News
Loading...

கர்நாடகாவில் கறுப்புப் பணத்தை மாற்ற உதவிய ரிசர்வ் வங்கி அதிகாரி கைது

கர்நாடகாவில் கறுப்புப் பணத்தை மாற்ற உதவிய ரிசர்வ் வங்கி அதிகாரி கைது

ர்நாடகாவில் கறுப்பு பணத்தை மாற்ற உதவியதாக, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் மற்றும் இடைத்தரகர்கள் 7 பேரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இடைத் தரகர் களிடம் இருந்து ரூ.93 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, க‌ர்நாடகாவில் முக்கிய அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் கடந்த ஒரு மாதத்தில் ரூ. 175 கோடிக்கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின.

இந்நிலையில் வருமான வரித் துறை சோதனையில் சிக்கியவர் களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் பெங்களூரு, ஹூப்ளி, சித்ரதுர்கா ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இடைத்தரகர்கள் பலர் கறுப்புப் பணமாக உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியது தெரியவந்தது.

இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 இடைத் தரகர்களை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இந்த இடைத்தரகர்களுக்கு உதவி செய்ததாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 8 பேரும் பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறும்போது, “கைது செய்யப்பட்டுள்ள 8 பேரும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை அணுகி, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் வெள்ளைப் பணமாக மாற்றிக் கொடுத்துள்ளனர். இதற்காக 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை கமிஷன் பெற்றுள்ளனர். கைதான இடைத் தரகர்களிடம் இருந்து ரூ. 93 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ப‌றிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதாகியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரி ரூ. 1.5 கோடி கறுப்புப் பணத்தை மாற்ற உதவியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில் பல முக்கியத் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...