ஐரோப்பிய யூனியனில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு பிரிட்டன் வெளியேறியபோது, பலரும் அதை அபாயகரமான திருப்பமாகப் பார்த்தனர். பிரெக்ஸிட்டின் தாக்கம் படர்ந்து, பரவி, சர்வதேச அளவில் வலதுசாரி சித்தாந்தம் பலம்பெற்றுவிட்டால், உலக ஒற்றுமை என்னவாகும் என்பதே அவர்கள் கவலை. டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வானதும் அந்தக் கவலை அர்த்தம் இழந்துவிட்டது. உலக உருண்டை வலதுசாரிகளின் கரங்களுக்குப் போய்ச் சேர்ந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்னும் உண்மை சட்டென உரைத்தது.
பிரெக்ஸிட்டையும் டொனால்டு ட்ரம்பையும் மட்டும் வைத்து இந்த முடிவுக்கு அவர்கள் வரவில்லை. உலகம் முழுக்கவே ஒரு பேரலை போல இந்த மாற்றம் நிகழத் தொடங்கியிருக்கிறது. முதலில் பிரான்ஸ்.
‘நம் நாடு, கடந்த காலங்களில் அமல்படுத்திய காலனி ஆதிக்கக் கொள்கைகளுக்காக நாம் அவமானப்பட வேண்டும்’ என்ற ஒரு வரி, பிரான்ஸின் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கிறது. ஆப்பிரிக்கா, ஆசியா, வடஅமெரிக்கா... தொடங்கி பல நாடுகளை பிரான்ஸ் முன்னர் அடிமைப்படுத்தியிருந்தது வரலாற்று உண்மை. ஆனால், இந்த வரியைப் பாடப் புத்தகங்ளில் இருந்து நீக்கவேண்டும் எனக் கோரியிருக்கிறார் பிரான்ஸின் பிரதமராக இருந்த பிராங்கோயிஸ் ஃபிலோன். 2017-ம் ஆண்டு அந்த நாட்டில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ரிபப்ளிக்கன்ஸ் நாமினியாகக் களத்தில் நிற்கிறார் அவர்.
இவருடைய வாதம் எளிமையானது. பிரான்ஸ் தவறுகளே செய்யவில்லை என்பதால், மன்னிப்பும் கேட்கவேண்டியது இல்லை. `பிரான்ஸ், பிற நாடுகளை ஆக்கிரமித்தது' எனச் சொல்வது தவறு, ‘நம் கலாசாரத்தை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டோம், அவ்வளவுதான்’ என்கிறார். பிரிட்டன் இந்தியாவை அடிமைப்படுத்தவில்லை தன் கலாசாரத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொண்டது என்னும் வாதத்துக்கு ஒப்பானது இது. இருந்தும் பிரான்ஸில் கணிசமானவர்கள் ஃபிலோனின் வாதத்தை ஏற்றுக்கொண்டிருப்பதோடு, அவரை ஓர் அதிபர் வேட்பாளராகவும் உயர்த்தியிருக்கிறார்கள். இன்று அவர் பிரான்ஸின் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர். அவர் முன்வைக்கும் வலதுசாரி கருத்துக்களுக்கு அங்கே ஆதரவு வளர்கிறது. இஸ்லாம், மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது இவருடைய ஆழமான நம்பிக்கை. வேற்றுமையில் ஒற்றுமை, எல்லா கலாசாரங்களும் சமமானவை போன்றவை அர்த்தமற்றப் பொய்கள் என்பது இவருடைய நம்பிக்கை.
இந்த ஃபிலானுக்கு, கடும்போட்டியாளராக இருப்பவர் மரின் லா பென். நேஷனல் ஃபிரண்ட் கட்சியைச் சேர்ந்தவர். மனிதர்களுக்கு இடையில் நிச்சயம் இனவேறுபாடுகள் உள்ளன என்று திடமாக நம்பும் பாரம்பர்யமிக்க கட்சி அது. அந்தப் பாரம்பர்யத்தை மேலும் வளர்க்கிறார் லா பென். `ஐரோப்பாவின் டொனால்டு ட்ரம்ப்' என இவரை பலரும் அழைக்கிறார்கள்.
