News
Loading...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

தினம் தினம் வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் நமது பிரதமர் நரேந்திர மோடி கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் அழிக்க அறிவித்த ‘பழைய ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது’ என்ற திட்டத்தின் பின்னால் என்னவெல்லாம் நடந்தது என்று அசரடிக்கிற மாதிரி, கேட்கிறவன் கொஞ்சம் கேனயனா இருந்தா வெங்காயம்கூட விசிலடிக்கிற மாதிரி, கதை கதையா விடுறானுங்க.

சில கதைகளைப் படிக்கிறப்ப, ராம பக்தர்கள், முருக பக்தர்கள், ஏன்... சினிமா நடிகர் நடிகைகளில் பக்தர்கள்கூட மதில் சுவர் பக்கம்தான் சுத்துறாங்க. ஆனா இந்த நமோ பக்தர்கள் மதில் சுவரேறி மாடிப் பக்கமே சுத்துறாங்களோன்னு டவுட் வருது. ‘எது என்னவோ ஆயிட்டுப் போகுது, நீ இன்னோவா சாவியைக் கொடு’ன்னு நாஞ்சில் சம்பத் மாதிரி நாமளும் நார்மல் சம்பத்தாட்டம் போயிட முடியாதுல்ல! அதான் இந்த நாட்டை ஒழிக்கும், மன்னிக்க... நோட்டை ஒழிக்கும் திட்டத்தின் பின்னால் நிஜமாக என்ன நடந்தது என்று நம்ம உளவுத்துறையை ஒன்பது நாட்கள் கண் முழிக்க வச்சு கண்டுபிடிச்சோம்.

* அதாகப்பட்டது, அஞ்சு மாசத்துக்கு முன்னால சீனாவிலிருந்து 5 லட்சம் டன் பேப்பர் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் ஆர்டர் போட்டது. இதை அந்த பாகிஸ்தானில் இருக்கும் நமது ஒற்றர்கள் ‘வாதகோடாரி மற்றும் ஒத்தகிடாரி’  நமது அரசுக்குத் தெரியப்படுத்தினர். ‘இவனுங்க மண்சோறு தின்கிறவங்க ஆச்சே, இவனுங்களுக்கு எதுக்கு டின் பீரு’ என்று யோசித்த நமது அரசாங்கம், இதன் அடிப்படையில் தீவிர ஆய்வு மேற்கொண்டது. 

‘பாகிஸ்தானில் இன்னமும் பிளாஸ்டிக் பாக்கெட்டும் டப்பாவும்தான் புழக்கத்தில் இருப்பதால், அது கண்டிப்பாக டாய்லெட் பேப்பருக்கு இல்லை’ என்பதும், ‘சப்பாத்தியைத் தின்னுட்டு சட்டையில் துடைச்சிட்டுப் போறவங்களுக்கு டிஷ்யூ எதுக்கு’ என்றும், ‘அஞ்சு மாசத்துக்கு முன்னால்தான் எல்லா பள்ளிகளிலும் பரீட்சை முடிந்திருப்பதால், கண்டிப்பாக குழந்தைகள் எக்ஸாம் பேப்பராய் பயன்படுத்தப் போவதில்லை’ என்றும் அறிந்த நம்மாட்கள், ‘இது நிச்சயம் கள்ள நோட்டு அடிக்கத்தான்’ என்பதை அறிந்து தெளிந்து புரிந்து, ‘மழை வருவதற்குள் குடையை சரி பண்ணுவோம், காக்கா வருவதற்குள் வடையை காலி பண்ணுவோம்’ என பிரதமருக்கு ஐடியா தந்தார்கள்.

* இதைத் தவிர, இந்தியா முழுக்க பல கோடி உழைக்கும் கரங்கள் பட்டு பல ரூபாய் நோட்டுகள் ‘வியர்வை பாசனத்தால் விதைப்பதற்கு முன்பான வயல்வெளி போல’ மண் கலரில் தெரிவதைக் கண்டவர்கள் அதைக் கருப்புப் பணம் என தவறாக எண்ணிக்கொண்டு அரசாங்க கஜானாவிற்கு அலர்ட் கால் கொடுத்தனர். 

மேலும் பலர் ‘ரூபாய் தாளை எம்.ஜி.ஆர் கையில் சிக்கிய ஹீரோயின் தோளைப் போல கசக்கிய கசக்கில் கரன்சி நோட்டில் இருந்த காந்தி தாத்தாவின் கண்ணாடி உடைந்து, கோடிக்கணக்கான இந்தியர்களின் கைகளைக் கிழித்து விட்டதும்’ பிரதமருக்கு தெரிய வந்தது. ‘ஓட்டு போடும் கைகளுக்கு நோட்டுக்களால் வேட்டு வருவதா’ என்று கலங்கிய பிரதமர், ‘பழைய ரூபாய் நோட்டுக்களை புது ரூபாய் நோட்டுக்களாக மாற்றும் சிந்தனைக்கு’ தனது பிரெய்னில் பிள்ளையார் சுழி போட்டார். 

