News
Loading...

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்று தலைமறைவான 3 பேர் கைது

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்று தலைமறைவான 3 பேர் கைது

ருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு, புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்று தலைமறைவான 3 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து, 20 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். 

பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணபுரம், கல்லிப்புரம் கிராமத்தை சேர்ந்த மதி, பிரபு, மற்றும் செல்வக்குமார் ஆகியோர் பாலக்கோடு அடுத்த காரிமங்கலம் தனியார் விடுதியில், கடந்த 19-ம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இந்த மூவரையும் கரூரை சேர்ந்த 4 பேர் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, இரண்டு குழுக்களுக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு கூச்சலிட தொடங்கியுள்ளனர். 
இதனால் பதற்றமடைந்த விடுதி நிர்வாகம், காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளது. 

ஆனால், காவல்துறையினர் வருவதற்கு முன்பே இரண்டு குழுவினரும் தப்பித்துச் சென்றுள்ளனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பழைய 500 ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றும் முயற்சி நடைபெற்றது தெரிய வந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார், புதிய ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்த மதி, பிரபு, மற்றும் செல்வக்குமார் ஆகியோரை தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 20 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், உள்ளே வெற்றுக் காகிதம் வைத்து, வெளியே ரூபாய் நோட்டுகளால் மறைக்கப்பட்ட 15 லட்ச ரூபாய்க்கான போலி நோட்டுகளும், 2 கார்கள், ஒரு இருசக்கர வாகனம், 3 செல்போன்கள், 3 வீச்சரிவாள், 2 இரும்பு தடிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்டவர்களிடம் 20 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் வந்தது எப்படி, இந்தப் பணம் எந்த வங்கியில் இருந்து, யார் பெயரில் எடுக்கப்பட்டது, இவ்வளவு பணத்தை வழங்கிய வங்கி அதிகாரிகள் யார், இதற்கு தலைமையேற்றவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

இவ்வழக்கில், பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்ததாக கூறப்படும் கரூரை சேர்ந்தவர்கள், இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்