News
Loading...

அந்த மூவர்...

Jayalalithaa

‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்றார் எம்.ஜி.ஆர். மூன்று பேரின் மூச்சுக்காற்றில் கலந்தது ஜெயலலிதாவின் வாழ்க்கை!

`எனக்கு எல்லாமே அவர்தான்'’ என்று ஜெயலலிதா சொன்னது, தனது தாய் சந்தியாவை. ‘`எனது வழிகாட்டி’' எனச் சொன்னது, எம்.ஜி.ஆரை. ‘`எனது உடன்பிறவா அன்புச் சகோதரி’' எனக் காட்டியது, சசிகலாவை. இந்த மூன்று பேர் இல்லை என்றால், ஜெயலலிதா இல்லை!

அம்மாவின் அம்மா

ஜெயலலிதாவுக்கு அவருடைய அம்மா சந்தியா எவ்வளவு முக்கியமானவர் என்பதை, ‘ஆனந்த விகடனுக்கு’ அளித்த பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். 

‘‘எந்தப் பொது நிகழ்ச்சிக்கும் செல்லும் முன்னர் எந்தப் புடவையை உடுத்திக்கொண்டு தயாராவது என்ற குழப்பத்துடன் பீரோவில் இருக்கும் அத்தனை புடவைகளையும் எடுத்து என் முன் விரித்துப் போட்டுவிட்டு, குழப்பத்தில் விழித்தபடி உட்கார்ந்திருப்பேன். அம்மா வருவார், ‘அம்மு... ஏன் இன்னும் கிளம்பாம உட்கார்ந்துட்டு இருக்கே? சரி... சரி, சீக்கிரம் இந்தப் புடவையைக் கட்டிக்கொண்டுக் கிளம்பு' என்பார். நானும் அதை உடுத்திக்கொண்டு கிளம்புவேன். 

என் அம்மா இல்லாமல் நான் கலந்துகொண்ட முதல் விழா, சென்னை சினிமா ரசிகர்கள் நடத்திய பரிசளிப்பு விழாதான். அந்த விழாவுக்குச் செல்லும் முன்னர், என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை மூடிக்கொண்டு, அம்மாவை மனதில் நினைத்தபடி ஒரு புடவையைத் தொட்டேன். அதை உடுத்திக்கொண்டுதான் அன்றைய நிகழ்வுக்குச் சென்றேன்” என்கிறார். 

 தன் ப்ரியமான அம்மாவைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான பாடல்களை ஜெயலலிதா எழுதிவைத்திருந்தார். அதில் ஒன்று இது... 

`என் அன்பான தாய்க்கு
உனக்கொரு அம்மா இருந்தால்
அவளை அன்பாகக் கவனித்துக்கொள்!
அவள் அமர்ந்திருந்த நாற்காலியை
வெறுமையாகப் பார்க்கும் வரை
அவளது அருமை உனக்குப் புரியாதென்பதை
இப்போதே அன்புடன் கவனி!'

அந்த அளவுக்கு ‘அம்மா’ வேதவல்லி (எ) சந்தியாதான் ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்தார். கணவர் ஜெயராமின் மறைவுக்குப் பிறகு, ஒரு கம்பெனியில் காரியதரிசியாகப் பணிபுரிந்த சந்தியா, அவரது தங்கையின் அறிமுகத்தால் சினிமாவுக்கு வந்தார். தன் செல்ல மகள் அம்முவுக்கு, மூன்று வயதில் இசை, நடனம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார் சந்தியா. ஆளுமைக்கான அஸ்திவாரத்தையும் சந்தியாதான் அவருக்கு விதைத்தார்.