* இது மட்டுமின்றி  ‘பூசாரி கனவில் கடவுள் வருவதைப் போல, தனக்கு கிருதா மீசை மற்றும் மூணு நாள் தாடி வரைந்து பல இந்தியர்கள் சாதா காந்தியா இருக்கும் தன்னை ராகுல் காந்தியாக்கி கிண்டல் செய்வதாகவும்’, ‘ரூபாய் தாள்களில் வெள்ளையாக இருக்கும் பகுதிகளில் கையெழுத்துக்களாலேயே காதல் புரிந்து கலவி புரிந்து குடும்பமே நடத்துவதால் கூச்சமாக இருப்பதாகவும்,’ காந்தி தாத்தா அவர்கள் நம் ஏழைத் தொழிலதிபர்கள் அம்பானி மற்றும் அதானி போன்றவர்களிடம் கனவில் வந்து முறையிட்டிருக்கிறார். 

‘கெட்ட குணம்  இஸ் இன்ஜுரியஸ் டூ வீடு, கருப்புப் பணம் இஸ் இன்ஜுரியஸ் டூ நாடு’ என்று பொறுமை இழந்த நம் பிரதமர், தனது பெருமை போனாலும் பரவாயில்லை, செய்யவேண்டிய கடமையை எந்த மடமையுமின்றி செய்ய வேண்டுமென நிதியமைச்சரை அழைத்திருக்கிறார். ‘என் புகழுக்கு ஒண்ணுன்னா நான் போட்டோவுக்கு எதிரா முகத்தை காட்டுவேன், என் மக்களுக்கு ஒண்ணுன்னா நான் துப்பாக்கி தோட்டாவுக்கே எதிரா நெஞ்சைக் காட்டுவேன்’னு  கூறி, பெரும் கள்ளப்பண முதலைகளால் தனது உயிருக்கு  ஆபத்து என தெரிந்தும், கலங்கிய நீரில் நீச்சலடிக்க தயாரானார்.

இதற்குப்பிறகுதான் இந்தியா முழுக்க புழக்கத்தில் இருந்த ‘பழைய ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்கள் செல்லாது’ என அறிவிப்பு வந்தது. இதை நவம்பர் 8ம் தேதி டி.வி.யில் அறிவித்த பிரதமர், அன்றிரவு தூக்கம் வராமல் நெடுநேரம் டி.வி.யில் சோகப் பாடல்கள் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, பிறகு டெல்லி மெயின் மெட்ரோ ஸ்டேஷன் வரை நடந்து வந்து டீ குடித்து விட்டு திரும்பிச் சென்று கனத்த இதயத்துடன் தூங்கியதால், காலையில் எழுந்திருக்கும்போது ரெண்டு கிலோ எடை கூடியிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். 

வழக்கமாக ஃபிளைட்டில் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து கீழே புள்ளி புள்ளியாய் தெரியும் வீடுகளையும் அதன் அருகே மேயும் ஆடுகளையும் மாடுகளையும் ரசித்துப் பார்க்கும் குழந்தை மனசுக்காரர் மோடி. ஆனால், ‘ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது’ என சொல்லிவிட்டு ஜப்பான் சென்ற போது, ‘டிசம்பர் மாச வின்டரில் ஸ்வெட்டர் போடாமல் பால் வாங்கச் சென்றது போல’ நடுங்கிக்கொண்டே சென்டர் சீட்டில் அமர்ந்து சென்றார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

‘பணத்தை மாற்ற பல கோடி மக்கள் வங்கி வாசல்களில் நின்றார்கள்’ என்பதை அறிந்த பிரதமர் மனவேதனையில் ‘இனி தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது விமானத்தில் நின்று கொண்டு மட்டுமே பயணிப்பேன்’ என பார்லிமென்ட் தூணைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதிருக்கிறார் என நம்பகத்தன்மையில்லா இடத்தில் இருந்து தகவல் ஒன்றும் வந்திருக்கிறது. இப்படி மக்கள் ரோட்டிலும், வீட்டிலும் படும் துன்பங்களைக் கண்டு எப்பவுமே தனது heartஇல் கண்ணீர் வடிக்கும் ஒரு பிரதமர் கிடைக்க நம் நாடும் நாட்டு மக்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பின்குறிப்பு: கட்டுரைக்கு தகவல் தந்து உதவியவர்கள் - திரு. ரங்கபாஷ்யம், திரு. ஸ்கெட்ச்.ராஜா, திரு. தமிழிசை சவுண்ட்ராஜன் மற்றும் எல்லையில் நிற்கும் ராணுவ வீரரின் ஒன்று விட்ட சகலையின் ரெண்டு விட்ட மச்சான் திரு. குபீர் தேசபக்தன்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.