News
Loading...

கட்சியை வளர்த்ததில் சசி அத்தைக்கும் பங்கு இருக்கிறது: தீபக் பேட்டி

தீபக்

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நடந்த அன்று, மொத்த தமிழகமும் ஆச்சர்யத்துடன் கவனித்த நபர் தீபக் ஜெயக்குமார். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், தனியாக நின்று கொண்டிருந்தவரை, கையைப்பிடித்து சசிகலா அழைத்துவந்தார். இந்தக் காட்சியை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்கு, அவர் யார் என்றே தெரியவில்லை. அதனால், அந்த நேரத்தில் ‘அவர் யார்’ என்பதுதான், தமிழகத்தின் ஒரே கேள்வியாக இருந்தது. அவர்தான் ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். அவரைச் சந்தித்தோம்.

‘‘தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் நீங்கள். அவருக்கு இருக்கும் ஒரே ரத்த சொந்தம். இவ்வளவு நாட்களாக எங்கு மறைந்து இருந்தீர்கள்?’’

‘‘நான் எங்கேயும் மறையவில்லை. இங்கேதான் இருந்தேன். போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டு   இருந்தேன்.  அத்தை அப்போலோ மருத்துவமனையில் இருந்த, 75 நாட்களில், 5 நாட்கள் தவிர மீதி அனைத்து நாட்களும் அங்குதான் இருந்தேன். அத்தை 2-வது தளத்தில் ‘கிரிட்டிக்கல் கேர் யூனிட்’-ல் இருந்தார். நான், சசி அத்தை (சசிகலாவை அப்படித்தான் அழைக்கிறார்) அவர்களுடைய குடும்பத்தினர் என எல்லோரும் மூன்றாவது தளத்தில் இருந்தோம். அத்தைக்கு உடல்நிலை தேறியபிறகு, 5 நாட்கள் மட்டும் நான் அங்கு இல்லை. அப்போது, வெளியூர் போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.’’

‘‘ஜெயலலிதாவுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மிகப் பெரிய இடைவெளி இருந்ததாகவும், அதைச் சிலர் திட்டமிட்டு ஏற்படுத்தியதாகவும் சொல்கிறார்களே?’’

‘‘எங்களுக்குள் எந்த ‘கேப்’பும்  இல்லை. சண்டை இல்லாத வீடு என்று ஏதாவது இருக்கிறதா? அதுபோல், சில சண்டைகள் வந்தன. ஆனால், அதற்காக நிரந்தர ‘கேப்’ என்று எப்போதும் இருந்தது இல்லை. அத்தை, எப்போது கூப்பிட்டாலும் நான் போவேன். எனக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் கேட்பேன். அவர்களுடைய அரசியல் வாழ்க்கைக்குள் நாங்கள் தலையிட்டது இல்லை. அதுபோல, எங்களுக்கு இந்த முக்கியத்துவம் வேண்டும்; இந்த இடத்துக்கு எங்களைக் கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்று நாங்கள் அவரை நிர்பந்தம் செய்தது இல்லை.’’

‘‘ஜெயலலிதா நன்றாக இருந்தபோது, கடைசியாக நீங்கள் எப்போது போயஸ் கார்டன் வந்தீர்கள்?’’

‘‘4 மாதங்களுக்கு முன்பு, போயஸ் கார்டன் வீட்டில் ஒரு பூஜை நடந்தது. அதில், சங்கல்பம் செய்வதற்கு அழைத்தார்கள். அதற்காக வந்தேன். மதியம், அங்கேயே சாப்பிட்டுவிட்டு இரவு திரும்பினேன். சில நாள்களில் இரவு லேட்டாகிவிட்டால், போயஸ் கார்டனிலேயே தங்குவேன். ஆனால், அங்கு இருப்பது எனக்குக் கொஞ்சம் சிரமம். அத்தை மிகவும் கண்டிப்பாக இருப்பார். அதனால், ஒரு ரோபோட் போல இருக்க வேண்டும். அதுபோல ஏகப்பட்ட கட்டுப்பாடு. அதனாலேயே நான் அதிகமாக அங்கு தங்கமாட்டேன்.’’

‘‘உங்கள் சகோதரி தீபாவுக்கு மட்டும் ஏன் போயஸ் கார்டனில் இவ்வளவு தடை?’’

