News
Loading...

சுரண்டல் - ராம மோகன ராவ் - நெட்வொர்க் - 2

‘சுரண்டல்’ ராம மோகன ராவ் - நெட்வொர்க் - 2

ஜெயலலிதா ஆட்சியில் ராம மோகன ராவ்தான் எல்லாமே. அவரது கரன்சி வித்தைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட ஜெயலலிதா, அவரையே தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக அதாவது நம்பர் ஒன் ஆக்கினார். இப்படிப்பட்ட ஆட்களுக்குத் தானே அப்படிப்பட்ட பதவிகள் கிடைக்கும்! தர வரிசைப்படி 14-வது இடத்தில் இருந்த ராம மோகன ராவை தலைமைச் செயலாளர் ஆக்கியதன் மூலமாக கரன்சி நெட்வொர்க்கின் நம்பர் ஒன் ஆகவும் அவர் ஆக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவு, நம்பர் ஒன் - ஐ கம்பி எண்ணும் இடத்துக்கு நகர்த்திச் செல்கிறது.

டிசம்பர் 8-ம் தேதி சேகர் ரெட்டியின் வீடுகள், அலுவலகங்கள், குவாரிகளில் வருமானவரித் துறை ரெய்டு நடந்தது. அப்போது சேகர் ரெட்டி கைது செய்யப்படவில்லை. ஆனால், தனியாக அவரிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. அந்த  விசாரணையில் சேகர் ரெட்டி அதிகமாக உச்சரித்த பெயர், ராம மோகன ராவ். தன்னிடம் சேர்ந்த செல்வத்துக்கு மிகப் பெரிய காரணம் என இவரைத்தான் சேகர் ரெட்டி அடையாளம் காட்டினார். அதையடுத்து சில நாட்கள் கழித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோர் வீடுகளிலும்  தலைமைச் செயலகத்தில் உள்ள ராம மோகன ராவ் அலுவலகத்திலும் வருமானவரித் துறை சோதனை நடத்தியது.

டாஸ்மாக் கடைகளை அரசு நடத்துவதைப்போல, மணல் குவாரிகளையும் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் என்ற யோசனை ராம மோகன ராவின் மூளையில் உதித்ததுதான். இந்த யோசனை அரசாங்கத்துக்குப் பலன் கொடுத்ததோ இல்லையோ... பொதுமக்களுக்குப் பலன் கொடுத்ததோ இல்லையோ... ராம மோகன ராவுக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் மிகப் பெரிய பலனைக் கொடுத்தது. அதன்விளைவுதான், இன்றைக்கு ராம மோகன ராவிடம், பல நூறு கோடிகள் இருப்பதாகக் கிளம்பியுள்ள தகவல்கள். 

ஆந்திராவைச் சேர்ந்த ராமமோகன ராவ் 1957-ம் ஆண்டு பிறந்தவர். எம்.காம் காஸ்ட் அக்கவுன்டிங் முடித்து ஐ.ஏ.எஸ் ஆனார். நில வருவாய் மேலாண்மையில் உதவி கலெக்டராக 1987-ம் ஆண்டு பணியைத் தொடங்கினார்.  விசுவாசம் என்பதுதான் ராம மோகன ராவின் பலம். இதுதான் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு ஆட்சிகளிலும் அவரை ஆக்டிவ் ஆக வைத்திருந்தது. கருணாநிதிக்கு நம்பிக்கையாக இருந்த ராம மோகன ராவை, ஜெயலலிதாவும் தனது செயலாளர்களில் ஒருவராக நியமித்துக்கொண்டார். காரணம், அவருடைய விசுவாசம்தான். சமயங்களில் ஜெயலலிதாவே, ராம மோகன ராவிடம் கருணாநிதியை, ‘உங்கள் தலைவர் எப்படி இருக்கிறார்?’ என்று விசாரிக்கவும் செய்வாராம். முதல்வரின் முதல்நிலை செயலாளர் என்கிற அந்தஸ்து ராம மோகன ராவுக்கு அமைச்சர்கள், பிசினஸ்மேன்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கியது.

ராம மோகன ராவ் தனது காரியங்களைச் செய்வதற்காகக் கண்டுபிடித்த நபர்தான் சேகர் ரெட்டி.  மணல் குவாரிகள் கான்ட்ராக்ட் எடுப்பதில் ரெட்டிக்கு ராம மோகன ராவ் உதவினார். அதற்கு ரெட்டி கைமாறு செய்தார். சேகர் ரெட்டி மூலம், மணல் ராமச்சந்திரனும், சர்வேயர் ரத்தினமும் இவரின் வளையத்துக்குள் வந்தனர். இலவச லேப்டாப்,  தமிழக அரசு அலுவலகங்களுக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் வாங்குவது போன்ற கான்ட்ராக்டுகளை ராம மோகன ராவின் மகன் விவேக் எடுத்துச் செய்தார். அவருக்கு அந்த டெண்டர்கள் எந்த அடிப்படையில், எந்த வழியில் கிடைத்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. மற்றவர்கள் 30 சதவிகித கமிஷன் வெட்ட வேண்டும். விவேக் நிறுவனங்கள் மட்டும், 10 சதவிகித கமிஷனில் வேலையை முடித்துக்கொள்ளும். 

முதலமைச்சரின் முன்னாள் செயலாளர், தலைமைச் செயலாளர் அந்தஸ்து காரணமாக, அமைச்சர்கள் அனைவரும், ராம மோகன ராவைக் கண்டால், பணிந்தனர். ராம மோகன ராவ் போன் செய்தால், தான் எந்த இடத்தில் இருந்தாலும், அடுத்த 5 நிமிடங்களில் வந்து நிற்பார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா-சசிகலாவைத் தாண்டி, ராம மோகன ராவுக்கும் பன்னீர்செல்வம் பணிவு காட்டினார். அமைச்சர்கள் பலரும், இவரை ‘முதலமைச்ச ராக’ நினைக்க ஆரம்பித்தார்கள். இந்தக் கூட்டணி கார்டனையும் கவனித்துக்கொண்டு தங்களையும் வளப்படுத்திக்கொண்டது.

இப்போது வசமாகச் சிக்கிக்கொண்டார் ராம மோகன ராவ். ‘சேகர் ரெட்டியிடம் இருந்து எடுக்கப்பட்டவை அனைத்தும் ராம மோகன ராவின் பணம் என்றும், இவருக்கு ஜெயலலிதா கொடுத்து வைத்திருந்தார் என்றும் விசாரணைகளில் அதிகாரிகள் அறிந்துள்ளார்கள்’ என்று சொல்லப்படுகிறது. ராம மோகன ராவ் இதற்கு என்ன பதில் சொல்ல இருக்கிறார் என்பதை வைத்தே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.