News
Loading...

ஆதார் பேமண்ட் மொபைல் ஆப் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆதார் பேமண்ட் மொபைல் ஆப் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

ரொக்கப் பணமின்றி டிஜிட்டல் முறையில் மக்கள் எளிமையாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள வசதியாக ஆதார் பேமண்ட் மொபைல் ஆப் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ரொக்கப்பணமின்றி டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ரொக்கப்பணம் பயன்படுத்துவதை குறைத்து டெபிட், கிரெட்டு கார்டு மூலமாகவோ அல்லது நெட்பேங்கிங் மூலமாகவோ பரிவர்த்தனை செய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் அனைத்து மக்களும் இந்த வசதியைப் பெற முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்த சிக்கலைப் போக்கும் விதமாக ஆதார் எண் மூலம் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆதார் பேமண்ட் ஆப் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த ஆப் இரண்டு விதங்களில் செயல்படுகிறது. நுகர்வோர் பயன்படுத்தும் விதத்திலும், வணிகர்கள் பயன்படுத்தும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்த முதலில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை வாடிக்கையாளர்கள் இணைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான ஆப், தற்போது நடைமுறையில் இருக்கும் பேடிஎம், ஃப்ரிசார்ஜ் உள்ளிட்ட மொபைல் வாலெட்டுகளை போல செயல்படும். ஒரு கிளிக் செய்தாலே போதும் மிக விரைவில் வங்கி கணக்கில் இருந்து டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

வணிகர்கள் பயன்படுத்தும் விதத்திலும் ஆதார் பேமண்ட் ஆப் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது விசா, மாஸ்டர்கார்டு போன்ற நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இது முட்டுக்கட்டையாக இருப்பதால், அதற்கு முடிவு கட்டும் விதத்தில் மத்திய அரசு இந்த ஆப்பை உருவாக்கி இருக்கிறது. வணிகர்கள் இந்த ஆதார் பேமண்ட் ஆப்பை பயன்படுத்த, ஆன்ட்ராய்டு செல்போனுடன் பயோமெட்ரிக் ஸ்கேனரும் தேவைப்படுகிறது. அதன் மூலம் ரொக்கப்பணமின்றி எளிதாக டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். தொலை தூரங்களில் உள்ள கிராம மக்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையைப் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் இந்த ஆதார் பேமண்ட் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...