News
Loading...

வாய்ப்பை பயன்படுத்தி ரூ.8 லட்சத்தை சுருட்டிய விமானப் பயணிகள்!

வாய்ப்பை பயன்படுத்தி ரூ.8 லட்சத்தை சுருட்டிய விமானப் பயணிகள்!

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் ஏற்பட்ட கோளாறால் ரூ.8 லட்சம் பறிபோனது.

ஹைதராபாத்தின் சம்ஷாகாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கொடாக் மகேந்திரா வங்கி ஏ.டி.எம்.மில் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. ரூ.2500 எடுக்கும் போது ஒரு 2000 ரூபாய் நோட்டும் ஐந்து 100 ரூபாய் நோட்டுக்களும் அளிக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு 2000 ரூபாயும் ஐந்து 500 ரூபாயும் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.100க்கு பதிலாக ரூ.500 கிடைப்பதை முதலில் அறிந்த விமானப் பயணி ஒருவர் மற்றவர்களிடம் இதைக் கூற அந்த உடனே நிறைய பேர் அந்த ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்துள்ளனர். இதனை அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட ஏ.டி.எம். இயந்திரத்தின் சேவையை நிறுத்தினர்.

ஆனால், அவர்கள் வருவதற்குள் அங்கிருந்த பயணிகள் பலர் முந்திக்கொண்டு பணம் எடுத்துவிட்டதால் ரூ.8 லட்சம் தொகையை பறிபோய்விட்டது. இது குறித்துப் பேசிய வங்கி அதிகாரி ஒருவர், 100 ரூபாய்க்கு உரிய இடத்தில் 500 ரூபாய் நிரப்பப்பட்டிருக்கிறது. இதனால் தான் அவ்வாறு தவறு நேர்ந்திருக்கிறது. இழந்த ரூ.8 லட்சம் தொகையும் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் தொடர்பு கொண்டு மீட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட கோளாறை முதலில் அறிந்தவர் வங்கிக்குப் புகார் அளிக்காமல் அங்கிருந்த மற்ற பயணிகளிடம் கூறியதும் அவர்களும் உடனே ஏ.டி.எம்.மில் தங்கள் பங்குக்கு பணம் எடுக்க முந்தியதும் ஆச்சரியமளிப்பதாக விமான நிலையப் பணியாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. வங்கி அதிகாரிகளும் ஏ.டி.எம்.மில் ஏற்பட்ட கோளாறை முதலில் அறிந்தவர் வங்கிக்கு உடனடித்தகவல் கொடுத்திருக்கலாம் என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்