News
Loading...

நள்ளிரவு... அவசரமாய்... ரகசியமாய் - காட்சி 4 - ராஜ் பவன்

நள்ளிரவு... அவசரமாய்... ரகசியமாய் - காட்சி 4 - ராஜ் பவன்

ப்படியொரு துக்கம் ததும்பிய, இறுக்கம் நிறைந்த, பதற்றம் கலந்த பதவியேற்பு விழாவை தமிழக ஆளுநர் மாளிகை இதற்குமுன் கண்டது இல்லை. கடந்த டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை பதவியேற்றுக்கொண்ட நிகழ்ச்சி விசித்திரமாகவே நடந்து முடிந்தது.   

 அமைச்சரவை பதவியேற்பு என்றாலே, உற்சாகம் ஊற்றெடுக்கும். உள்ளேயும் வெளியேயும் தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆளும் கட்சி வி.ஐ.பி-க்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என அரங்கம் நிரம்பி வழியும். முதல்வராக, அமைச்சர்களாகப் பதவியேற்பவர்களின் முகங்களில் புன்னகையும் பூரிப்பும் வெளிப்படும். ஆனால், இவற்றுக்கு எல்லாம் நேர்மாறாக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. 

‘முதல்வர் ஜெயலலிதா காலமானார்’ என்று தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதால் ஏற்பட்ட களேபரத்துக்குப் பின்னர், ‘மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் முதல்வர் இருக்கிறார்’ என்று மறுப்பு அறிக்கை வெளியான பிறகும்கூட, அப்போலோ மருத்துவமனையில் பதற்றம் தணியவில்லை. அப்போது, அ.தி.மு.க-வின் தலைமை நிலைய மேலாளர் மகாலிங்கம், அப்போலோவில் இருந்து காரில் வெளியேறினார். ‘ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் மாலை 7 மணி அளவில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவர் செல்கிறார்’ என்று தகவல் வெளியானது. மகாலிங்கம் வெளியேறிய பிறகு, அப்போலோவில் இருந்த அரசு உயர் அதிகாரிகள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர்.

 பின்னர், இரவு 8 மணி அளவில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அப்போலோவில் இருந்து அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்துக்குச் சென்றனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் அப்போலோவில் இருந்து தலைமைக்கழகம் சென்றனர். அங்கு, எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. பின்னர், நள்ளிரவு 12 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். எம்.எல்.ஏ-க்களை ஏற்றிச் செல்வதற்காக ஏசி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட் டிருந்ததன. 12.45 மணி அளவில் விழா அரங்கத்துக்கு கவர்னர், ஓ.பன்னீர் செல்வம் உட்பட அனைவரும் வந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கியது.   

இறுக்கமும் மௌனமும் குடிகொண்டிருந்த அந்த அரங்கத்தில் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். பின்வரிசையில் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஆளுநரின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருந்தனர்.  இவர்களுக்கு எதிரே அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் குறிப்பை கவர்னர் வித்யாசாகர் ராவ் முதலில் வாசித்தார். பின்னர், அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டன. அதன் பிறகு, பதவியேற்பு நடந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். “ஓ.பன்னீர்செல்வம் எனும் நான்...” என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழில் சொன்னதும், பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசித்தார். முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்ற உடன், இரண்டு பிரிவுகளாக மற்ற அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பதவியேற்றனர். 20 நிமிடங்களில் நிகழ்ச்சி முடிந்தது. பிறகு, அனைவரும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.

நள்ளிரவு... அவசரமாய்... ரகசியமாய் - காட்சி 4 - ராஜ் பவன்

முதல்வர் பதவியில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் மரணம் அடைந்த சமயத்தில், இடைக்கால முதல்வராக ஒருவர் பொறுப்பேற்று, பின்னர் முதல்வராக ஒருவர் தேர்வுசெய்யப்பட்ட முறை பின்பற்றப்பட்டது. அண்ணா மரணம் அடைந்தபோது, இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். அதன் பிறகு, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. அதில், முதல்வராக கருணாநிதி தேர்வுசெய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது,  இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். பின்னர், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று வி.என்.ஜானகி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது, ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, இடைக்கால முதல்வர் என நியமிக்கப்படாமல், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். 

2014-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது முதல்வர் பதவி பறிபோனது. அதனால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். அவரது தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர். அந்த நிகழ்ச்சியில், ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அனைவரும் சிந்திய கண்ணீர், ஆளுநர் மாளிகையில் ஆறாக ஓடியது. அனைவரும் குலுங்கிக் குலுங்கி அழுதனர். ஆனால், இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் இறுகிய முகங்களுடன் காட்சி அளித்தனர். யார் கண்களிலும் ஒரு சொட்டு கண்ணீர்கூட வழியவில்லை! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்