News
Loading...

தலைமை தாங்கும் சக்தி ஸ்டாலினுக்கு இருக்கிறது!

துரைமுருகன்

தி.மு.க-வை எட்டிக்காயாக நினைத்த ஜெயலலிதாவையே தனது நாவன்மையால் சிரிக்க வைத்தவர், 40 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர், கருணாநிதியின் மனம் கவர்ந்த உடன்பிறப்பு’ என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன். ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அந்தக் கட்சியின் எதிர்காலம் மற்றும் தி.மு.க-வில் ஸ்டாலினின் நிலை என்பது உள்ளிட்ட நமது கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளிக்கிறார் துரைமுருகன்.

‘‘மருத்துவமனை செல்லும் அளவுக்கு கருணாநிதியின் உடல்நலத்தில் என்ன பிரச்னை?’’

‘‘தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்தக்கூடியவர். மிதமான உணவு, நேரத்துக்கு உறக்கம், யோகா, ஒரு நாளைக்கு இரண்டு முறை குளியல் என்று தனது உடம்பைப் பாதுகாப்பதில் கவனமாக இருப்பார். ஆனால், அவருக்குக் கொடுத்த மருந்தினால், ஒவ்வாமை ஏற்பட்டு அதனால் கை மற்றும் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு எரிச்சல் கொடுத்து வந்தது. அது இப்போது பூரண குணமாகிவிட்டது. ஆனால், அவர் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்ததுடன் இருமலுடன் சளியும் அதிகரித்தது. எனவே, மருத்துவர்களின் ஆலோசனைப்படியே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலமுடன் திரும்பியுள்ளார்.’’

‘‘ஜெயலலிதா மறைவு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதா?’’

‘‘ஜெயலலிதா இல்லாதது தமிழக அரசியலில் ஒருவிதத்தில் வெறுமைதான். ஆனால், இது தற்காலிக வெறுமையாக இருக்கும் என்றுதான் கருதுகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு முதலமைச்சர், தலைவர்கள் இறக்கும்போதும் இதுபோன்ற வெற்றிடம் தோன்றும். அண்ணா, எம்.ஜி.ஆர், காமராஜர் மறைவின்போதும் இதேநிலை உருவானது. அவர்கள் வகித்த பதவியும், மக்கள் செல்வாக்குமே அதற்குக் காரணம். ஆனால், வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது விஞ்ஞானம். ஆகையால், ஜெயலலிதாவின் வெற்றிடத்தை எப்படிப்பட்ட காற்று நிரப்பும் என்பதை இனிமேல்தான் சொல்ல முடியும்.’’

‘‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘அ.தி.மு.க-வில் இப்போது என்ன நடக்கிறது?... அதிகார சக்திகளாக யார், யார் எங்கே இருக்கிறார்கள்?... என்பதெல்லாம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், அந்தக் கட்சியில் குழுக்கள் முளைத்திருப்பது மட்டும் தெரிகிறது. மூன்று மாதங்களுக்குப் பின்னர்தான் அ.தி.மு.க-வின் நிலை முழுமையாகத் தெரியவரும்.’’

‘‘தமிழ்நாட்டில் சட்டமன்றக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை என்று ஆளுநரிடம் புகார் அளித்துள்ளீர்களே?’’

‘‘சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் முன்பே சட்டசபை குழுக்களை நியமிக்க வேண்டும். பொது கமிட்டி, நிதி கமிட்டி, மாசுக் கட்டுப்பாட்டு கமிட்டி என 12 முக்கியக் குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள்தான், ஒரு நிதி ஆண்டில் ஒதுக்கப்படும் தொகை முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆராயும். ஆனால், தமிழகத்தில் இன்றுவரை அந்த கமிட்டி நியமிக்கப்படவில்லை. இந்திய அளவில் தமிழகத்தில் மட்டும்தான் சட்டமன்ற கமிட்டி போடப்படாமல் உள்ளது.’’

‘‘தி.மு.க-வின் தலைவராக கருணாநிதியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்போது ‘நீங்கள்தான் தலைவர்’ என்று மு.க.ஸ்டாலினை முன்மொழிய வேண்டிய அவசியம் என்ன?’’

‘‘அடுத்து என்ன என்பதைத்தான் நான் சொன்னேன். கலைஞர் இருக்கும்வரை அவர்தான் தலைவர். அதில் எந்த மாறுபாடும், சந்தேகமும் கிடையாது. 50 ஆண்டுகளாக அவர் இந்த இயக்கத்தை கட்டிக் காத்து வருகிறார். அதற்குப் பிறகு நீதான் இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு? ஸ்டாலின் சிறுவனாக ஓடி விளையாடும் வயதில் இருந்தே பார்த்து வருபவன். கலைஞரிடம் இருக்கும் போர்க்குணம், செயல்திறன் கொஞ்சமும் குறைவில்லாமல் இவரிடமும் உள்ளது. ‘கலைஞருக்குப் பிறகு, தலைமைக்குரிய ஆளுமை ஸ்டாலினிடம் உள்ளதா?’ என்று ரொம்ப நாளாக பார்த்து வந்தேன். வரும் காலங்களில் இந்த மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சக்தி அவரிடம் உள்ளதால் தலைவராக ஸ்டாலின் வர வேண்டும் என்றேன்.’’

‘‘ஸ்டாலின் செயல் தலைவராக ஆக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?’’

‘‘அரசியலில், நிர்வாக ரீதியாக கட்சியை நடத்த எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய கமிட்டிகள் உள்ளன. தனி மனிதனாக இந்தக் கட்சியில் முடிவுசெய்ய முடியாது. பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. தலைவர் ஒப்புதல் இருக்கிறது. பேராசிரியர் முடிவு இருக்கிறது. அது காலத்தின் சூழ்நிலையைப் பொறுத்து, கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு எடுக்க வேண்டிய விஷயம்.’’

கருணாநிதி

‘‘அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவார் என தெரிகிறதே?’’

‘‘அ.தி.மு.க என்பது வேறு கட்சி, அந்தக் கட்சியில் யாரை பொதுச்செயலாளர் ஆக்கினால் நமக்கு என்ன? சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்கட்டும், அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.’’

‘‘தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படுமா?’’

‘‘என்ன முடிவு எடுக்க உள்ளோம் என்பது தெரியாது. முக்கிய விஷயங்களை விவாதிக்க உள்ளோம். ஆனால், என்ன முடிவு எடுக்கப் போகிறோம் என்பதைப் பொதுக்குழு முடிந்த பிறகுதான் சொல்ல முடியும்.’’

‘‘ஜெயலிலதா பிரசாரம் இல்லாமல் மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றிருப்பது, அ.தி.மு.க பலமாக உள்ளதாகத்தானே காட்டுகிறது?’’

‘‘இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதுதான் இப்போதைய வாடிக்கை. எதிர்க் கட்சிக்கு ஓட்டுபோடுவதைவிட ஆளும் கட்சிக்கு ஓட்டுபோடுவதைதான் மக்களும் விரும்புகிறார்கள். அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று எதையாவது சொல்லி ஆளும் கட்சி ஓட்டுகளை வாங்கிவிடும். நாங்கள் ஆளும் கட்சியாக இருந்து இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.’’ 

‘‘அழகிரி மீண்டும் தி.மு.க-வுக்குள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே?

‘‘சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கேள்விகேட்டால், அமைச்சர்கள் பதில் சொல்லாமல் அமர்ந்து இருப்பார்கள். அதற்குக் காரணம், கேள்விக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லை என்று பொருள். அதே நிலைதான் இந்தக் கேள்விக்கும் எனது பதில்.’’ 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...