News
Loading...

காவல் நிலையத்தில் வெடி பொருள் வெடித்ததால் ஆயுதப்படை காவலர் ஒருவரின் முகம் கருகி விபத்து.

காவல் நிலையத்தில் வெடி பொருள் வெடித்ததால் ஆயுதப்படை காவலர் ஒருவரின் முகம் கருகி விபத்து.

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி காவலர் பயிற்சி மையத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் என்பவர் தான் வெடி பொருள் வெடித்து முகம் கருகியவர்.கடந்த 2013 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த பாலகிருஷ்ணன் தனது சக காவலர்களுடன் கடந்த சனிக்கிழமை செம்பட்டி காவல் நிலைய பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

காவல் நிலையத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாலகிருஷ்ணன் குப்பைகளை சேகரித்து அவற்றை நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது அந்த காவல் நிலைய தலைமை காவலர் ஒருவர் பெட்டி ஒன்றை கொடுத்து அதனையும் தீயில் போட்டு எரிக்க பணித்துள்ளார். அந்த அட்டை பெட்டியை பாலகிருஷ்ணன் தீயில் போட்ட அடுத்த வினாடி பலத்த தீப்பிளம்புடன் அந்த அட்டை பெட்டி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் காவலர் பாலகிருஷ்ணனின் கை மற்றும் முகம் கருகியது..! 

வலியால் துடித்த பாலகிருஷ்ணனை மீட்ட சக காவலர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளானர். ஆனால் செம்பட்டி காவல் நிலைய போலீசாரோ தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவரது தீக்காயத்தில் கழிம்பு போன்ற மருந்தை தடவி சீலப்பாடி காவலர் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும், போதிய சிகிச்சை அளிக்கபடாததால் பலத்த தீக்காயத்துடன் காவலர் பாலகிருஷ்ணன் பேச முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேல் தீக்காயத்தால் அவதியுறும் பாலகிருஷ்ணனை 100 காவலர்கள் படுத்து உறங்கும் இடத்தில் காவலர்களோடு காவலராக படுக்க வைத்துள்ளதாகவும் மனித நேயம் மிக்க சில ஆயுதப்படை காவலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

செம்பட்டி காவல் நிலையத்தில் நடந்த வெடி விபத்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக காவலர் ஒருவரை மனித நேயமே இல்லாமல் சிகிச்சையின்றி, காவலர்களோடு காவலராக ஒரே அறையில் படுக்க வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்