News
Loading...

அம்மா அங்கே... முதல்வர் இங்கே! - காட்சி 3 - அ.தி.மு.க கட்சி அலுவலகம்

அம்மா அங்கே... முதல்வர் இங்கே! - காட்சி 3 - அ.தி.மு.க கட்சி அலுவலகம்

‘புரட்சி தலைவி வாழ்க’ என்ற கோஷத்தையே கேட்டுப் பழக்கப்பட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 5-ம் தேதி இரவு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தோடு அந்த மந்திர சொல்லுக்கு விடைகொடுக்கப்பட்டது.

டிசம்பர் 4-ம் தேதி இரவில் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசம் அடைந்தவுடனே, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சென்னை வந்து சேர உத்தரவு போனது. டிசம்பர் 5-ம் தேதி காலை அனைத்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் அப்போலோவில் ஆஜரானார்கள். அவர்களுடன் திவாகரன், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விளக்கிவிட்டு அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டியுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்கள். புதிய முதல்வரை தேர்வு செய்யும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என அந்தக் கூட்டத்தில் அறிவித்துவிட்டு, அனைவரிடமும் வெற்று ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். அதன்பிறகு, ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது எனத் தகவல் வெளியானது. அதன்பிறகு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாலை 6 மணிக்கு அ.தி.மு.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அணிவகுத்த எம்.எல்.ஏக்கள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு நான்கு மணி முதலே எம்.எல்.ஏ-க்கள் வரத் துவங்கிவிட்டார்கள். 

அ.தி.மு.க அலுவலக வாயிலில் தொண்டர்கள் சோகத்துடன் அமர்ந்திருக்க அவர்களைக் கடந்து சட்டமன்ற உறுப்பினர்களும் சோகமாக உள்ளே சென்றனர். நேரம் ஆக ஆக அமைச்சர்கள் சிலரும் அங்கே வரத் துவங்கினர். பாண்டியராஜன், சம்பத், நிலோபர் கபில் உள்ளிட்ட அமைச்சர்கள் ஐந்து மணிக்கே வந்துவிட்டார்கள். வந்தவர்கள் அனைவரும் கீழே அமர்ந்திருந்தனர். பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் வந்த நிலையில் அனைவரும் மாடிக்குப் போனார்கள். தனியாக வந்த செங்கோட்டையன், யாரிடமும் எதுவும் பேசாமல் மாடிக்குப் போனார். எந்த உறுப்பினரிடமும் அவர் பேசிக்கொள்ளவில்லை.

இறக்கி ஏற்றப்பட்ட கட்சிக் கொடி!

 5-30 மணியளவில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாக... வெளியே நின்ற தொண்டர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் ஜெயக்குமாரை கட்டிப் பிடித்து சிலர் அழ துவங்கிவிட்டனர். அவரும் கலங்கிய கண்களோடு உள்ளே சென்றார். அமைச்சர் நிலோபர் கபில் மாடியில் நின்றுகொண்டு கீழே அழுபவர்களைப் பார்த்து அவரும் அழுது கொண்டிருந்தார். அ.தி.மு.க அலுவலகமே கூக்குரலிட்டது. அப்போது அலுவலக ஊழியர் ஒருவர் வேகமாக வந்து, அலுவலகத்தின் முகப்பில் இருந்த கட்சிக் கொடியை அரைக் கம்பத்தில் இறக்கிக் கட்டினார். சில நிமிடங்களில் ஜெயலிலதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, விசில் அடித்து மகிழ்ந்தனர் தொண்டர்கள். இறக்கப்பட்ட கட்சிக் கொடி உயர்த்தப்பட்டது.

அம்மா அங்கே... முதல்வர் இங்கே! - காட்சி 3 - அ.தி.மு.க கட்சி அலுவலகம்

எதற்கு அழைப்பு என்றே தெரியவில்லை!

