News
Loading...

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சோதனை போட முடியுமா?

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சோதனை போட முடியுமா?

செல்லாக்காசு அறிவிப்புக்குப் பிறகு, அடுத்த அதிரடியாக தங்கத்தை கையில் எடுத்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. கறுப்புப் பணம் பெரும்பாலும் தங்கமாகவும், வீடு மற்றும் மனைகளாவும் மாற்றப்பட்டிருக்கின்றன. அதனால்தான் தங்கத்தின் மீது பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள்.

இந்தியர்களின் கலாசாரத்தில் கலந்துவிட்ட ஒன்று தங்கம். அதனால், தங்கம் நுகர்வில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்களைக் காட்டிலும் பெண்களோடு சென்டிமென்டாக கலந்துள்ளது தங்கம். பெண்களின் சேமிப்பிலும், திருமணத்திலும் தங்கத்துக்கு முதலிடம் எப்போதும் உண்டு. இந்தியாவில் தற்போது சுமார் 18 ஆயிரம் டன் தங்கம் புழக்கத்தில் உள்ளது. இவ்வளவு தங்கமும் இந்தியப் பொருளாதாரத்துக்குப் பயன்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் தங்கம் வைத்திருப்பதில் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ‘திருமணமான ஒரு பெண் 500 கிராம் வரையிலும், திருமணமாகாத பெண் 250 கிராம் வரையிலும் தங்க நகைகளை வைத்திருக்கலாம். ஒரு ஆண் அதிகபட்சமாக 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். இவற்றுக்கு வரி எதுவும் விதிக்கப்படாது. அதற்குமேல் வைத்திருக்கும் தங்கத்துக்கு, ஆதார வருமானத்தைக் காண்பிக்க வேண்டும். அப்படி காட்டத் தவறும்பட்சத்தில் வரி விதிக்கப்படும்’ என அறிவித்திருக்கிறார்கள். மேலும், ‘முன்னோர் களிடமிருந்து பெற்ற பரம்பரை நகைகள் மீதும், கணக்கில் காட்டிய மற்றும் விவசாய வருமானத்தில் வாங்கிய நகைகள் மீதும் வரி விதிக்கப்படாது’ என்றும் வருமானவரி சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்த சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுதான் என்றாலும், இதுவரை கடை பிடிக்கப்படவே இல்லை. தனிநபர்கள் வைத்திருக்கும் தங்கம் மீதான சோதனைகளையும் இதுவரை வருமானவரித் துறையினர் பெரிய அளவில் செய்யவில்லை. ஆனால், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையைத் தொடங்கி விட்ட மத்திய அரசு, இதனை இனி தீவிரமாகச் செயல்படுத்த இருக்கிறது. அதற்கான முன்னோட்டம்தான் நகைகள் பற்றிய அறிவிப்பு. கரன்சி பிரச்னையில் கழன்று போயிருக்கிற மக்களை இது பதற்றமடையச் செய்துள்ளது.

இதன் தாக்கம் எப்படி இருக்கும்? என கமாடிட்டி வர்த்தகத்தை நடத்தும் ‘இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்டு டெரிவேட்டிவ்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை மேலாளர் முருகேஷ் குமாரிடம் கேட்டோம். “தங்கம், நாட்டின் பொருளாதாரத்துக்குப் பயன்படாத ஒரு பொருள் என்றாலும், அதுதான் ஒரு நாட்டின் செலாவணி மதிப்பை நிர்ணயிக் கிறது. ரிசர்வ் வங்கியில் இருப்பில் இருக்கும் தங்கத்தை வைத்துதான் நம்முடைய ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியும். இது, ஆபரணங்களாகவும், தனிநபர்களிடம் கட்டிகளாகவும் அதிக அளவில் தேங்கிப்போவது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. தங்கம் மூன்று வழிகளில் இந்தியாவுக்குள் புழங்குகிறது. ஒன்று வங்கிகள் மற்றும் எம்.எம்.டி.சி என்கிற அரசு நிறுவனத்தின் வழியாக இறக்குமதி செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. இரண்டு, பழைய நகைகளை மீண்டும் உருக்கி புதிதாக்கி புழக்கத்தில் விடப்படுகிறது. மூன்று, கடத்தல் தங்கம். இந்தக் கடைசி இரண்டு வழிகளில்தான் பெரும்பாலும் கறுப்புப் பணம் பயன்படுத்தப்படுகிறது. இவைதான் பெரும்பாலும் மக்களின் கைகளில் புழங்கிக் கொண்டிருக்கிறது.

