி.மு.க-வினரிடையே உறுதியாகத் தெரிகிறது. ஜெயலலிதாவால் துரத்தி அடிக்கப்பட்ட மன்னார்குடியினரை கொஞ்சம் தள்ளிவைத்து சர்ச்சைகளைக் குறைக்க முயன்று வருகிறார் சசிகலா. இதற்கிடையில், சசிகலாவின் அண்ணி இளவரசிக்கும் போஸ்டர் வைக்க தொடங்கியிருக்கிறார்கள். `சின்ன சின்னம்மா...’ என்று பெயரும் வைத்துவிட்டார்கள். 

இதுவரை ஜெயலலிதாவின் நிழலாக மெளன அரசியல் நடத்திவந்த சசிகலா, எப்போது வாய் திறப்பார், அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள் அ.தி.மு. கவினர். சசிகலா வாய் திறக்கும் வரை இந்தப் போஸ்டர் யுத்தம் ஓயப் போவதில்லை!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...