ஏழு மணியாகியும் கூட்டம் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. முக்கிய அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அப்போலோவில் இருந்து வரவில்லை. மாடியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கீழே நின்ற தனது நண்பருக்கு போன் செய்து “ஐந்து மணிக்கு எல்லாம் வரச்சொன்னார்கள் வந்துவிட்டோம். எதற்காக வரச்சொன்னார்கள் என்றே தெரியவில்லை. கூட்டம் எப்போது ஆரம்பிக்கும், கூட்டம் முடிந்து எங்கு போக போகிறோம் என்று எதுவும் தெரியவில்லை’’ என புலம்பினார். ‘எங்கு செல்கிறோம். என்ன செய்யப் போகிறோம் என்று யாரும் எதுவும் கேட்கக் கூடாது’ என உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. கூட்டம் துவங்கும் முன் செல்போனை ஆஃப் செய்ய சொல்லியிருந்தார்கள். 

வாசலுக்கு வந்த பேருந்து!

7.30 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் செல்ல மூன்று சொகுசுப் பேருந்துகள் கட்சி அலுவலக வாசலுக்கு வந்து நின்றுவிட்டன. அப்போதுதான் பேருந்தில் உறுப்பினர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு ராஜ்பவன் செல்லப் போகிறது என்ற தகவல் வெளியானது. 9 மணிக்கு மேல் கூட்டம் துவங்கும் என்று சொல்லப்பட்டது. கூட்ட அரங்கின் கதவுகளும் அடைக்கப்பட்டன. ஆனால், முக்கிய அமைச்சர்கள் வருகை தள்ளிப் போனதால் கூட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இரவு உணவு இட்லி!

பத்து மணியை தாண்டியும் கூட்டம் நடைபெறவில்லை. அப்போலோவில் என்ன நடக்கிறது என்ற குழப்பம் அலுவலகத்தில் இருந்த உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. உறுப்பினர்களுக்கு இரவு உணவாக இட்லி வழங்கப்பட்டது. உணவுக்குப் பிறகு கூட்டம் நடைபெறும் என்றார்கள். அவைத் தலைவர் மதுசூதனனும் அங்குதான் இருந்தார்.

அம்மா அங்கே... முதல்வர் இங்கே! - காட்சி 3 - அ.தி.மு.க கட்சி அலுவலகம்

ஒ.பி.எஸ். வருகையும் அப்போலோ அறிக்கையும்

இரவு 11-30 மணிக்கு மேல், ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்டோர் ஒரே காரில் அலுவலகம் வந்தார்கள். வெளியே நின்ற தொண்டர்கள் அவர்களை உள்ளேவிடாத அளவுக்கு கதறினார்கள். அவர்கள் வந்ததும் கூட்டம் தொடங்கியது. மீடியாவினரைப் படம் எடுக்க அழைத்தார்கள். அந்த நேரத்தில் ‘ஜெயலலிதா மரணத்துவிட்டார்’ என்ற  அறிக்கையை வெளியிட்டது அப்போலோ. கூட்டத்தில் இருந்தவர்கள் முகத்திலும் ஒருவித இறுக்கம். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மதுசூதனன் கையில் இருந்த பேப்பரை பார்த்து ‘முதல்வராக பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்படுகிறார்’ என்று மட்டும் சொல்லி அமர்ந்துவிட்டார். அலுவலக ஊழியர் ஒருவர், ஒவ்வொரு உறுப்பினரிடமும் வரிசையாக கையெழுத்து வாங்கினார். அறை முழுவதும் மயான அமைதி நிலவியது, பெண் உறுப்பினர்கள் அழுது கொண்டிருந்தார்கள். பதினைந்து நிமிடங்களில், கூட்ட அறையில் இருந்து அனைவரும் வெளியேறி, வாசலில் நின்ற பேருந்தில் ஏறினார்கள். கவர்னர் மாளிகையான ராஜ்பவனுக்கு பேருந்து கிளம்பும் போது மணி 12-30.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.