News
Loading...

ஆளில்லாத போயஸ் தோட்டத்தில் எதற்கு அதிக எண்ணிக்கையிலான காவலர்கள்?

ஆளில்லாத போயஸ் தோட்டத்தில் எதற்கு அதிக எண்ணிக்கையிலான காவலர்கள்?

போயஸ் தோட்ட இல்லத்தில் அதிக எண்ணிக்கையிலான காவலர்களும், உயரதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரமீறல் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில், காவல்துறை சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவின் முக்கியமான அணியைச் சேர்ந்த, நன்கு பயிற்சியளிக்கப்பட்ட 240 பேர் இன்னமும் பணியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள்-காவலர்கள் என கூடுதலாக 60 பேரும் அங்கு பாதுகாப்பு பணி என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது போயஸ் தோட்ட இல்லத்தில், அரசியல் சட்டரீதியிலான அதிகாரம் படைத்தவர்களோ மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களோ யாரும் இல்லை என்பதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், அங்கே இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான காவலர்களும் உயரதிகாரிகளும் பாதுகாப்பு என்ற பெயரில் பணியில் நியமிக்கப்பட்டிருப்பது, அரசாங்கத்தின் காவலர்களை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்தும் இழிவான செயலாகும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையை சீரழிக்கும் இத்தகைய அதிகார மீறல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறையின் தலைவரையும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தி.மு.க. சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்