News
Loading...

தொன்மை சித்திரவதைக் கருவிகள்!

தொன்மை சித்திரவதைக் கருவிகள்!

ன்று நியூக்ளியர் குண்டுகள் டூ கிளஸ்டர் குண்டுகள் வரை அரசுகளிடம் பல ஆயுதங்கள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் தண்டனைகள் தர பயன்படுத்தப்பட்ட கருவிகளை அறிவீர்களா? கில்லெட் கத்தி மேலிருந்து கீழிறங்கும் வேகத்தில் பரபரவென சித்திரவதைக் கருவிகள் குறித்த அலசல் இதோ!  

பேரிக்காய் ஆயுதம்  

1600 ல் புழக்கத்திலிருந்த வதைக்கருவி இது. இதனை கேப்டன் பாலியலை(Palioly) என்ற கொள்ளைக்காரரே முதன்முதலில் தனது திருட்டில் பயன்படுத்தி உலகிற்கு அறிமுகப்படுத்திய மாமனிதர். இன்று இதற்கு பல வெர்ஷன்கள் உண்டு.  தனது கருவைக் கலைக்கும் பெண்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், பொய் பேசுபவர்கள், தேசத்  துரோகிகளுக்கு பேரிக்காய் ஆயுதம் மூலமாக தண்டனை அளிக்கப்பட்டது. 

எப்படி? நான்கு இலைகள் (அ) ஸ்பூன்கள் போலுள்ள  இக்கருவியை பெண்ணுக்கு பாலுறுப்பிலும், பொய் பேசியவர்கள், அரசுக்கு எதிராக பேசியவர்களுக்கு வாயிலும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆசனவாயிலும் நுழைத்து மெல்ல ஒரு முனையில் சாவியை நுழைத்து திருகினால் என்னாகும்? மெல்ல இரும்பு இலைகள் விரிவடைய, எதிராளியின் உடலினுள் வலி மின்னல்கள் வெட்டி மரணத்திற்கு நிகரான வேதனையை அள்ளித் தரும்.    

மரப்படுக்கை 

1420 ஆம் ஆண்டு எக்சிடர் பிரபு லண்டனில் அறிமுகப்படுத்திய கருவி இது. அரசுக்கு எதிரான புரட்சிக்காரர்கள், துரோகிகள், பயங்கரவாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மரப்படுக்கை இது.  

அப்டேட் வெர்ஷன்கள் பல இருந்தாலும் அடிப்படையில் மரக்கட்டில் போன்ற கருவியில் கைதியின் கை, கால்களை கயிற்றினால் பிணைத்து அவரின் உடலை ஜவ்வு போல சுண்டி இழுப்பார்கள். அவ்வளவேதான். முதலில் கை, கால் மூட்டுகள் உடையும், பிறகு மார்பெலும்புகள் நொறுங்க, எக்ஸ்ட்ரீம் வலியோடு மரணம் ஷ்யூர். 17 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்திலும், பின்னர் போர்ச்சுகலிலும் பலரையும் பீதியில் உறைய வைத்த நம்பர் 1 கருவி இது.

சக்கரம்

18ஆம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்திலுள்ள சித்திரவதைக் கருவி இது. பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிகளை தண்டிக்க பயன்பட்ட இக்கருவிக்கு கேத்தரின் வீல் என்பது மற்றொரு பெயர். ராட்டை அமைப்பிலுள்ள பெரிய மரச்சக்கரத்தில் குற்றவாளிகளை நன்கு வளைத்து கட்டிவிட்டு சக்கரத்தை சுழற்றிவிட்டு  கீழே நெருப்பு மூட்டுவது, இரும்புத் தடியால் எலும்புகளை நொறுக்குவது என கொடுமைகள் நீளும். குற்றுயிராக உடல் நொறுங்கி ரத்தம் வழிய பல நாட்களுக்கு கிடப்பவர்கள் காகம், கழுகுகளுக்கு இரையாகி மெல்ல இறப்பார்கள். சுற்றியுள்ள மக்கள் கரகோஷங்கள் எழுப்ப நிறைவேறும் தண்டனை இது.