‘‘தீபா, அவராக அந்த ‘கேப்’-ஐ உருவாக்கிக் கொண்டார். ஆனால், நான் எப்போதும் அத்தையோடு பேசிக்கொண்டே இருந்தேன். அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்துபோய்க் கொண்டு இருந்தேன். எனக்குத் தேவையான உதவிகளை கேட்பேன். அதை அவர்கள் செய்தார்கள். தீபா அப்படி எதுவும் கேட்கவும் இல்லை. அதுபோல, அத்தை என்னைத் திட்டாத நாட்கள் குறைவு. யாராவது, நம்மளப் பத்தி எதையாவது அவரிடம் சொல்லிவிடுவார்கள். உடனே, அவர் என்னைக்கூப்பிட்டுக் கேட்பார்; கண்டிப்பார்; திட்டுவார். நான் விளக்கம் கொடுப்பேன். ஆனால், தீபா அப்படிச் செய்யவில்லை. கோபத்தில் அத்தை தீபாவை திட்டியபோது, ‘என்னை ஏன் திட்டுகிறார்கள்’ என்று அவருக்கும் கோபம் வந்தது. அது அப்படியே இடைவெளியாக மாறியது.’’

‘‘ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, பல சந்தேகங்களை எழுப்புகின்றனர். சசிகலா குடும்பத்தினர் மீது பழி சுமத்துகின்றனர். அதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ 

‘‘அப்போலோ மருத்துவமனை என்பது, ஒரே ஒரு டாக்டர் மட்டும் இருந்து ‘ட்ரீட்மென்ட்’ கொடுக்கும் இடம் இல்லை. பல டாக்டர்கள் சேர்ந்து அத்தைக்கு ‘ட்ரீட்மென்ட்’ கொடுத்தனர். லண்டன் டாக்டர், மத்திய அரசின் எய்ம்ஸ் டாக்டர்களோடு, அப்போலோ டாக்டர்களும் ஒரு குழுவாக இருந்து அத்தைக்கு ‘ட்ரீட்மென்ட்’ கொடுத்தனர். அவர்கள்  சொல்லும் விவரங்களை சொல்வதற்கும், ட்ரீட்மென்ட் எப்படிபோகிறது என்பதையும் சிவக்குமார் (சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவின் கணவர்) அண்ணன் பார்த்துக்கொண்டார்.

சிவக்குமார் அண்ணன், ‘ட்ரீட்மென்ட்’ கொடுக்கவில்லை. அத்தைக்கு கொடுத்த, ‘ட்ரீட்மென்ட்’க்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அவர் சர்ஜன். ஆனால், அத்தைக்கு கொடுக்கப்பட்ட ‘ட்ரீட்மென்ட்’ டை அவர் கண்காணித்து வந்தார். மற்றபடி மருத்துவர்கள் சுயமாகத்தான் செயல்பட்டு முடிவுகள் எடுத்தனர்.’’

‘‘அ.தி.மு.க-வில் நீங்கள் இணைந்து செயல்படுவீர்களா?’’

‘‘அரசியலில் அத்தை பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அரசியல்  என்ன சாதாரணமான விஷயமா? உழைப்பு, தியாகம்... பிறகு கட்சிக்காரர்கள் நம்மை ஏற்க வேண்டும், அதன்பிறகு மக்கள் ஏற்கவேண்டும். அதனால், இப்போதைக்கு எனக்கு அந்த எண்ணம் எல்லாம் இல்லை.’’

‘‘சசிகலா அ.தி.மு.க-வில் பொறுப்புக்கு வரப்போகிறார் என்கிறார்கள்? அதை நீங்கள் ஆதரிப்பீர்களா?’’

‘‘அத்தை வளர்த்த கட்சி அது. அதில் சசி அத்தையின் பங்கும் இருக்கிறது. அதைப் பற்றி நான் என்ன சொல்ல? அதை அந்தக் கட்சிக்காரர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். சசி அத்தைக்கு நான், ‘சப்போர்ட்’ செய்தால் என்ன பிரயோஜனம்? நான் ‘சப்போர்ட்’ பண்ணவில்லை என்றால், அவர்களுக்கு என்ன நட்டம்? ஒன்றுமில்லை. ஒருவேளை நான் ‘சப்போர்ட்’ செய்தால், உடனே நீங்கள், ‘சசிகலா குடும்பம், தீபக்கை விலை கொடுத்து வாங்கிவிட்டார்கள்; அவனுக்கு ‘ஸ்லோ பாய்ஷன்’ கொடுத்துவிட்டார்கள்; மாந்த்ரீகம் செய்துவிட்டார்கள்; தீபக் விலைபோய்விட்டான்’ என்றெல்லாம் எழுதுவீர்கள்!”(சிரிக்கிறார்). 

‘‘தீபா அரசியலுக்கு வந்தால்,  உங்களின் அறிவுரை என்ன?’’