தங்கம் நுகர்வு மீதான கட்டுப்பாடுகள் ஏற்கெனவே இருப்பதுதான். இப்போது, அதை 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்போவதாக மத்திய அரசு சொல்லியிருக்கிறது. 100 பவுனுக்கு மேல் வைத்துள்ளவர்கள் அதற்கான கணக்குகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அதிகமாக தங்கம் வைத்துள்ளவர்கள் அதை எந்தப் பரிவர்த்தனைக்கும் பயன் படுத்தாமல் பதுக்கி வைத்திருந்தால் கண்டுபிடிக்கவே முடியாது. உண்மையிலேயே கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர வேண்டுமெனில் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் சோதனை போட்டால்தான் முடியும். அதுவும் சாத்தியமே இல்லை” என்றார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பீதியடைந்திருப்பது பெண்கள்தான். இதுபற்றி சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி சுசீந்திராவிடம் கேட்டதற்கு, “இது ஒரு வேடிக்கையான நடவடிக்கையாக இருக்கிறது. கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் யார்? அது எங்கெல்லாம் இருக்கிறது என்ற விவரங்கள் அனைத்தும் அரசுக்குத் தெரியும். ஆனால், ‘கறுப்புப் பணத்தின் மீது போர் தொடுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களை எல்லாம் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, அப்பாவி மக்கள் மீது போர் தொடுப்பது எந்த வகையில் நியாயம்?

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சோதனை போட முடியுமா?

ஊரறிய, உலகறிய 650 கோடி ரூபாய் செலவில் கர்நாடகா முன்னாள் அமைச்சரின் இல்ல திருமணம் நடைபெற்றபோது, அது பற்றி மத்திய அரசு ஏதாவது சொன்னதா? நடவடிக்கை எடுத்ததா? 9,000 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பித் தராமல் தலைமறைவான மல்லையா, இந்தியாவை விட்டு வெளியேறியபோது, அரசு என்ன செய்துகொண்டிருந்தது? 

கொள்ளைக்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள், மோசடிக்காரர்கள் போன்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு சாதாரண மக்களை வதைப்பதற்கு பெயரா அரசு?  உண்மையிலே தங்கத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அப்படி நடக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. காரணம், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அதானியும், அம்பானியும் அல்ல. அனைவரும் சாதாரண மக்கள். ஏ.டி.எம்., வங்கி வாசல்களில் நாள் கணக்கில், மழையிலும் வெயிலிலும் எந்தக் கோடீஸ்வரராவது நின்றார்களா? இல்லையே. அதைப்போலத்தான், தங்கம் விஷயத்திலும் நடக்கப் போகிறது.  

‘செல்லாக்காசு அறிவிப்பு போன்ற நடவடிக்கைகள் நீண்டகால அடிப்படையில் பலன் அளிக்கும்’ என்கிறார்கள், ஆனால் அதற்குள் எளியவர்களுக்கான சந்தை என ஒன்று இல்லாமலே போய்விடும் சாமான்ய மக்களைத் தெருவில் நிறுத்தியதைத் தவிர இந்த நடவடிக்கையால் பிரதமர் மோடி பெரிதாக என்ன சாதித்துவிட்டார்? உண்மையில் அவருடைய டார்கெட் யார்?” என கேள்விகளை அடுக்கினார். 

கரன்சியின் கதறல்கள் ஓயாத நிலையில் தங்கத்துக்கு பங்கம் பலரை பதைபதைக்க வைத்திருக்கிறது என்பதே யதார்த்தம். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.