வெண்கல காளை

பழங்கால க்ரீசில், குற்றவாளிகளை வறுத்தெடுக்க பயன்பட்ட கொடூர எருது இது. பாலாரிஸ் என்ற சர்வாதிகார மன்னருக்காக பெரிலோஸ் என்பவர் கண்டறிந்த வெண்கல எருதின் சிலையினுள்ளே மனிதர்களை அனுப்ப கதவு உண்டு. குற்றவாளியை உள்ளே அனுப்பிவிட்டு, கீழே தீ வைத்துவிட்டால் சுபம். வெப்பத்தில் வெண்கலம் சூடாகி மஞ்சளாகும்.

 கைதிக்கு உலோகச்சூட்டினால் தோல் கருகி பேயாக அலறித் துடித்து உயிர் போகும். வெண்கல காளையின் தலையிலுள்ள தனித்துவ வடிவமைப்பினால் தோல் கருகும்போது எழும் கைதியின் உச்சபட்ச அலறல் காளையின் உக்கிர முழக்கமாக எழுவதுபோல டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதை உருவாக்கியவரும் இக்கருவியினாலேயே இறந்தார் என்பதை என்னவென்று சொல்ல?

தொன்மை சித்திரவதைக் கருவிகள்!

ஆணிக்கதவு 

1800ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட குரூரமான தண்டனைக் கருவி இது. சிம்பிளாக பெட்டிக்குள் ஒருவரை உள்ளே வைத்து கதவை மூடினால் போதும். ஒரு கதவில் 8, மற்றொரு கதவில் 13 என பதிக்கப்பட்ட கூர்மையான ஆணிகள் தம் வேலையைச் செய்யும். வாழ்நாளில் குரலை உயர்த்தி பேசாதவரும் கூட உச்சஸ்தாயியில் அலறுவார். உடல் முழுக்க ஆணிகளால் பொத்தலாக மெல்ல ரத்தம் துளித்துளியாய் சிந்திச் சிதற வேதனையில் உடல் பதற உயிர் ஸ்லோமோஷனில் பிரியும். கண்களைத் துளைத்து குருடாக்க மட்டும் ஸ்பெஷலாக 2 ஆணிகள் போனஸ். ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த ஆயுதம் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். 

யூதாஸின் நாற்காலி

நம் நாட்டின் கழுமரத்தின் ஆல்டர்னேட் வடிவம் இது. மரம் (அ) இரும்பினால் ஆன சிறு பிரமிடுதான் கருவி. இதன் மேல் நிர்வாணமாக குற்றவாளியைக் கொண்டுவந்து ஆசனவாயை ஷார்ப்பான முனையில் வைத்து, கையையும் காலையும் கட்டி பல்வேறு முனைகளில் இருந்து இழுப்பார்கள். 

ஆசனவாய் மெல்ல கிழிய வேதனை உயிரைப் பிழியும். பேசுவதெல்லாம் உண்மையாக இருந்தால் ஓகே. மறுத்தால், கால்களில் எடை வைத்து, பிரமிடு முனையில் எண்ணெய் தடவினால் நரகம் மண்ணில் தெரியும். இது உயிர்க் கொல்லியல்ல; உடல்நலன் அழிப்பது. கருவியை ஆயுத பூஜைக்குத்தான் கழுவுவார்கள் என்பதால் ஆசனவாய் வழியே நோய்த்தொற்று உள்ளுறுப்புகளுக்குப் பரவி மரண ஓலம் காதை 
நிறைக்கும். 

தலை நசுக்கி

கை, கால் விரல் நகங்களை பிடுங்குவதை நரசிம்மா விஜயகாந்தே டேக் இட் ஈஸியாக செய்வதால், இது அதனினும் மேம்பட்டது. 1530ஆம் ஆண்டு உருவான தண்டனைக் கருவியான இதில் தாடையை கீழேயுள்ள இரும்பில் வைத்து மேலேயுள்ள தலைக் கவச பகுதியில் தலையை பொசிஷனில் வைத்தால் ஓகே. 