அடுத்து ஜெர்மனி... பராக் ஒபாமாவுக்குப் பிறகு, மேற்கு உலக நாடுகள் ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்கெலைத்தான் நம்பிக்கையுடன் உயர்த்திப் பிடித்தன. பன்முகக் கலாசாரத்தை மெர்கெல் முன்மொழிந்தது அதற்கு ஒரு காரணம். அகதிகளைச் சேர்க்கக் கூடாது என ஐரோப்பா முழுவதிலும் இருந்து தீவிரமான குரல்கள் வலுத்தபோது, ஜெர்மனியின் கதவுகளை அவர் திறந்துவிட்டார். ஆனால், அந்தக் கதவுகளை இழுத்து மூடும் முயற்சியை அங்கும் வலதுசாரிகள் தீவிரமாக முன்னெடுக்கின்றனர். இனியும் ஜெர்மனி லிபரலாக இருக்கக் கூடாது, அமெரிக்காவைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் எனப் பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டனர். அவர்களில் `ஆல்ட்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ என்னும் தீவிர வலதுசாரி கட்சி குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பக்கம், ஏஞ்சலா மெர்கெலை மெள்ள மெள்ளக் கைவிட்டுவருகிறார்கள் ஜெர்மானியர்கள். நாம் மட்டும் ஏன் அகதிகளை ஏற்க வேண்டும், நாம் மட்டும் ஏன் பல்வேறு கலாசாரங்களோடு அனுசரித்துப்போக வேண்டும்... எனக் கேட்பவர்களின் எண்ணிக்கை அங்கே அதிகரித்துவருகிறது. ஜெர்மனி வலதுபக்கமாகச் சாய்ந்துவருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இவை.
இடதுசாரிகளின் இதயமாக ஒருகாலத்தில் இருந்த ரஷ்யா, இன்று டொனால்டு ட்ரம்போடு இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறது. விளாதிமிர் புடினை `வலதுசாரி' எனச் சொல்லாமல், வேறு எப்படி அழைக்க முடியும்? இந்தியாவில் நரேந்திர மோடியின் தலைமையில் வலதுசாரிகள் பெற்ற புத்தெழுச்சியையும் இத்துடன் இணைத்துப்பார்க்க வேண்டும்.
பெரிய நாடுகள் மட்டும் அல்ல, சிறிய நாடுகளில்கூட வலதுசாரிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. உதாரணத்துக்கு, கிரேக்கம். டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக, அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னரே கிரேக்கத்தில் இருந்து கோல்டன் டான் என்னும் கட்சி குரல் கொடுத்திருக்கிறது. ட்ரம்ப் வெற்றிபெற்றதும் கிரேக்க நாடாளுமன்றத்தில் அவரை வாழ்த்தி வரவேற்று ஆதரவு தெரிவித்திருக்கிறது கோல்டன் டான். ட்ரம்பின் வெற்றி அவர்களை பல மடங்கு உற்சாகப்படுத்தியிருக்கிறது என்னும் செய்தியை அச்சத்துடன்தான் படிக்கவேண்டும். காரணம், கோல்டன் டான் ஒரு தீவிர நவ நாஜி கட்சி.
`வாஷிங்டன் போஸ்ட்' சமீபத்திய கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டுவதைப்போல் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மட்டும் அல்ல; ரஷ்யா, துருக்கி, இந்தியா, பிலிப்பைன்ஸ் எனத் தொடங்கி, உலகின் பல மூலைகளில் வலதுசாரிகள் பலம்பெற்றிருக்கிறார்கள் அல்லது ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் வெற்றியோடு சேர்த்து கருத்தியல் ரீதியாகவும் அவர்கள் மக்களை வயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை, பின்வரும் நான்கு அம்சங்கள் உறுதிசெய்கின்றன.
