News
Loading...

வார்தா புயல் தாண்டவம்: பலத்த காற்று, கனமழையால் சென்னை தத்தளிப்பு

'வார்தா' புயல் தாண்டவம்: பலத்த காற்று, கனமழையால் சென்னை தத்தளிப்பு

திதீவிர 'வார்தா' புயல் திங்கள்கிழமை மாலை கரையைக் கடந்தது. சூறைக்காற்றாலும் கனமழையாலும் தத்தளித்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மாலை 6.30 மணியளவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிதீவிர வார்தா புயல் சென்னை அருகே மாலை 3 மணியில் இருந்து 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை இருந்தது.

வார்தா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை தொடரும். காற்றின் வேகம் மணிக்கு 60-ல் இருந்து 70 கிலோமீட்டராக குறையும்" என்றார் அவர்.

புயல் பாதிப்புக்கான ஹெல்ப்லைன்கள்:

சென்னை மாநகராட்சி வாட்ஸப் எண்கள்: 94454 77207, 94454 77203, 94454 77206 , 94454 77201, 94454 77205

சென்னை மாநகராட்சி அவசர உதவி தொலைபேசி எண்கள் - 25619206, 25619511 , 25384965 ,25383694, 25367823, 25387570

புதுச்சேரி : 1077, 1070 | கடலூர் | 1077, 04142 220700, 231666

22 ஆண்டுகளுக்கு பிறகு...

இதற்கிடையே மத்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், சென்னையில் 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு, இதுபோன்ற மோசமான புயலை சென்னை சந்தித்த தகவலும் வெளியாகியுள்ளது.

முதல்வர் வேண்டுகோள்:

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வார்தா புயல் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது.

புயலின் கோர தாண்டவம்...

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, 4 நாட்களுக்கு முன்பு 'வார்தா புயலாக உருமாறியது. தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய இந்த புயல், பின்னர் அதிதீவிர புயலாக மாறியது.

இந்த வர்தா புயல் கரையை நெருங்க, நெருங்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் லேசான காற்றும், மழையும் தொடங்கியது. திங்கள்கிழமை காலையில் காற்றின் வேகமும், மழையும் மேலும் அதிகமானது.

ஆயிரக்கணகான மரங்கள் சாய்ந்தன...

சுமார் 12 மணி அளவில் உச்சநிலையை அடைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் சூரைக்காற்று பேயாட்டம் ஆடியது. கனமழையம் கொட்டித் தீர்த்து. அதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலையில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பெயர்ந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அவசரம் கருதி வெளியில் வந்தவர்களின் வாகனங்கள், ஆங்காங்கே திருப்பி விடப்பட்டன. விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டனர். அவர்கள் அறுவை இயந்திரங்கள் மூலமாக அறுத்து, ஜேசிபி இந்திரங்கள் மூலமாக அகற்றி, உடனடியாக சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.

வீடுகளிலேயே முடங்கிய மக்கள்

இந்த புயல் உருவான உடனேயே அரசின் வருவாய்த்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, போதிய மீட்புக் குழுக்களை ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளைத் அழைத்து தயார் நிலையில் நிறுத்தவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவை வழங்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் கூட, அந்தந்த மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் முடுக்கி விடப்பட்டனர். அரசும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று முன்கூட்டியே அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிட்டிருந்தது.

நீண்ட நேரம் கெடாமலிருக்கும் உணவுகளை சமைத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக, புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், மக்கள் வீடுகளிலே முடங்கி, நிம்மதியாக இருந்தனர். முன்கூட்டியே பொதுமக்கள் காய்கறிகள், பால், கேன் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டிய வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டனர். இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

அமைச்சர்கள் ஆய்வு:

சென்னையில் 30 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துறை செயலர் க.பணீந்திரரெட்டி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மேற்பார்வை அலுவலர் காக்கர்லா உஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

'வார்தா' புயல் தாண்டவம்: பலத்த காற்று, கனமழையால் சென்னை தத்தளிப்பு

அதி தீவிர 'வார்தா' புயலின் தாக்கத்தால் மிக பலத்த காற்று மற்றும் கன மழையின் எதிரொலியாக, சென்னையில் ஏற்பட்ட சேதங்களின் புகைப்படத் தொகுப்பு.

முந்தையச் செய்திப் பதிவுகள் (மாலை 5 மணி):

வார்தா புயல் தாண்டவமாடுவதன் விளைவாக, சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு, இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது.

அதிதீவிர 'வார்தா' புயலின் மையப்பகுதி திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை துறைமுகம் பகுதியில் கரையைக் கடந்தது. இந்தப் புயல் இப்போது கிழக்குப் பகுதியைக் கடந்துகொண்டிருக்கிறது. மாலை 6.30 மணியளவில் புயல் முற்றிலும் கடந்துவிடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் 5 மணியளவில் தெரிவித்தது.

இந்தத் தகவலை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், புயல் கரையைக் கடக்கும் வரை காற்றின் வேகம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மரக்காணம் வரை மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

காற்றின் வேகம் 70-ல் இருந்து 80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். இது 100 கிலோமீட்டர் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

சென்னையில் பிற்பகல் 3.20-ல் இருந்து 4.20 வரை சற்றே அமைதி நிலவி வந்த சூழலில், மீண்டும் புயலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கனமழையும் நீடிக்கிறது.

