News
Loading...

நாமக்கல்: வீட்டை அடித்து நொறுக்கிய கந்து வட்டி கும்பல்..!

நாமக்கல்: வீட்டை அடித்து நொறுக்கிய கந்து வட்டி கும்பல்..!

ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டணம் கடைவீதியில் ஃபைனான்ஸ் நடத்தி வரும் ரகுபதி என்பவரிடம், வீட்டை அடமானம் வைத்து கந்துவட்டிக்கு 2 லட்ச ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதி பணத்தை திருப்பி செலுத்திய பழனிவேல், வட்டி அதிகமாக உள்ளதால் குறைத்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் வட்டியை குறைக்க மறுத்த ரகுபதி, அடமானம் வைக்கப்பட்ட வீட்டை, வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பணத்தை திருப்பி தருவதாகவும், வீட்டு பத்திரத்தை வழங்குமாறும் பழனிவேல் கேட்டுள்ளார். அதற்கு, மீதமுள்ள ஒரு லட்ச ரூபாய்க்கு, 10 லட்ச ரூபாய் கட்டினால்தான் வீட்டுப் பத்திரத்தை வழங்க முடியும் என, ரகுபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வீட்டை விலைக்கு வாங்கிவிட்டதாக கூறி, கருப்பண்ணன், மஞ்சுளா ஆகியோர் வீட்டை காலி செய்யுமாறு பழனிவேல் தம்பதியை மிரட்டியுள்ளனர்.

ஆனால், வீட்டை காலி செய்ய மறுத்த பழனிவேல் தம்பதி, வீட்டை விலைக்கு வாங்கியவர்களிடமும், கந்து வட்டி பேர்வழியிடமும் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். இந்நிலையில், கந்துவட்டி வழங்கிய ரகுபதி மற்றும் வீட்டை விலைக்கு வாங்கிய கருப்பண்ணன், மஞ்சுளா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், ஆளில்லாத நேரத்தில் பழனிவேல் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர்.

பின்னர் பொருள்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி, பணம் இருக்கிறதா என தேடியுள்ளனர். வீட்டில் பணம் இல்லாததால், வீட்டின் மேற்கூரையை முழுவதுமாக அடித்து நொறுக்கிய அவர்கள், வீட்டில் இருந்த பொருட்களை தூக்கிச் சென்று, அங்கிருந்த புதரில் வீசியுள்ளனர். தகவல் அறிந்து பழனிவேலும் மாரியம்மாளும் வீட்டை நோக்கி ஓடிவரவே, அவர்களுக்கும் சரமாரியாக அடி உதை விழுந்துள்ளது.

பழனிவேல் தற்போது இராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் குறித்து இதுவரை வழக்கு பதிவு செய்யாத போலீஸார், விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.