‘‘அது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தனிப்பட்ட உழைப்பு, தியாகம், கட்சிக்காரர்கள் கொடுக்கும் அங்கீகாரம் இருந்தால் வரலாம். என்னைக்கேட்டால், அத்தை அரசியலுக்காக தன்னை அர்ப்பணித்துவிட்டார். அவர் பட்ட கஷ்டத்தை நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அதனால், அது வேண்டாம் என்றுதான் தீபாவுக்கு சொல்வேன்.’’

‘‘நீங்களும் தீபாவும் போயஸ் கார்டன் வீட்டில் எவ்வளவு நாள் வளர்ந்தீர்கள்?’’ 

‘‘நாங்கள் கல்யாணி மருத்துவமனையில் பிறந்தோம். பிறந்ததும், எங்களைத் தூக்கிச் சென்றது போயஸ் கார்டன் வீட்டுக்குத்தான். எங்கள் இருவருக்கும் பெயர் வைத்ததும் அத்தைதான். அதன்பிறகு, தீபாவுக்கு 10, எனக்கு 2 வயது இருக்கும்போது, அங்கிருந்து தி.நகர் வீட்டுக்கு வந்தோம். தி.நகர் வீட்டில்தான் ஆரம்பத்தில் அத்தையும் இருந்தார். எங்கள் அப்பாவுக்கு அத்தைதான் திருமணம் செய்துவைத்தார். அதன்பிறகு, பாட்டி, அத்தை இருவரின் சம்பாத்தியத்தில் பாட்டி சேர்த்துவைத்து, போயஸ் கார்டன் நிலத்தை் வாங்கினார். அதில் வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்வதற்குள் பாட்டி இறந்துவிட்டார்.’’ 

‘‘ஜெயலலிதா உங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்தார்?’’

‘‘எங்கள் அப்பா 1995-ம் வருடம் இறந்தார். அப்போது இருந்து முந்தாநாள் வரை அவருடைய நிழலில்தான் நாங்கள் வளர்ந்தோம். அவர்தான் எங்களைப் பார்த்துக்கொண்டார். தீபாவாக இருந்தாலும் தீபக்காக இருந்தாலும் அதுதான் உண்மை.’’

கட்சியை வளர்த்ததில் சசி அத்தைக்கும் பங்கு இருக்கிறது: தீபக்

‘‘உங்களை பக்கத்தில் வைத்துக்கொண்ட சசிகலா குடும்பம், தீபாவை அப்போலோவில் அனுமதிக்கவில்லையே?’’

‘‘அப்போலோவில் முதல் நாள், என்னையும் அங்கிருந்த போலீஸ்காரர்கள் விடவில்லை. ‘உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை. சாரி... சார்’ என்று சொல்லிவிட்டனர். அப்போது இரவு ரொம்ப லேட்டாகிவிட்டது. அதனால் திரும்பிவிட்டேன். மறுநாள் போனபோதும், அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்களுக்கும் என்னைத் தெரியவில்லை. அவர்களிடம் விஷயத்தைச் சொன்னால் நம்பவே இல்லை. உடனே, பூங்குன்றத்தை (பூங்குன்றனை அப்படித்தான் சொல்கிறார்) போனில் அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவர் வந்து என்னை அழைத்துச் சென்றார். ஆனால், தீபா இதைச் செய்யாமல் பத்திரிகைகாரர்களிடம் பேசிவிட்டார். அதில் சசி அத்தைக்கு வருத்தம் இருந்தது உண்மை. நான் தீபாவுக்குப் பேசி, அவரை உள்ளே அழைத்துக் கொள்வதற்குள் அவர் மீடியாக்களில் நிறையப் பேசிவிட்டார். தீபா இடத்தில் நான் இருந்தால், அதைச் செய்திருக்க மாட்டேன். அத்தை முதலில் சரியாகி வரட்டும். வீட்டில் போய் பார்த்துக்கொள்வோம் என்று அமைதியாகி இருப்பேன். அத்தை வந்தபிறகு, நேரில்போய், ‘அந்த போலீஸ்காரனோ, சசி அத்தையோ, பூங்குன்றமோ என்னைத் தடுத்ததை சொல்லி சண்டை போடுவேன். அதில் தப்பே இல்லை. ஆனால், அவர் மருத்துவமனையில் இருக்கும்போது, மீடியாவில் போய் பேசி, அது அத்தை காதுக்கு வந்தால், அதுவும் அவர்களுக்கு ஒரு டென்ஷன்.’’

‘‘ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு இப்போது யார் வாரிசு. அது யாருக்குப் போகும்?’’ 