Jayalalithaa
சினிமாவில் இருந்தாலும், தன் பிள்ளைக்கு சினிமா வேண்டாம் என முடிவெடுத்து வைத்திருந்தவர் சந்தியா. அவரே ஒருகட்டத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டார். 16-ம் வயதில் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் ‘வெண்ணிற ஆடை’ படம் வழியே திரையுலகுக்கு ஜெயலலிதா அறிமுகமானார். அதன் பிறகு சினிமா அவரை விடவில்லை. சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம்வந்த ஜெயலலிதா, `அரசியலுக்கு வர வேண்டும்' என விரும்பியதே இல்லை. ஒரு பேட்டியில் “என் அம்மா இருந்திருந்தால், நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்; என் அப்பா இருந்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன்” எனச் சொல்லியிருக்கிறார். 

1971-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் நடிப்பில் ஒவ்வொரு கட்டத்தையும் வடிவமைத்தார் சந்தியா. அந்த வருடம் அக்டோபர் மாதம் இறந்தார் சந்தியா. அதுவரை ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒவ்வொரு கட்டமாகச் செதுக்கிவந்த சந்தியாவின் இன்மை, அவருக்குப் பெருத்த இழப்பாக இருந்தது. அடுத்த கட்டத்தை எப்படி நகர்த்திச் செல்வது எனத் தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா.

நீரும் நெருப்பும்

1965-ம் வருடம், `ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படப் படப்பிடிப்புத் தளம். கதாநாயகன் எம்.ஜி.ஆர் வருகிறார் என்பதை முன்னறிவிப்புச் செய்யும்விதமாக,“குழந்தே, சின்னவர் வர்றாரு. கொஞ்சம் எழுந்து நில்லும்மா” என ஜெயலலிதாவின் காதைக் கடித்தார் இயக்குநர்.

அவர் சொன்னதை ஏற்கும் எண்ணம் இருந்தாலும், தன் விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்துவதை ஜெயலலிதா விரும்ப வில்லை. இயக்குநரை ஒரு பார்வை பார்த்தபடி அழகிய ஆங்கிலத்தில் சொன்னார்,  “ஏன் எழுந்து நிற்க வேண்டும்? அவர் படத்தின் நாயகன், நான் நாயகி. தொழில்முறையில் இருவரும் நடிகர்கள். வித்தியாசம் என்பது, கதாபாத்திரத்தில்தானே! அவர் என் அருகே வரும்போது எழுந்து வணக்கம் தெரிவிக்கிறேன்” என்றார்.

இயக்குநர் வாயடைத்துப்போனார். விஷயம், எம்.ஜி.ஆர் கவனத்துக்குச் சென்றது. ‘ஜெயலலிதாவின் எதிர்காலம் அவ்வளவுதான்’ என, படப்பிடிப்புத் தளத்தில் பேசிக்கொண்டனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தன்னிடம் ஆதாயம் அடைவதற்காகப் போலியாக வணங்குபவர்களைப் பார்த்துச் சலித்துப்போனவர் எம்.ஜி.ஆர். அப்படிப் பட்டவருடைய உள்ளத்தில், ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையும் உறுதியும் அழுத்தமாகப் பதிந்தன. `ஆயிரத்தில் ஒருவன்', எம்.ஜி.ஆருக்கு ஒரு புதிய கதாநாயகியை மட்டும் கொடுக்கவில்லை; அரசியல் வாரிசையும் கொடுத்தது.

Jayalalithaa

`ஆயிரத்தில் ஒருவன்' படத்தைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சக்கைபோடுபோட்டன. எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஜோடி, `வெற்றி ஜோடி' என சினிமா விநியோகஸ்தர்களால் கணிக்கப்பட்டது. தாயார் சந்தியா மறைந்த பிறகு, தொழில்முறையைத் தாண்டி, ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு அரணாக எம்.ஜி.ஆர் மாறினார். 

தி.மு.க-வில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கிய சமயம், தனக்கு அடுத்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க-வை முன்னெடுத்துச் செல்ல மக்களைக் கவரும் பேச்சாளர் தேவைப்பட்டார். இருவருக்கும் இடையே சில காலம் மனஸ்தாபம் இருந்ததால் எம்.ஜி.ஆர் இதுகுறித்து ஜெயலலிதாவிடம் பேசவில்லை. 

