News
Loading...

வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு மின்னணு பரிவர்த்தனையே சிறந்த வழி: அருண்ஜேட்லி

வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு மின்னணு பரிவர்த்தனையே சிறந்த வழி: அருண்ஜேட்லி

மின்னணுப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வியாபாரிகளுக்கும் வாடிக்கையளர்களுக்கும் அறிவித்த பரிசுத் திட்டத்தின் முதல் குலுக்கலை டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, குலுக்கல் பரிசுத் திட்டம், மின்னணுப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான நீண்ட பயணத்தின் தொடக்கம் என்றார். சாதாரண மக்கள் ரொக்கப் பணமற்ற பரிவர்த்தனையை எளிதில் புரிந்துகொண்டுவிட்டதாகவும், எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ளத்தான் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். 

பணமற்ற பரிவர்த்தனை என்பது முற்றிலும் ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதல்ல என்றும் குறைந்த அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது என்றும் அருண்ஜேட்லி தெரிவித்தார். கள்ளநோட்டு முதல் தீவிரவாதம் வரை ரொக்கப் பணப் பரிவர்த்தனையைச் சார்ந்தே செயல்படுவதாகவும் அவர் கூறினார். 

ஆதார் எண் அடிப்படையிலான மின்னணு பண பரிவர்த்தனை முறை என்பது டெபிட், கிரெடிட் கார்டுகள், செல்போன்கள் இல்லாத சாதாரண மக்களுக்காக உருவாக்கப்பட்டதாகவும், இந்த முறையில் வாடிக்கையாளர்களின் கட்டைவிரல் ரேகை மட்டுமே போதுமானது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். 

தற்போது பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி நடைமுறைகளுக்குள் வந்து விட்டதாகத் தெரிவித்த அவர் நேர்மையான பொருளாதாரத்தைக் கொண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிட முடியும் என்றார். வெளிநாடுகளில் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை கண்டு பிடிக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்