‘‘சொத்துக்கள் யாருக்குப்போய்ச் சேர வேண்டுமோ? அது அவர்களுக்கு சரியாகப் போகும். தவறான ஆட்களிடம் போக நானும் விடமாட்டேன்; சசி அத்தையும் விடமாட்டார்; சசி அத்தை, நடராஜன் அங்கிள் தவிர, வேறு யாராவது அதற்குள் வந்து உரிமை கொண்டாட முயன்றால், அதற்கு நானும் விடமாட்டேன். தீபாவும் விடமாட்டார். இந்த சொத்தை வைத்து, அத்தையின் நினைவாக ஏதாவது செய்கிறார்கள், ஏழைகளுக்கு உதவுகிறார்கள் என்றால், நானே முதல் ஆளாகப்போய் நிற்பேன்.’’

‘‘ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம், இப்போது கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறதே?’’

‘‘இன்றைக்கு இந்தக் கட்சியில் இருக்கும் அனைவருக்கும் தெரியும், இந்தக் கட்சியில் எங்கள் அத்தையின் உழைப்போடு, சசி அத்தையின் உழைப்பும் இருக்கிறது. அதுபோல், அத்தை மீது சசி அத்தை வைத்திருந்த அன்பும் விசுவாசமும், கட்சியில் இருக்கும் சீனியர்களுக்குத் தெரியும். சரி, இந்த உழைப்பு, அன்பு, விசுவாசத்தைவிடுங்கள்... இவை எல்லாவற்றையும்தாண்டி, எங்கள் அத்தை கடைசிவரை, சசி அத்தையைத்தான் கூடவே வைத்திருந்தார். இடையில் ஒரு நான்கு மாதங்கள், சசி அத்தையை வெளியில் அனுப்பினார்கள். 

அப்போது தினமும், நானும் சசி அத்தையும் பாம்பன் சுவாமி கோயிலுக்குப் போவோம். வரும் வழியில் எல்லாம், ‘என்ன செய்யுதோ... சாப்பிட்டுச்சோ... உடம்ப கெடுத்துக்குமோ’ என்று எங்கள் அத்தையைப் பற்றித்தான் சசி அத்தை புலம்பிக்கொண்டே வருவார். அந்த நான்கு மாதங்களைத்தவிர 34 வருஷம் என்று நினைக்கிறேன்... இத்தனை வருடங்களும், எங்கள் அத்தை இவரைத்தான் நம்பினார்கள்.

இப்போது, விஷம் வைத்துவிட்டார்கள் என்று ஏதேதோ சொல்கிறார்கள். அதை நான் நம்பவில்லை. அப்படி இருக்க வாய்ப்பும் இல்லை. மருத்துவமனையில், அத்தைக்கு ட்ரிக்கியோடாமி, ட்யூட் வைத்திருந்தார்கள். அதனால், அவரால் சரியாகப் பேச முடியாது. மாரடைப்பு வருவதற்கு முன்பு, 15 நாட்கள் நல்ல நலம் பெற்று இருந்தார். நடக்க முடியவில்லையே தவிர, மற்றபடி நல்ல நிலையில் இருந்தார். அப்போது, அவர் பக்கத்தில் இருக்கும் ‘சிலேட் பேட்’ ஒன்றில், ‘S’ என்று எழுதுவார். அவர் ‘S’ என்று எழுதினால், சசியைக் கூப்பிடு என்று அர்த்தம். உடனே, இவர் போனதும், எமோஷன் ஆகி அழுவார். அதனாலேயே, சசி அத்தையையும் இரண்டாவது தளத்துக்கு வர வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். உங்கள் முகத்தைப் பார்த்தால் சி.எம், ‘எமோஷனல் டிஸ்டர்ப்’ ஆகிறார், அதனால் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும், என் அத்தை இவர்களைத்தான் நம்பினார்கள். அதனால், நானும் நம்புகிறேன். இவர்கள் தப்பானவர்களாக இருந்திருந்தால், என் அத்தைக்குத் தெரிந்திருக்கும். மூடத்தனமாக ஒருவரை நம்புவதற்கு அவர் ஒன்றும் முட்டாள் அல்ல. அப்படியே அவர்கள் தப்பானவர்களாக இருந்தாலும், அவர்களைத்தான் என் அத்தை நம்பினார். அதனால், நானும் அவர்களைத்தான் நம்புவேன். எனக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் இல்லை. அத்தையை அம்மாவைப்போல்தான் நினைத்தேன். அதுபோல, சசி அத்தையையும் என் அம்மாவைப்போல்தான் நினைக்கிறேன். இவர்களைத்தவிர, வேறு யார் வந்தாலும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்!”

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...