News
Loading...

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான செலவு எவ்வுளவு?!

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான செலவு எவ்வுளவு?!

ஜெயலலிதாவுக்கு 75 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்துமாறு தமிழக அரசிடம் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கேட்கவில்லை என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை 2-வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் அவர் காலமானார்.

மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலகத் தரத்திலான சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே 5 முறையும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் 3 முறையும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். அவர்கள் கொடுத்த ஆலோசனைகளின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுத்தனர்.

இந்நிலையில் 75 நாட்களாக முதல்வ ருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு ரூ.90 கோடி என சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. முதல்வரின் சிகிச்சைக்கு ரூ.6 கோடி செலவானதாகவும், தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகையை அரசு தரப்பில் சிகிச்சைக்கு செலவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதல்வரின் சிகிச்சைக்கான செலவு பற்றி அப்போலோ மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்ட போது, “முதல்வரின் சிகிச்சை செலவு ரூ.90 கோடி என்பது எல்லாம் பொய்யான செய்தி. அவ்வளவு செலவு ஆக வாய்ப்பே இல்லை. வேண்டுமென்றே யாரோ தவறான வதந்திகளை பரப்பி விடுகின்றனர். ஆனால் நிச்சயமாக சில கோடிகள் செலவு ஆகியிருக்கும். முதல்வரின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்குமா அல்லது வேறு யாராவது ஏற்பார்களா என்பது தெரியவில்லை” என்றார்.

முதல்வரின் சிகிச்சைக்கான செலவை தமிழக அரசு ஏற்குமா என்று அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “முதல்வர், அமைச்சர்கள் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால், அவர்களுக்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான செலவை செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்கவில்லை. எவ்வளவு செலவு ஆனது என்பதையும் சொல்லவில்லை. அரசும் சிகிச்சைக்கு செலவான பணத்தை செலுத்தவில்லை” என்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...