1 - ‘உலக அமைதி, சர்வதேசப் பொருளாதாரம், மனிதகுலமேன்மை பற்றி எல்லாம் இனியும் என்னால் கவலைப்பட முடியாது. எனக்கு என் நாடு முக்கியம்’ என்பது போன்ற தீவு மனப்பான்மை அதிகரித்திருக்கிறது.
2 - ‘என் நாடு உயர்ந்தது; என் கலாசாரம் சிறப்பானது; என் மொழி, என் இனம் மட்டுமே மேன்மையானது’ என்ற தற்பெருமை அதிகரித்திருக்கிறது.
3 - ‘என் பொருளாதாரத்தை, என் வேலைகளை, என் வாய்ப்புகளை நான் எதற்காக முன்பின் தெரியாத அந்நியர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்?’ என்பது போன்ற வேலி போடும் அணுகுமுறை அதிகரித்திருக்கிறது.
4- ‘இஸ்லாமியர்கள் ஆபத்தானவர்கள்; ஆசியர்கள் விரட்டப்படவேண்டியவர்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு இங்கு என்ன வேலை?’ என்பது போன்ற வெறுப்பு அரசியல் முன்னெப்போதையும்விட இப்போது வளர்ந்திருக்கிறது.
இது சமீபத்திய வளர்ச்சிப்போக்கு அல்ல. கடந்த 15 ஆண்டுகளாகவே அமெரிக்கா, பிரிட்டன் போக, டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மனி... தொடங்கி உலகம் முழுவதிலும் பரவலாக வலதுசாரி இயக்கங்கள் தொடர்ச்சியாக செழிப்பு அடைந்துவருகின்றன. நாம்தான் போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தி இதை ஆராயவில்லை.
வலதுசாரி அமைப்புகளின் எழுச்சி என்பது, இடதுசாரிகளின் வீழ்ச்சியோடு நேரடியாகத் தொடர்புடையது. தேர்தல் களத்தில் மட்டும் அல்ல; கருத்தியல் தளத்திலும் இடதுசாரிக் கட்சிகளும் லிபரல் - மையவாதக் கட்சிகளும் செல்வாக்கு இழந்துவருவதைத் தெளிவாகக் காண முடிகிறது. இந்தியா முதல் அமெரிக்கா வரை அதற்காகச் சாட்சியங்கள் பரவியிருக்கின்றன.
ஒருகாலத்தில் தீவிர வலதுசாரிகள் நாஜி கொடியை உயர்த்திப் பிடிப்பது, வெளிப்படையாக வெறுப்பைக் கக்குவது, அவ்வப்போது வன்முறையில் இறங்குவது, பாசிச அழித்தொழிப்புச் சிந்தாந்தத்தை ஆதரிப்பது... போன்ற வழிமுறைகளைக் கையாண்டுவந்தார்கள். நவீனமயமாகிவிட்ட இன்றைய உலகில் இந்த வழிகள் இனியும் பயன்தராது என்பதால், அவர்கள் தங்கள் அணுகுமுறையையும் சித்தாந்தத்தையும் நாகரிகமான முறையில் வளர்த்தெடுக்கிறார்கள்.
உதாரணத்துக்கு, உடனடியாகப் பக்கத்து நாட்டை ஆக்கிரமித்து அவர்கள் செல்வத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் எனச் சீற்றத்துடன் முழங்குவதற்குப் பதில், ‘ஒடுக்குமுறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் அண்டை நாட்டு மக்களை விடுவிக்க நாம் மனிதாபிமான அடிப்படையில் தலையீடு செய்யவேண்டும்’ எனக் கோருகிறார்கள். ‘அந்நியர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம்’ என, பொட்டில் அடித்தாற்போல் சொல்வதற்குப் பதில் `ஏற்கெனவே குறைந்துகொண்டிருக்கும் நம் நாட்டின் வளங்களை நம் மக்கள் பயன்படுத்துவதுதானே நியாயம்?’ என அமைதியாக தர்க்கம் பேசுகிறார்கள். பிரான்ஸில் லா பென் தன் கட்சியை இப்படித்தான் முழுமுற்றாக நவீனப்படுத்தியிருக்கிறார்.