மேலேயிருந்து மெல்ல கருவியை டைட் செய்ய முதலில் பற்கள் உடையும்; பின் தாடைகள், இறுதியாக கண்கள் சிதைந்து உயிர் பிரியும். இதில் பாதியிலேயே வதை நின்றாலும் சிதைந்த முகத்தசைகளைச் சீராக்க முடியாது. பெரும்பாலும் அரசியல் தண்டனைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட கருவி இதுதான். 

சிமெண்ட் ஷூக்கள்

அமெரிக்க மாஃபியா குழுக்கள் கண்டுபிடித்த அமேஸிங் டெக்னிக் இது. 2016 ஆம் ஆண்டுதான் இந்த முறையை உலகம் அறிந்தது. தம்மிடம் பிடிபடும் எதிரிகளை, உளவாளிகளைக் கொன்று சின்சியராக அவர்களின் கால்பாதங்களை சிமெண்டினால் நன்கு பூசி வட்ட வடிவமாக்கி,  காய்ந்ததும் அப்படியே அலேக்காக  தூக்கி ஆற்றில் எறிந்துவிட்டு அடுத்த வேலைக்கு ரெடியாகிவிடுவார்கள். கல்லை தண்ணீரில் தூக்கிப்போட்டால் மேலே வருமா? அதே கதிதான் எதிரிக்கும் நிகழும். டெரர் பாடம்!

மரக்குதிரை 

சிறிய பிளாக்போர்டு போல இருக்கும் மரச்சட்டம்தான் தண்டனைக்கருவி. 1646 ஆம் ஆண்டில் பெண்களுக்கான தனித்துவக்கருவி பின் ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.  நாசூக்காக ஏறி உட்கார்ந்தால் போதும். ஆணிகள் உங்கள் பாலுறுப்பை பஞ்சராக்கும். தண்டனையை உக்கிரமாக்க, கால்களின் மீது எடைகள் தொங்கவிடப்படும். தேளின் விஷமாய் உடலில் ஏறும் வேதனையை ட்விட்டரிலும் எழுதிவிடமுடியாது. 

குளியல் தொட்டி

பாரசீகத்தில் வார்தெடுக்கப்பட்ட மனநிலையை குலைக்கும் குரூர வதைஇது. கைதியை சாம்பல் நிரம்பிய அறையில் சில நாட்கள் வைத்து நுரையீரலில் சாம்பல் படிந்த பிறகு கல்தொட்டிக்கு கூட்டிச்செல்வர். மரத் தொட்டியில் குற்றவாளியை முகம் வெளியே தெரியும்படி செய்து, முகத்தில் பால், தேன் இரண்டையும் மிக்ஸ் செய்து, கண்கள், காதுகள், ஆசனவாய் என குறிப்பிட்ட இடங்களில்  பூசிவிடுவார்கள். டெரர் அட்டாக் அடுத்து தான் தொடங்கும்.

தேன், பாலின் மணமறிந்த பூச்சிகள், எறும்புகள் தேன், பாலைச் சாப்பிடும்போது கைதியின் தோலில் துளையிட்டு தன் முட்டைகளை இடுவது அடுத்த லெவல். தண்டனைக்கு ஆளானவருக்கு வெயில், பட்டினி, பூச்சிகளின் தாக்குதல் என தாக்குதல் அதிகரிக்க சித்தப்பிரமை பிடித்துவிடும். உடல் முழுக்க பூச்சிகளின் புழுக்கள் உருவாகி சதைகளைத் தின்னும். பிறகு என்ன? 17 நாட்களுக்குப் பிறகு உடல் முழுக்க நோய்த்தொற்றாகி கடும் வேதனையோடு மரணம் நிகழும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.