ஒட்டுமொத்தமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிட்டது. எல்லா விதமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்த நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முந்தையச் செய்திப் பதிவுகள் (3.30 மணி):

அதிதீவிர புயலான வார்தா சென்னை அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. முதற்கட்டமாக புயலின் மேற்கு பகுதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. தற்போது, புயலின் மையப் பகுதி கடந்து வருகிறது. புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்போது அமைதி நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 மணிக்குப் பின் புயலின் மூன்றாவது பகுதி கரையைக் கடக்கும்.

இதற்கிடையில் வார்தா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்தபோது 192 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு 3 மணி நிலவரம்:

வார்தா புயலில் மையப் பகுதி தற்போது கரையைக் கடக்கத் தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வார்தா புயலின் மேற்குப் பகுதி கரையைக் கடந்துவிட்டது. மையப் பகுதி தற்போது கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. 3 முதல் 4 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். மாலை 4 மணி முதல் 7 மணி வரை வார்தாவின் கிழக்குப் பகுதி கரையைக் கடக்கும். அப்போது பலத்த காற்று வீசும். இவ்வாறாக படிப்படியாக மூன்று நிலைகளில் வார்தா கரையை கடக்கும். இரவு 11.30 மணியளவில் வார்தா புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* புயல் நிவாரணப் பணிகளுக்காக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 266 முகாம்களில் 95 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மூன்று மாவட்டங்களில் 8008 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.

* சென்னையில் இருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதுதவிர சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* அடையாறு திருவிக பாலத்தில் மின் கம்பங்கள் சாய்ந்தன.

* வார்தா புயல் காரணமாக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

* சென்னை சாந்தோம், ராதாகிருஷ்ணன், கதீட்ரல் சாலைகளில் மரங்கள் விழுந்திருப்பதால் வேறு பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

* இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பி.தம்பி, "2.30 மணிக்கு மேல் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும். புயல் முழுமையாக கடந்து செல்ல மாலை 6 மணியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

* சென்னையில் நகர் முழுவதும் அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதாக அதிமுக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* "சென்னை வாழ் பொதுமக்கள் இன்று (12.12.2016) பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை மறு அறிவிப்பு வரும் வரை தங்களது வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே வெளியே சென்றவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய முன்னறிவிப்பு:

வார்தா புயல் பிற்பகல் 3.30 மணிக்கு மையப் பகுதி கரையைக் கடக்கும்

புயலின் மொத்த சுற்றளவு 90. கி.மீ அளவில் உள்ளது

புயலின் தாக்கம் 6 மணி வரை இருக்கும்

* வார்தா புயலின் மையப்பகுதி கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 130 கி.மீ. முதல் 140 கி.மீ. வரை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* சென்னையில் பலத்த சூறைக் காற்று வீசிவருவதால் காற்றின் வேகம் குறைந்த பிறகே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* வார்தா புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணிக்கு கரையைக் கடக்கும் தற்போது புயலின் ஒரு பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

* திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பலத்த காற்று வீசி வருகிறது. மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது.

* சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* செயற்கைக்கோள் புகைப்படத்தின் தகவலின்படி வார்தா புயல் கரையைக் கடந்துவிட்டதாக கூறப்பட்டுவரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

* "வார்தா புயல் இன்று காலை 9.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கே 87 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தற்போது அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வார்தா புயலானது இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும். இதனால் தெற்கு ஆந்திரா, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக 1 மீ. உயரத்துக்கு எழக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பகல் 2 மணி முதல் 5 மணிக்கு இடையே வார்தா புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* வார்தா அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 50 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

* சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்குகிறது.

* சென்னை நேப்பியர் பாலம் - காமராஜர் சாலையில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

* திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வார்தா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வார்தா அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 87 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

* சென்னை வர வேண்டிய 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 25 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* உதவி எண்கள் அறிவிப்பு:

வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொலைபேசி எண்கள்:

044 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570

வாட்ஸ் அப் எண்கள்:

94454 77201, 94454 77203, 94454 77205, 94454 77206, 94454 77207

'வார்தா' புயல் தாண்டவம்: பலத்த காற்று, கனமழையால் சென்னை தத்தளிப்பு

* ரயில்கள் ரத்து:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:

ரயில் எண்: 66026 - சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் - முழுமையாக ரத்து

ரயில் எண் 12711 - விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 12712 - மதியம் 2.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 66030 - நெல்லூர் - சூலூர்பேட்டை இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* காலை 9.30 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. அளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* 'வார்தா' புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் - குமிடிப்பூண்டி இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என்ற வீதத்திலேயே ரயில் இயக்கப்படுகிறது.

* வார்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* வார்தா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 3500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* வார்தா என்ற பெயரை பாகிஸ்தான் நாடு சூட்டியுள்ளது. வார்தா என்றால் 'சிவப்பு ரோஜா' என்று அர்த்தம்.

* சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில்: வார்தா புயல் சென்னைக்கு அருகே 150 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

* மணிக்கு 13 கி.மீ வேகத்தில்: வார்தா புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தற்போது முன்னேறி வருகிறது. அது இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'வார்தா' புயல் தாண்டவம்: பலத்த காற்று, கனமழையால் சென்னை தத்தளிப்பு

முந்தைய செய்தி:

கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.

அது, மேலும் வலுப்பெற்று புயலாகியது. இதற்கு ‘வார்தா’ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து வார்தா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

வார்தா புயல் உருவானதிலிருந்து தமிழகத்திலுள்ள துறைமுகங்களுக்கு 11-வது முறையாக எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மிக அபாயகரமான எச்சரிக்கையாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக் கால் ஆகிய துறைமுகங்களில் 8-ம் எண், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், அந்த துறைமுகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...