இன்னொரு நூதனமான வழியையும் நவீன வலதுசாரிகள் பயன்படுத்தத் தொடங்கியிருக் கிறார்கள். இடதுசாரிகளும் லிபரல்வாதிகளும் திகைத்துப் பின்வாங்கும் அளவுக்கு முற்போக்குச் செயல்திட்டங்களை அவர்களிடம் இருந்து அபகரித்து, அவற்றைத் தமதாக்கிக்
கொள்கிறார்கள். தங்களுடைய வழக்கமான வெறுப்பு அரசியலோடு இந்த முற்போக்குத் திட்டங்களையும் கலந்து அளிக்கும்போது, தவிர்க்க இயலாதபடி மக்களின் ஆதரவு அதிகரிக்கத் தொடங்குகிறது. கவனிக்கவும். டொனால்டு ட்ரம்புக்கு அதிக வாக்குகள், வெள்ளை அமெரிக்கத் தொழிலாளர்களிடம் இருந்தும் வெள்ளை ஏழை, நடுத்தரக் குடும்பத்தினரிடம் இருந்தும்தான் கிடைத்திருக்கின்றன.
இவர்கள் போக, பல்வேறு உதிரிக் கட்சிகளும் இயக்கத்தினரும் சிறிய குழுக்களும் மிதமான, தீவிரமான, அதிதீவிரமான வலதுசாரி அரசியல் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் நெருங்கிச் சென்று ஆராய்வது அவசியம். இந்த இடத்தில் ஹிட்லரின் உருவம் மனதில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆரம்பத்தில் அவரும்கூட ஓர் உதிரிதான். மெள்ள மெள்ளப் பேசிப் பேசித்தான், அவர் ஜெர்மானியர்களைக் கரைத்தார்.
ஹிட்லரின் சிந்தனை, அணுகுமுறை, செயல்பாடு அனைத்தும் தவறானவை என்றாலும், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதன் பொருள் ராணுவக் கலகமோ, ஆட்சிக் கவிழ்ப்போ நடத்தித்தான் ஒரு சர்வாதிகாரி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அவசியம் இல்லை. மேடையில் பேசி, சுவரொட்டி அடித்து, ஃபேஸ்புக்கில் பரப்புரை செய்து, அமைதியாக மக்கள் மனதையும் ஓட்டுக்களையும் கவர்வது இன்று சாத்தியம். ஆம்... சர்வாதிகார ஆட்சியை அமைப்பதற்கு, இன்று ஜனநாயகமே சிறந்த குறுக்கு வழி.
வரலாறு, இன்னொன்றையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. வலதுசாரி தலைவர்கள், தன்னிச்சையாக எழுச்சிப் பெற்றுவிடுவது இல்லை. அவர்களைக் கைத்தட்டி வரவேற்று ஆரவாரம் செய்பவர்கள் மக்களில் ஒரு பிரிவினர்தான். அவர்களுடைய ஆதரவுடன்தான் வெறுப்பு அரசியல் அவர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது.
மக்களின் அச்சங்களையும் எதிர்பார்ப்பு களையும் அரசியல் உணர்வற்ற நிலையையும் பயன்படுத்திக்கொண்டுதான், இந்தத் தலைவர்கள் மேலே எழுந்துவருகிறார்கள். எனவே, நாம் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான், மனிதர்களை சக மனிதர்களோடு இணைக்கும் மக்கள் அரசியலை அவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அது ஒன்றே வெறுப்பு அரசியலை வீழ்த்தும்!
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.