News
Loading...

சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!

சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!

1987 டிசம்பர் 24-ல் மறைந்த எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. உடலுக்கு அருகே தலை மாட்டில் அப்போது நின்றுகொண்டிருந்த ஜெயலலிதா, 29 ஆண்டுகள் கழித்து அதே ராஜாஜி ஹாலில் சடலமாக கிடத்தப்பட்டிருந்தார். ராணுவ வண்டியில் எம்.ஜி.ஆர். உடல் ஏற்றப்பட்டபோது அதில் ஏற முயன்ற ஜெயலலிதா கீழே தள்ளப்பட்ட போதுதான் அவரின் அரசியல் அத்தியாயம் தொடங்கியது. அதேப் போன்றதொரு ராணுவ வாகனத்தில் ஜெயலலிதாவின் உடல் இப்போது ஏற்றப்பட்டது. அன்று எம்.ஜி.ஆருக்காக அஞ்சலி செலுத்த வந்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. இன்று அவரது மகன் ராகுல் காந்தி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்து போனார். 29 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். மறைவின்போது நடந்த சம்பவங்கள் ஜெயலலிதா மறைவின்போது ரீவைண்ட் ஆகிக் கொண்டிருந்தன.

TN 09 BE 5969 என்ற பதிவு எண் கொண்ட Toyota Land Cruiser LC 200 மாடல் காரைத்தான் ஜெயலலிதா பயன்படுத்தி வந்தார். செப்டம்பர் 22-ம் தேதி காலையில் கோட்டைக்கு வந்தபோதுகூட அந்த காரில்தான் வந்தார். டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவு TN 11 S 2289 என்கிற பதிவு எண் கொண்ட Flying Squad Redefining Care என்கிற ஆம்புலன்ஸில்தான் ஜெயலலிதாவின் உடல் அப்போலோவில் இருந்து போயஸ் கார்டனுக்கு எடுத்து வரப்பட்டது. சிம்ம ராசிக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா.அவரது உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸிலும் ‘சிம்மம்’ இருந்ததுதான் ஆச்சர்யம். சிம்மம் என்கிற ஆங்கில வார்த்தை அந்த ஆம்புலன்ஸின் முகப்பில் எழுதப்பட்டு சிங்கம் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. சிறகுகளோடு இருக்கும் சிங்கம் படங்களும் அந்த ஆம்புலன்ஸின் பக்கவாட்டிலும் பொறிக்கப் பட்டிருந்தன. இது திட்டமிடப்பட்டதா? எதேச்சையாக அரங்கேறியதா? தெரியவில்லை. அந்த ஆம்புலன்ஸில் Advanced Life Support Ambulance என எழுதப்பட்டிருந்து அந்த சூழலில் அது கொஞ்சமும் பொருந்தவில்லை. 

டை அடிக்கும் பழக்கம் உடையவர் ஜெயலலிதா. 75 நாட்கள் சிகிச்சையில் இருந்தததால் அவரின் தலைமுடி வெள்ளையாகி இருந்தது. அதனால் அவரின் முடிக்கு டை அடித்தார்களாம். சிகிச்சையில் இருந்தபோது கையில் வாட்ச் இல்லை. ஆனால், இறந்தபிறகு வாட்ச் மாட்டப்பட்டிருந்தது. இரண்டு கைவிரல்களில் மோதிரங்களும் மாட்டப்பட்டிருந்தன. கழுத்தில் தங்க நகை அணியும் பழக்கம் இல்லை. ஆனால், அவரது உடலில் தங்க சங்கிலியை மாட்டியிருந்தார்கள். ஜெயலலிதாவுக்குப் பிடித்த நிறம் பச்சை. அதே நிறத்தில் மெரூன் பார்டர் போட்ட பட்டுப் புடவையை சுற்றியிருக்கிறார்கள். மிகவும் போராடித்தான் புடவையைக் கட்டியிருக்கிறார்கள். இந்த விஷயங்கள் எல்லாமே கார்டனில் நடந்தன.

சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!

போயஸ் கார்டனில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு வரப்பட்டபோது கட்சிக் கொடிதான் போர்த்தப்பட்டிருந்தது. பிறகு, கட்சிக் கொடியை எடுத்துவிட்டு தேசியக் கொடி போர்த்தப்பட்டது. உடல் வைக்கப்பட்ட பிறகு அவரது வாய் லேசாகத் திறக்க ஆரம்பித்தது. அருகில் இருந்த இளவரசின் மகள் கிருஷ்ணப் ப்ரியாவும் சசிகலாவும் தாடையைப் பிடித்து வாயை மூட முயன்றனர். ஆனால், சில விநாடிகளிலேயே மீண்டும் வாய் திறந்தது. பற்கள் வெளியே தெரிய...  தொடர்ந்து வாயை மூடுவதற்கு முயன்று தோற்றுப் போனார்கள். கடைசியில் தாடையைச் சுற்றி வெள்ளைத் துணியைக் கட்டி வாயை மூடினார்கள். ராஜாஜி ஹாலுக்கு உடல் கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோக்களில் அந்த வெள்ளைத் துணி இருக்காது.

