News
Loading...

சாமான்யர்களின் ஆட்சி மலரட்டும்!

சாமான்யர்களின் ஆட்சி மலரட்டும்!

மூன்றாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராகி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். சுமார் ஏழரைக் கோடி மக்களின் நிகழ்காலத்தை நிர்ணயிக்கும், எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பு. அதற்கு அவர் தகுதியானவரா என்பதைவிட, தயாராக இருக்கிறாரா என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.

ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சிசெய்யத்தான் தமிழ்நாட்டு மக்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தனர். இதில் புதிய முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் முழுமையாக மீதம் இருக்கின்றன. தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள், 110-ம் விதியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள், `விஷன் 2023' என தமிழ்நாட்டுக்காகத் தீட்டிய தொலைநோக்குத் திட்டங்கள், நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்கள்... இவை அனைத்தையும் செம்மையாகச் செயல்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மதத்தினருக்கும் சாதியினருக்கும் வர்க்கத்தினருக்கும், பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர் என்பதை நிருபிப்பதைப்போல புதிய ஆட்சி அமைய வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். 

ஜெயலலிதா இறந்து பத்து நாட்களுக்குப் பிறகும் அவரது மறைவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவரது நினைவிடத்தில் தொண்டர்கள் குவிகிறார்கள். ஊருக்கு ஊர் அவரது படத்தைவைத்து பெண்கள் உருகுகிறார்கள். இவர்கள் `ஜெயலலிதா நமக்கு நல்லது செய்வார்' என அவரை நம்பி வாக்களித்த சாதாரண மக்கள். இவர்களின் எதிர்பார்ப்பை எப்படிப் பூர்த்திசெய்யப்போகிறது என்பதில்தான், அ.தி.மு.க என்கிற கட்சியின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. 

ஏற்கெனவே இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவர் பன்னீர்செல்வம். அப்போது முழுவீச்சில் தனது கடமையைச் செய்ய முடியாத அளவுக்கு, அவருக்கு ஏராளமான தயக்கங்களும் தடங்கல்களும் இருந்திருக்கலாம். ஆனால், இன்று சூழ்நிலையே வேறு. இப்போது எடுக்கும் அல்லது எடுக்கத் தவறும் எல்லா முடிவுகளுக்கும் வாழ்த்தோ, வசவோ, முழுமையாக அவரைத்தான் சேரும். 

அறிவிக்கப்படாத அதிகார மையங்களில் இருந்துவரும் அழுத்தங்களுக்கு இடம்கொடுக்காமல், சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஆலோசனைகளையும் பெற்று, துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதல்களோடு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு, நேர்மையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் மிக முக்கியமாக வெளிப்படைத்தன்மையோடும் செயலாற்ற வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம். 

தனிமனித ஆளுமைகளின் ஆட்சி முடிவுக்கு வந்து, சாமான்யர்களின் ஆட்சி சாத்தியப்பட்டிருக்கும் இந்த வேளையில், முதலமைச்சர் பன்னீர்செல்வமும் அவரது அமைச்சரவை சகாக்களும் மனதுவைத்தால், நிச்சயம் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க முடியும். 

மக்கள் போற்றும் வெளிப்படையான ஆட்சியைக் கொடுக்க புதிய முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் வாழ்த்துகிறோம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்