News
Loading...

விக்ஸ், கோரக்ஸ் போன்ற 340 மருந்துகள் மீது மத்திய அரசு பிறப்பித்த தடை ரத்து

விக்ஸ், கோரக்ஸ் போன்ற 340 மருந்துகள் மீது மத்திய அரசு பிறப்பித்த தடை ரத்து

புதுடெல்லி: ஏடாகூடமான முறையில் வெளியிடப்பட்டது என கருத்து தெரிவித்து, அறிவிக்கபட்ட 340 வகை நோய் எதிர்ப்பு மாத்திரை, மருந்துகளுக்கு விதித்த தடையை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கோரக்ஸ் இருமல் மருந்து, விக்ஸ் ஆக்சன் 500 மாத்திரை என மக்கள் மத்தியில் அதிகமாக விற்பனையாகும் 340 ‘பிக்சட் டோஸ் காம்பினேசன் - எப்டிசி’ எனப்படும் நிலையான கலப்பு வகை மருந்துகள் தடை செய்யப்படும் என மார்ச் 10ல் மத்திய அரசு அறிவித்தது. இந்த மருந்துகள் மக்கள் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பவை என்றும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில், 454 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் பார்மா கம்பெனிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா முன்னிலையில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையில், ‘‘மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ளாமல், தடை அறிவித்துள்ளது’’, என மருந்து கம்பெனிகள் சார்பில் வாதாடப்பட்டது. இரு தரப்பு விவாதங்களையும்கேட்ட பின்னர் தீர்ப்பு வழங்கி நீதிபதி கூறியதாவது:

எப்டிசி அறிவிப்பு விவகாரத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல், ஏனோதானோவென மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது. மருந்து உற்பத்தி முன்னணி பார்மா கம்பெனிகள் கோரிக்கையை ஏற்று,  மத்திய அரசின் அறிவிப்புக்கு கடந்த மார்ச் 14ல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு வெளியிட்ட தடை அறிவிப்பாணையை உடனடியாக அவசர கதியில் அமல்படுத்த வேண்டியதில்லை. தவறு செய்யாத பட்சத்தில், மக்கள் நலனில் அக்கறையுள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகுசாதன உற்பத்தி நிறுவனங்கள் சட்டம் 26ஏன்படி அதிகாரம் செலுத்த முடியாது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...