News
Loading...

உண்மையை அறிய ஜெயலலிதாவின் பிணத்தை ஏன் தோண்டி எடுக்கக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உண்மையை அறிய ஜெயலலிதாவின் பிணத்தை ஏன் தோண்டி எடுக்கக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

முதல்வர் ஜெயலலிதாவின் பிணத்தை தோண்டி எடுத்து உண்மையை வெளியே கொண்டு வர ஏன் உத்தரவிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கு சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்.22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த டிச.5 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜோசப் தொடர்ந்த பொதுநல வழக்கு விடுமுறை கால அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி வைத்தியநாதன், 'தனக்கு தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார், உணவு சாப்பிடுகிறார் என மருத்துவமனை தரப்பில் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், திடீரென ஜெயலலிதா மரணமடைந்தது எப்படி?, அவரது உறவினர்களை மருத்துவமனையில் அனுமதிக்காததற்கு காரணம் என்ன?, அவரது உடல்நிலை குறித்த வெளிப்படையான தகவல்கள் ஏன் வெளியிடப்படவில்லை?' என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ, பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற விவகாரம், உள்துறை செயலாளர் வருகிற ஜன.9ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இவ்வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார். இதனிடையே, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு அமைத்து விசாரிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...