News
Loading...

உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும்! - ஜெயலலிதாவின் ஏக்கம்!

உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும்! - ஜெயலலிதாவின் ஏக்கம்!

சாட்டிலைட் சேனல்கள் இல்லாத காலம் அது. அரசு தொலைக் காட்சியான தூர்தர்ஷன் மட்டுமே அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. தனியார் தயாரித்துத் தரும் தொடர்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப ஏக டிமாண்ட் இருந்தது. கரன்சியை தள்ளினால்தான் சீரியல்களுக்கு அனுமதியே கிடைக்கும். அப்படிப்பட்ட சூழலில் தனது நாடகத்துக்கு அனுமதி கேட்டு அப்ளிகேஷன் போட்டிருந்தார் சோ. அனுமதி கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அப்போது ராஜீவ் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் நேரு, சோவுக்கு ரொம்ப நெருக்கம். ஆனாலும் சிபாரிசுக்கு போய் நிற்கவில்லை சோ. ‘‘என்னோட சீரியலுக்கு அனுமதி தர தூர்தர்ஷன் அலுவலர்கள் எதையோ எதிர்பார்க்கிறார்கள்’’ என தனது ஊழியர்களிடம் சொல்லி ஆதங்கப்பட்டார். ‘‘எதுக்கு கவலைப்படுறீங்க சார்... பணத்தை கொடுத்திட வேண்டியதுதானே’’ என ஊழியர்கள் சொன்னபோது, ‘‘பணம் இல்லாமல் இல்லை. அதைக் கொடுத்து சீரியலுக்கு அனுமதி வாங்கிவிடலாம். அதற்கு நான் துக்ளக்கை நிறுத்திவிட வேண்டும். பரவாயில்லையா?’’ என பதில் சொன்னார் சோ. அவர்தான் சோ!

1991 - 1996 ஜெயலலிதா ஆட்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 1996 சட்டசபைத் தேர்தல் நேரத்தில், காங்கிரஸில் இருந்து பிரிந்து த.மா.கா என்கிற புதிய கட்சியை மூப்பனார் ஆரம்பித்து தி.மு.க-வோடு கூட்டணி வைத்தார். அந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினியின் ஆதரவும் கிடைத்தது. ‘‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. அதனால் தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்’’ என பகிரங்கமாகவே சொன்னார் ரஜினி. த.மா.கா கூட்டணி அமையவும் ரஜினி ஆதரவு தரவும் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் சோ. தி.மு.க ஆட்சியும் அமைந்தது. அதனாலேயே சோ மீது வெறுப்பு காட்டினார் ஜெயலலிதா. அந்த காலகட்டத்தில்தான் சோவின் மகள் திருமணம் நடந்தது. ‘‘மகளின் திருமணத்துக்கு ஜெயலலிதாவுக்கு பத்திரிகை வைக்கலாமா?’’ என துக்ளக் ஊழியர்களிடம் கருத்துக் கேட்டார். அதன்பிறகுதான் அழைப்பிதழ் வைக்க ஜெயலலிதாவிடம் அப்பாய்ன்மென்ட் கேட்டிருக்கிறார் சோ. ‘‘நீங்க வர வேண்டாம். நானே உங்க ஆபிஸுக்கு வருகிறேன்’’ என சொல்லி, துக்ளக் ஆபிஸுக்கு ஜெயலலிதா போனார். ‘ஜெயலலிதா வருகிறார்’ என்கிற தகவலை ஊழியர்களிடம் சொன்ன சோ, ‘‘அவங்க வருவாங்க... உங்கள் ஒவ்வொருவரையும் அவங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவரவர் இருக்கையிலேயே இருங்கள்’’ என்றார். ஜெயலலிதா வந்ததும் அறிமுகப் படலம் நடந்து முடிந்தது. அதன்பிறகு, ‘‘மாடியில்தான் என் ஆபீஸ். உன்னால படி ஏற முடியுமா? எதற்காக சிரமப்படுகிறாய். இங்கேயே பேசிக் கொள்ளலாமா?’’ என சோ சொல்ல... ‘‘எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை’’ என சொல்லி, படியேறி போய் அவர் அறையில் பேசிவிட்டுப் போனார் ஜெயலலிதா. ‘நீ... வா...’ என ஜெயலலிதாவிடம் ஒருமையில் பேசியவர், ஊழியர்களிடம் ‘அவங்க... வருவாங்க’ என பன்மையில் பேசினார். முந்தையது அந்நியோன்யம்; பின்னது மரியாதை! 

உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும்! - ஜெயலலிதாவின் ஏக்கம்!

சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்தார் சோ. அவரை பார்க்கப் போயிருந்தார் ஜெயலலிதா. ‘‘உடம்பை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்க... ரெஸ்ட் எடுங்க... நீங்க ரொம்ப வருஷம் இருக்கணும். உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும். எனக்குப் பின்னாடிதான் நீங்க போகணும்’’ என சோவிடம் ஆறுதல் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

‘அப்படி எல்லாம் பேசக்கூடாது’ என்று கண்டித்தார் சோ. ஆனால், ஜெ. சொன்னதுதான் இறுதியில் நடந்தது. முந்தைய நாள் ஜெயலலிதாவும் பிந்தைய நாள் சோவும் இறந்துபோனார்கள்! 

தீவிர இந்துத்வா ஆதரவாளர் சோ. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் அட்டைப் படத்தை கருப்பு நிறத்தில் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தார். தனது அலுவலகத்தில் பணியாற்றிய முஸ்லிம் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வேளையும் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கித் தந்த பண்பாளர்.

துக்ளக்கில் வெளிவரும் ‘கேள்வி பதில்’ பகுதிக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் தவறாமல் பதில்களை கொடுத்துவிடுவார் சோ. வேலைகள் இருந்தால் மட்டுமே வியாழக்கிழமை வரையில் தள்ளிப் போகும். அவர் இறப்பதற்கு முன்புகூட பதில்களை கொடுத்துவிட்டுத்தான் போனார். அந்த பதில்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் ரெடியானது. தனது மருமகள் சித்ராவை அழைத்து வாசகர் கேள்விகளுக்கு பதில்களைக் கொடுத்திருக்கிறார். துக்ளக் ஆரம்பித்த காலத்தில் இருந்து கேள்வி பதில் பகுதி கடைசி நேரத்தில் பிரின்டுக்கு போன வரலாறு கிடையாது. அதுதான் முதல்முறை. அது கடந்த ஞாயிறு அன்றைக்குத்தான் அரங்கேறியது. உடல்நிலை குன்றி வீட்டில் இருந்த காலகட்டத்தில்கூட ஒவ்வொரு இதழும் அவரின் பார்வைக்குப் போய் ஓகே ஆனபிறகுதான் பிரின்ட்டுக்கே போகும். அப்படித்தான் கடந்த துக்ளக் இதழை ரெடி செய்துவிட்டு எடிட்டரிடம் ‘ஓகே’ வாங்க சப் எடிட்டர்கள் அப்போலோ போனார்கள். அதே ஞாயிற்றுக்கிழமைதான் அப்போலோவில் இருந்த ஜெயலலிதா சீரியஸ் என செய்திகள் பரவின. ‘‘நிறைய கெடுபிடிகள் சார்... நாங்க போராடித்தான் இங்கே வந்தோம்’’ என சோவிடம் சொல்லியிருக்கிறார்கள் சப் எடிட்டர்கள். ‘‘யாராவது வி.ஐ.பி-கள் வருகிறார்களா என்ன?’’ என கேட்டுவிட்டு பக்கங்களைப் பார்த்து திருத்தங்களை சொல்லியிருக்கிறார் சோ. ‘‘கடைசி நேரத்தில் பதில்களை கொடுத்திருக்கீங்க... வழக்கம் போல இருந்தது சார்’’ என சப் எடிட்டர்கள் சொல்ல, ‘‘அப்ப இம்ப்ரூவ்மென்டே இல்லை என்கிறீர்களா?’’ என இரட்டை அர்த்தத்தில் கேட்டுவிட்டு, ‘‘சோவின் கேள்வி பதில்கள் வருவதை போஸ்டரில் போடுங்க’’ எனவும் சொல்லியிருக்கிறார். ‘சோவின் கேள்வி பதில்கள்’ இதுவரைக்கும் போஸ்டரில் வந்ததே கிடையாது. ‘‘அவ்வளவுதான் சார்... இனிமேல் என்ன இருக்கு சார்’’ என்றபடியே சப் எடிட்டர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும்! - ஜெயலலிதாவின் ஏக்கம்!

‘‘இம்ப்ரூவ்மென்ட் இல்லையா?’’ என அவர் எதற்காக கேட்டார் என தெரியவில்லை. அதன்பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றமே இல்லாமல் போய்விட்டது. உடனே ஐ.சி.யூ-வுக்கு சோ மாற்றப்பட்டார். அதே நேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையும் சீரியஸ் ஆகிக் கொண்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பேர்களின் உயிர்களும் போராடிக் கொண்டிருந்தன. ஜெயலலிதா உயிர் பிரிந்தபோது அந்த செய்தி சோவின் நினைவுக்குப் போய் சேரவில்லை. அடுத்த 30 மணி நேரத்தில் சோவின் உயிரும் உடலைவிட்டுப் பிரிந்து போனது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.