80-களின் தொடக்கத்தில் சற்றே பொருளாதாரச் சிக்கலில் தவித்த ஜெயலலிதா, தன் பெயரில் நாட்டியக் குழு ஒன்றைத் தொடங்கி, சென்னை சபாக்களில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திவந்தார். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் 
ஆர்.எம்.வீரப்பன் கேட்டுக்கொண்டதன் பேரில், ஜெயலலிதாவின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில்கொண்டு, அ.தி.மு.க மேடைகளில் ஜெயலலிதாவின் நாட்டியக் குழுவுக்கு எம்.ஜி.ஆர் வாய்ப்பு அளித்தார். 

1982-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி, கட்சியின் உறுப்பினராக ஜெயலலிதாவைச் சேர்த்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். அடுத்த 35 ஆண்டுகள் ஜெயலலிதா பரபரப்புமிக்க அரசியல்வாதியாக உருவெடுப்பதற்கான விதை அங்கிருந்துதான் தொடங்கியது.

1982-ம் ஆண்டில் கடலூர் மாநாட்டில் ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் பேசிய ஜெயலலிதாவுக்கு, கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவியை அளித்து, பெருமை கொள்ளவைத்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகே ஜெயலலிதாவின் கிடுகிடு வளர்ச்சி தொடங்கியது. அவரின் வளர்ச்சி, பிற கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவை, கட்சி விவகாரங்களில் இருந்து தள்ளிவைக்க முயன்றனர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் எம்.ஜி.ஆர்.

1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம், எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜெயலலிதாவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சட்டமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. பிரசாரத்தில் ஜெயலலிதாவுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. எனினும், தானாக வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டார். தமிழகம் முழுவதும் தன் ஆதரவாளர்களைக்கொண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்தார். மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. உடல் நலம் தேறி, 1985-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி எம்.ஜி.ஆர் சென்னை திரும்பினார். செப்டம்பரில் மீண்டும் ஜெயலலிதாவை கொள்கைப்பரப்புச் செயலாளராக்கினார் எம்.ஜி.ஆர். 

மதுரையில் `எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு' கூட்டச் சொல்லியிருந்தார் எம்.ஜி.ஆர். மாநாட்டுப் பேரணியைத் தொடங்கிவைக்கும் வாய்ப்பும் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. அதே மேடையில் எம்.ஜி.ஆருக்கு தலைமைக் கழகம் சார்பில் வெள்ளி செங்கோலை வழங்கி அவரது காலில் விழுந்து வணங்கினார் ஜெயலலிதா. தனக்கு அளிக்கப்பட்ட செங்கோலை ஜெயலலிதாவிடமே திருப்பிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இது யதேச்சையானதா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்பது, இன்றளவும் புரியாத புதிர். ஆனால், இந்த நிகழ்வை ‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு  கழகத்தை ஏற்று நடத்தப்போகும் தன் வாரிசை அடையாளம் காட்டும் முகமாகத்தான் 
எம்.ஜி.ஆர் செங்கோலை ஜெயலலிதாவிடமே திருப்பி அளித்ததாக ஜெயலலிதா ஆதரவாளர்கள் இன்றளவும் நம்புகிறார்கள்.

எங்கிருந்தோ வந்தார்...

ஜெயலலிதா யாரையும் எளிதில் நம்பிவிட மாட்டார். அவருடைய நம்பிக்கையைப் பெற்ற மூன்றாவது நபர், சசிகலா.

வீடியோ கேசட்டுகள் கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்தவர் சசிகலா. அதுதான் ஜெயலலிதா - சசிகலா இடையே நட்பு மலர்வதற்கான தொடக்கப் புள்ளி. தனிமையில் இருந்த ஜெயலலிதாவுக்கு, சசிகலாவின் பேச்சு ஆறுதலாக இருந்தது. ‘வீடியோ கேசட்’ கொடுப்பவர் என்பதைத் தாண்டி இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாகச் செல்லும் நிலைக்கு உயர்ந்தார்.

எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் தனக்கு ஏற்பட்ட அவமரியாதையால் ஜெயலலிதா உடைந்துபோயிருந்தார். இனி அரசியல் வாழ்க்கையே இல்லை என்றிருந்த நேரத்தில், ‘உங்களுக்கு அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. யாருக்கும் பயந்து ஒதுங்க வேண்டாம்’ என்று அரசியல் ஆசையை வளர்த்தவர்கள் சசிகலாவும் நடராசனும்தான் என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள். 

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தன்னுடைய அணிக்காக சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதாவுக்கு சசிகலா பல உதவிகளைச் செய்தார். 1991-ம் ஆண்டு, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.

Jayalalithaa

அதுவரை தனது கணவர் நடராசனோடு பெசன்ட் நகர் இல்லத்தில் இருந்து போயஸ் தோட்டத்துக்கு வந்து சென்ற சசிகலா, போயஸ் தோட்டத்திலேயே குடியேறியது அப்போதுதான். அதன் பிறகு சசிகலாவின் வாழ்க்கைப்பாதை வேறு திசையில் நகரத் தொடங்கியது. கட்சி, ஆட்சி என ஜெயலலிதாவின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும் சசிகலா தவிர்க்க முடியாத சக்தியானார்.

சசிகலா உடனான இந்த நெருக்கத்தின் காரணமாகவே, சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா தத்தெடுத்தார். திருமணத்து அன்று ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே நிறத்தில் பட்டுடுத்தி ஒட்டியாணம், காசு மாலை, தங்க-வைர நகைகளை அணிந்து வந்த கோலம், அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தை அலங்கரித்தது.

அரசின் எல்லா மட்டங்களிலும் சசிகலா குடும்பத்தின் அத்துமீறல்கள் காரணமாக ஜெயலலிதா அரசு மீது அதிருப்தி எழுந்தது. 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க அரசு படுதோல்வி அடைந்தது. இது, ஜெயலலிதா-சசிகலா உறவுக்கு தற்காலிகமாக முடிவுகட்டியது. உடன்பிறவா சகோதரி சசிகலாவை, முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியேற்றினார். தனி நீதிமன்றம் அமைத்து தி.மு.க அரசு தொடுத்த வழக்கு விசாரணைகளுக்கு இடையே, ஒரே மாதத்தில் சசிகலாவை மீண்டும் போயஸ்தோட்டத்தில் இணைத்துக்கொண்டார்.

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், சசிகலா குடும்ப ஆதிக்கம் மீண்டும் தொடங்கியது. அப்போது ஜெயலலிதாவுக்கு டான்சி நில வழக்கில் தண்டனை கிடைத்ததால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. ஜெயலலிதாவுக்குப் பதிலாக வேறு யாரை முதலமைச்சராக நியமிக்கலாம் என்ற ஆலோசனையில், ஓ.பன்னீர்செல்வம் பெயரை டிக் அடித்தவர் சசிகலா. 

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் சசிகலா குடும்பம் முக்கியப் பங்கு ஆற்றியது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் ஜெயலலிதாவிடம் புகைச்சலை ஏற்படுத்தியது. சசிகலா உள்பட அவரது உறவினர்கள் 19 பேரை அ.தி.மு.க-வில் இருந்து டிஸ்மிஸ் செய்தார். சசிகலா, போயஸ் கார்டனைவிட்டு வெளியேறினார்.

சில மாதங்களிலேயே அக்காவிடம் மன்னிப்புக் கோருவதாக, ‘அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். அந்த ஆசையும் எண்ணமும் இல்லை’ என உருக்கமான கடிதம் எழுதினார் சசிகலா. இதன் பின்னர், சில நாட்களில் மீண்டும் கார்டனுக்குள் புகுந்தார் சசிகலா.

2014-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது, அவரோடு ஜெயிலில் சசிகலாவும் 22 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார வேலைகளை சசிகலாவே முன்னின்று செய்தார். 

1991 தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் நிழலாக, கடைசி 25 ஆண்டுகள் இருந்தவர் `உடன்பிறவா சகோதரி' சசிகலாதான்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.