News
Loading...

பணமற்ற பரிவர்த்தனைக்கு வழிகாட்டுகிறது குஜராத் கிராமம்

பணமற்ற பரிவர்த்தனைக்கு வழிகாட்டுகிறது குஜராத் கிராமம்

ப்போது அன்றாட பிரச்சினைகளில் மிக முக்கியமானது எந்த ஏடிஎம்-ல் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதுதான். எப்படியாவது பணத்தை எடுத்து மாதாந்திர செலவுகளை சமாளிக்கலாம் என்ற பிரச்சினை சேர்ந்துள்ளது. அலுவலகத்தில் பணி நேரம் தவிர, பயண நேரம் மட்டுமின்றி இப்போது வங்கிகளில் நிற்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆனால் இப்படி எந்த பிரச்சினையும் இல்லாமல் மக்கள் வழக்கமான சந்தோஷத்துடன் இருக்கிறார்கள். பணம் இல்லாதவர்களுக்கு பிரச்சினை இல்லை, கவலையும் இல்லை என்று நினைக்க வேண்டாம். அரசு எதிர்பார்க்கும் பணமற்ற பரிவர்த்தனைக்கு மாறிய குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தினர்தான் பிரச்சினையின்றி மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி முதலாவது டிஜிட்டல் கிராமத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள அகோதரா கிராமம்தான் அது. இங்கு வசிக்கும் 1,100 குடும்பங்களும் டிஜிட்டல் யுகத்துக்கு மாறிவிட்டன. இதனால் அன்றாட பணப் பரிவர்த்தனையைக் கூட இவர்கள் மின்னணு மூலம்தான் மேற்கொள்கின்றனர்.

அகமதாபாத்திலிருந்து 90 கி.மீ. தூரத்தில் அமைந் துள்ளதுதான் அகோதரா கிராமம். இந்த கிராமத்தை ஐசிஐசிஐ வங்கியின் அறக்கட்டளை தத்து எடுத்துக் கொண்டது. இங்கு டிஜிட்டல் வங்கிக் கிளையை உருவாக்கி அனைவருக்கும் பணமற்ற பரிவர்த்தனைக்கு வழி வகுத்துள்ளது. 10 ரூபாய் முதல் ரூ. 5 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகள் வெறுமனே செல்போன் குறுஞ் செய்தி மூலம் (எஸ்எம்எஸ்) மேற்கொள்கின் றனர் இக்கிராம மக்கள். கடையின் உரிமையாளரும் வாடிக்கையாளரும் இந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளதால் பணமற்ற பரிவர்த்தனை எளிதாக நடைபெறுகிறது.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளில் இக்கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுமே இந்த பணமற்ற பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். அனைத்துக்கும் மேலாக இந்தக்கிராமத் தில் அதிவேக பிராண்ட்பேண்ட் இணைப்பு உள்ளது. கிராமத்தின் இணையதள முகவரி: http://akodara-digitalvillage.in ஆகும். இங்குள்ள 200 குடும்பத்தினர் இந்த அதிவேக வைஃபை வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான கட்டிடம் ஐசிஐசிஐ வங்கிக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கிராமத்தின் வைஃபை வசதியை விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர். வேளாண் பொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தையை அணுகு வதற்கு இது பேருதவியாக உள்ளது. இக்கிராம மக்களின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் ஒருங்கிணைப்பு பணியைச் செய்கிறது ஐசிஐசிஐ வங்கி.

நாட்டிற்கே முன்னோடியாக வழிகாட்டும் அகோதரா கிராமத்துக்கு சமீபத்தில் ஹரியாணா மாநில கிராமசபை தலைவர்கள் 30 பேர் சுற்றுப் பயணம் செய்து மக்களின் பணமற்ற பரிவர்த்தனையை நேரில் கண்டறிந்துள்ளனர். அகோதரா கிராம மக்கள் அன்றாட வர்த்தகத்துக்கு ரொக்கமற்ற பரிவர்த்தனை மேற்கொள் வது ஹரியாணா பிரதிநிதிகளை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது இக்கிராமத்தில் உள்ளவர்களில் வெகு சிலரே தங்கள் வசமிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிக் கிளைக்கு வந்தனராம். மற்றபடி கிராமத் தினர் அனைவருமே பரிவர்த்தனையை தங்களது ஸ்மார்ட்போன் வாலட் மூலமே மேற்கொள்வதாகக் கூறுகிறார் வங்கி மேலாளர் பிரதீக் பஞ்சால்.

இக்கிராம மக்களுக்கென்று எஸ்எம்எஸ் மூலம் செயல்படும் பரிவர்த்தனைக்கான மென்பொருள் வசதியை ஐசிஐசிஐ வங்கி பிரத்யேகமாக உருவாக்கி அதைச் செயல்படுத்துகிறது. இதற்கென கிராம மக்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளது.

இங்குள்ள மிகப் பெரிய வேளாண் சந்தையிலும் (மண்டி) பணமற்ற பரிவர்த்தனைதான் நடைபெறுகிறது. இதற்கென மைக்ரோ ஏடிஎம் வசதியையும் ஐசிஐசிஐ வங்கி உருவாக்கித் தந்துள்ளது.

முதன் முதலில் கால்நடைகளுக்கென விடுதி வசதியை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் இந்தக் கிராமத்தில்தான். பருத்தி, கடுகு, கோதுமை, பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இக்கிராமத்தினர் டிஜிட்டல் இந்தியாவின் வழிகாட்டியாகவும் உள்ளனர் என்றால் அது மிகையல்ல.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.