உடலின் தலைமாட்டில் சசிகலா நின்று ஜெயலலிதாவின் முகத்தை சரி செய்தபடியே இருந்தார். பிரதமர் மோடி வந்தால் சசிகலாவை சந்திப்பார் எனத் தெரிந்து அதற்கு வசதியாக சசிகலாவை கொஞ்சம் தள்ளி நிற்க வைத்தார் அவரது சகோதரர் திவாகரன். மறக்காமல் அவரும் பக்கத்திலேயே நின்றுகொண்டார். மோடி வந்தபோது இரண்டு பேர் பதறினார்கள்; ஒருவர் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, இன்னொருவர் பி.ஜே.பி. ராஜ்யசபா எம்.பி.யான  இல.கணேசன். சசிகலாவை மோடிக்கு அறிமுகம் செய்து வைப்பதிலேயே குறியாக இருந்தார் வெங்கய்யா நாயுடு. சசிகலாவின் தலையை தொட்டு ஆறுதல் சொன்னார். அதன்பிறகுதான் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் பார்வையைத் திருப்பினார். கட்டித் தழுவி அவருக்கும் ஆறுதல் சொன்னார் மோடி. கிளம்பும் போது மீண்டும் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது அருகில் நின்ற இல.கணேசன் அவரைப் பிடித்து எம்.நடராஜனுக்கு அறிமுகம் செய்து வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். எம்.நடராஜனுக்கு வணக்கம் வைத்துவிட்டு காதில் ஏதோ சொன்னார்.  

சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!

அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் ராஜாஜி ஹாலின் நீண்ட படிக்கட்டுகளில் உட்கார்ந்திருக்க... சாதாரண கவுன்சிலர் சீட்டுக்கு மனு போட்ட தேவா, ஜெயலலிதாவின் உடலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார்.  சசிகலா குடும்பத்தினரோடு தேவாவுக்கு நெருக்கம் அதிகம். அதனால் ஸ்பெஷல் மரியாதை. நடிகை விந்தியா அஞ்சலி செலுத்திவிட்டு அப்படியே படிக்கட்டில் உட்காரப் போன அவரை உட்கார விடாமல் எழுப்பி அனுப்பினார்கள். அஞ்சலி செலுத்த வந்தவர்கள் உடலுக்கு வணக்கம் வைத்து சில விநாடிகள்கூட அந்த இடத்தில் நிற்கவிடாமல் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். பலரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளினார்கள்.  இதில் நீல நிற சட்டை அணிந்திருந்த ஒருவர் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே செயல்பட்டார். அவர் இளவரசியின் மருமகன் ராஜராஜன்.

நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா பங்கேற்றால் மேடையை சுற்றி ஏர் கூலர்களும் ஏசிகளும் வைக்கப்பட்டிருக்கும். சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஒற்றை ஆளாக ஜெயலலிதா மேடையில் இருக்க... அந்த மேடையைச் சுற்றி ஏசிகள் வைக்கப்பட்டிருந்தன. ஹெலிகாப்டரில் ஏறும்போதும்கூட கையில் பிடித்துக்கொள்ளும் சிறிய மின்விசிறியை ஜெயலலிதா பயன்படுத்தினார். அப்படிப்பட்ட ஜெயலலிதா சடலமாக ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டபோது அவருக்கு அருகில் ஏர்கூலர்கள் இருந்தன. ஆனால் அந்த ஏர்கூலர்களை மறைத்துக் கொண்டு மன்னார்குடி கும்பல் நின்றதால் ஏசி மிஷின்களில் இருந்து வந்த குளுகுளு காற்று அவர்களுக்குதான் வீசியது.  

சிம்ம வாகனத்தில் உடல்... கார்டனில் டை... சமாதியில் அப்போலோ!

75 நாட்களும் அப்போலோவை சுற்றியே அரசியல் அரங்கேறிக் கொண்டிருந்தது. ‘‘பேசுகிறார்... எழுந்து நடந்தார்... கிச்சடி சாப்பிட்டார்’’ என அப்போலோவில் இருந்து வந்த செய்திகள் பல ரகம். ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த பிறகும் அப்போலோ செய்திகள் அடங்கிப் போகாமல் ஜெயலலிதாவின் சமாதி வரையில் தொடர்ந்தது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் சமாதியைச் சுற்றி பேரிகார்டுகளை அடுக்கி பாதுகாப்பு வளையத்தைப் போட்டிருந்தது போலீஸ். அந்த பேரிகார்டுகளில் ஒன்றில் அப்போலோ விளம்பரம் பளிச்சிட்டது. அதில் இருந்த வாசகம் Save Time Save Lives! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்