News
Loading...

நான் கிறிஸ்தவரா? திடீர் சர்ச்சைக்கு தீபா பதில்

நான் கிறிஸ்தவரா? திடீர் சர்ச்சைக்கு தீபா பதில்

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் எங்களுக்குத் தான் சொந்தம்; அந்த வீட்டை விட்டு சசிகலா வெளியேற வேண்டும் என, ஜெயலலிதா மறைவுக்குப் பின் கச்சை கட்ட துவங்கி உள்ளார், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா. கூடவே, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது தொடர்பான விளக்கத்தை சசிகலா வெளியுலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

நான் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? தொண்டர்களும்; பொதுமக்களும் விரும்பினால், அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறி, பரபரப்பு கிளப்பி வருகிறார்.

போயஸ் தோட்டத்தை சசிகலா தரப்பிடம் இருந்து மீட்க, விரைவில் சட்டரீதியிலான காரியங்களிலும் இறங்கப் போவதாகும் அதிரடியாக தெரிவிக்க, விவகாரம் பற்றி எரிகிறது.

இந்நிலையில், சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவிக்கும் முதல்வர் பதவிக்கும் ஆசைப்படுவதற்கு எதிராக, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களில் 90 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர். அதே நேரம், தமிழக முழுவதும் குக்கிராமங்கள் தோறும், அ.தி.மு.க., தொண்டர்களிடம், தீபா, ஓசையில்லாமல் ஊடுருவி வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசிக்கு அருகில் உள்ள ஊர் பாவூர்சத்திரம். அந்த ஊரைத் தாண்டிச் சென்றால், கேரள எல்லை வந்துவிடும். அங்கு கூட, தீபாவின் அரசியல் பிரவேசம் வேண்டியும் தீபாவை வாழ்த்தியும் பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்களை, அ.தி.மு.க.,வினரே வைத்துள்ளனர். இந்த நிலை தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர், தன்னெழுச்சியாக செய்து வருகின்றனர்.

போட்டி பேனர்:

அதே நேரம், ஜெயலலிதா படத்துக்கு இணையாக சசிகலா படத்தை அச்சிட்டு, அவரை கட்சியின் பொதுச் செயலராக கேட்டு கொள்ளும் போஸ்டர்களும்; பிளக்சுகளும் தமிழகம் முழுவதும் வைக்கப்படுகின்றன. இப்படி வைக்கப்படும் பேனர்களையும்; ஒட்டப்படும் போஸ்டர்களையும் அ.தி.மு.க., தொண்டர்களே மெனக்கெட்டு கிழித்தெழிகின்றனர்.

இப்படி நாளுக்கு நாள் தீபாவின் செல்வாக்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் கூடிக் கொண்டே போக, சசிகலா தரப்பினர் அதை பெரும் பின்னடைவாகக் கருதுகின்றனர். இதற்காக, தீபா குறித்த வதந்திகளை நாலாப்புறமும் பரப்பி வருகின்றனர்.

துவக்கத்தில் தீபாவை கடைசி வரை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார்; என்னதான் அவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்றாலும், அவரது போக்கு ஜெயலலிதாவுக்குப் பிடிக்காது என்று, சமூக வலைதளங்கள் மூலம், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் செய்திகளாக பரப்பினர். ஆனால், அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொலைக்காட்சி நேர்காணல் மூலம், தனக்கு எதிராக தொண்டர்களை உசுப்பிவிட நடந்த அனைத்து முயற்சிகளுக்கும் தடை போட்டார் தீபா.

திடீர் சர்ச்சை:

இப்போது தீபா குறித்து திடீர் சர்ச்சை ஒன்று கிளப்பப்படுகிறது. அதாவது, தீபா இந்துவே அல்ல; அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அவர் கிறிஸ்தவ முறைப்படித்தான் வாழ்ந்து வருகிறார். அவர் எப்படி இந்து ஐதீகத்தின்படியே வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை பறைசாற்றிக் கொள்ள முடியும் என கேள்வி எழுப்பி, செய்தி பரப்புகின்றனர் அ.தி.மு.க.,வினர்.

இதற்கு தோதாக, தீபாவும் நெற்றியில் சாதாரண பொட்டோ; குங்குமமோ இடாதது, அ.தி.மு.க.,வினர் சர்ச்சை கிளப்ப வசதியாகி விட்டது. தீபாவின் கணவர் பெயர் மாதவன் என்றாலும், அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். பேட்ரிக் என்பது அவரது ஒரிஜினல் பெயர். அந்த வகையில், தீபா தற்போது, தீபா பேட்ரிக். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வாழ்கிறார். அதனால், கிறிஸ்தவர் ஒருவரை, அ.தி.மு.க.,வின் பொது செயலராக ஏற்க முடியாது என்று, சொத்தயான வாதத்தை வைத்து, சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளப்புகின்றனர்.

இது குறித்து தீபா கூறியதாவது:

கேட்கிற கேள்விகள் எதற்கும் உரியவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாகவும்; போயஸ் இல்ல வீடு மற்றும் ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாகவும் எழுப்பப்படும் கேள்விகள்; சந்தேகங்கள், சசிகலா தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

என்னை சிலர் மிரட்டிப் பார்த்தனர், நான் தொலைக்காட்சி மற்றுக் ஊடகங்கள் மூலம் கொடுத்த பேட்டிகள், அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும், நன் மதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., தொண்டர்கள் என்னை அரசியலுக்கு வரச் சொல்லி உள்ளன்போடு அழைக்கின்றனர். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என நினைக்கிறேன். இப்படி எனக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதைப் பொறுக்க முடியாத சிலர்தான், என்னை கிறிஸ்தவர் என, சர்ச்சை கிளப்புகின்றனர். இன்னும் நிறைய விஷயங்கள், இதே போல கிளப்பி விடப்படும். ஆனால், அதெல்லாம் ஒருபோதும் எடுபடாது.

நான் எல்லா மதத்துக்கும் பொதுவானவள்தான். அதனால்தான், நான் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தேன். ரம்ஜானுக்கும் வாழ்த்து தெரிவிப்பேன். எனக்கு தீபா பேட்ரிக் என பெயர் சூட்டி மகிழ்கிறவர்களோடு, நானும் சேர்ந்து மகிழ்வதைத் தவிர, வேறு வழியில்லை. நான், இந்து முறைப்படி நெற்றியில் பொட்டு இடாதது குறித்து இத்தனை சர்ச்சைகளா? நெற்றியில் பொட்டு வைக்காமல், நான் டி.வி., பேட்டிகளில் தோன்றியது, திட்டமிட்டு நடந்ததல்ல. யதார்த்தமாக நடந்ததுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.⁠⁠⁠⁠

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.