News
Loading...

ஆட்சியும்... கட்சியும் சின்ன அம்மாவிடம் இருக்க வேண்டும்! - வளர்மதி பேட்டி

ஆட்சியும்... கட்சியும் சின்ன அம்மாவிடம் இருக்க வேண்டும்!

ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது... அவர், விடுதலையாக வேண்டியும், மருத்துவமனையில் இருந்தபோது உடல்நலம் குணமாக வேண்டியும், மண்சோறு சாப்பிட்டவர்களில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியும் ஒருவர். அவரிடம், தற்போதைய அ.தி.மு.க நிலை குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘அ.தி.மு.க தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை வழிநடத்த மூத்த நிர்வாகிகள் பலர் இருக்க... சசிகலா பெயரைச் சொல்வது ஏன்?’’

‘‘அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் சின்ன அம்மா. 33 ஆண்டுகளாக அம்மாவுடனேயே இருந்து, அவருடைய அரசியல் வியூகங்களைக் கற்றுக்கொண்டு அ.தி.மு.க தொண்டர்கள் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவர் அவர். தேர்தல் பிரசாரங்களிலும், அரசு விழாக்களிலும் பங்கெடுத்துள்ளார். இப்படிப் பல சந்தர்ப்பங்களில் அவர், அம்மாவின் நிழலாக இருந்துள்ளார். அதனால்தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பதற்கு, சின்ன அம்மா பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிளவுபட்டது. அதேபோல் இன்று, அம்மா மறைவுக்குப் பிறகு... இந்த இயக்கம் பிளவுபட்டுவிடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவருக்கும் தெரிந்த ஒரு தலைவர் பொதுச்செயலாளராக வர வேண்டும் என உறுதியாக இருக்கிறோம்.  இந்த இயக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு அம்மா எப்படி நடத்திச் சென்றாரோ... அதேபோல, சின்ன அம்மாவால் நடத்த முடியும் என்று எல்லாத் தொண்டர்களும் நம்பும் காரணத்தால் அவரே, பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.’’

‘‘ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் உடன் இருந்தார் என்ற தகுதி மட்டும் போதுமா?’’ 

‘‘எம்.ஜி.ஆர் கட்சியை ஆரம்பித்தபோது... இவரால் எப்படிக் கட்சியை நடத்த முடியும் என்று பலரும் கேட்டார்கள். ஆனால், அவருக்கு அடுத்தடுத்து வெற்றி கிடைத்தது. அவர் மறைவுக்குப் பிறகு அம்மா வந்தார்கள். அப்போதும், கட்சியில் இருந்த சில மூத்த நிர்வாகிகள் இதை எதிர்த்தார்கள். ஆனால் இன்று, நாட்டு மக்கள் தெய்வமாக வணங்கும் அளவுக்கு வெற்றி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார்கள். அம்மாவோடு 33 ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் சின்ன அம்மா... அரசியல் பண்புகள், வியூகங்கள் என அனைத்திலும் பயிற்சிகளைப் பெற்றிருக்கிறார். ஆகவே, எம்.ஜி.ஆர். கண்ட, அம்மா காப்பாற்றிய இந்த இயக்கத்தை சின்ன அம்மாவும் காப்பாற்றுவார்.’’

‘‘ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் உறவினர்கள் மீண்டும் அதிகார மையமாக முளைத்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறார்களே?’’

‘‘அம்மாவின் மறைவுக்குப் பிறகு  சின்ன அம்மா தனி மரம் ஆகிவிட்டார். அப்படியிருக்கும் நிலையில், அவருடைய உறவினர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல வரத்தான் செய்வார்கள். அதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும். அம்மாவின் இழப்பு என்பது சின்ன அம்மாவுக்கு மிகப் பெரிய இழப்பு.’’

‘‘‘சசிகலாவுக்கு பொறுப்புகள் கொடுப்பதற்கு கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளதே?’’

‘‘அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக வருவதற்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்வதற்கும் எந்தவித எதிர்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சில விஷமிகள்... சின்ன அம்மா வரக் கூடாது என்பதற்காகத் திட்டம் போட்டு இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பிவிடுகிறார்கள். அம்மாவை வீழ்த்துவதற்காக அரசியல் எதிரிகளின் சக்திகள் எப்படி முனைப்போடு செயல்பட்டார்களோ... அதே சக்திகள்தான், இப்போதும் ஒன்றுசேர்ந்து, சின்ன அம்மா விஷயத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள்.’’

ஆட்சியும்... கட்சியும் சின்ன அம்மாவிடம் இருக்க வேண்டும்! - வளர்மதி பேட்டி

‘‘அ.தி.மு.க-வினர் கோரிக்கையை சசிகலா ஏற்றுக்கொண்டுவிட்டாரா?’’

‘‘இன்னும் அவர், அதுபற்றி எதுவும் சொல்லவில்லை. நாங்கள் எல்லோரும் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். பொதுச்செயலாளர் தேர்வு பற்றிக்கூட பல விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் தூள்தூளாக்கும் விதத்தில் அனைவரும் ஒன்றுகூடி சின்ன அம்மாவைத் தேர்வு செய்வோம். அம்மா, சிறைக்குச் சென்றபோது... அவர், ஓ.பி.எஸ்-ஸைத்தான் முதலமைச்சராகத் தேர்வு செய்தார். அம்மா விடுதலை பெற்று வந்தவுடன் அவரே மீண்டும் முதல்வரானார். அதுபோல், சின்ன அம்மாவும் பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க-வினரின் விருப்பம்.’’ 

‘‘ ‘ஓ.பன்னீர்செல்வத்தை மாற்றிவிட்டு, சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டும்’ என்று அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களே சொல்வது சரிதானா?’’

‘‘ஆட்சியும், கட்சி நிர்வாகமும் ஒரே இடத்தில் இருக்கிறபோதுதான்... அதாவது அம்மா, ஆட்சியில் இருந்தபோது மக்களுக்காக மகத்தான திட்டங்களை எல்லாம் செய்து... ஏழை எளிய மக்களின் மனதில் இடம்பிடித்ததுபோல சின்ன அம்மாவாலும் இடம்பிடிக்க முடியும். அதனால்தான், ஆட்சியும் கட்சியும் ஒருவரிடத்தில் இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க-வில் இருக்கும் அனைவரும் விரும்புகிறார்கள். அதற்குக் காரணம், ஆட்சி ஓர் இடத்திலேயும், கட்சி ஓர் இடத்திலேயும் இருந்தால்... `அதிகாரம் செலுத்துகிறார்கள்; அடிமைப்படுத்துகிறார்கள்’ என்றெல்லாம் விமர்சனங்கள் வரும். ஆகவே, அவை இரண்டும் ஒருவரிடத்தில் இருந்தால் ஆட்சியும் இயக்கமும் சிறப்பாக இருக்கும்.’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.