News
Loading...

குடும்பத்தில் ஒருவராவது ஆதார் பதிவு செய்திருந்தால் மட்டுமே ரேஷன் வழங்கப்படும்

குடும்பத்தில் ஒருவராவது ஆதார் பதிவு செய்திருந்தால் மட்டுமே ரேஷன் வழங்கப்படும்

சென்னை: ரேஷன் கடைகளில் குடும்பத்தில் ஒருவராவது ஆதார் எண் பதிவு செய்திருந்தால் மட்டுமே டிசம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. ஊழியர்கள், கையால் பில் போடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடி குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டு) உள்ளன. இவர்களுக்கு 34,686 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு இணையதள இணைப்புடன் கூடிய விற்பனை இயந்திரம் (பாயின்ட் சேல்ஸ் மிஷின்) வழங்கப்பட்டது. இந்த மிஷினில் பொதுமக்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் குடும்ப அட்டை எண், உறுப்பினர்களின் எண்ணிக்கை, செல்போன் எண், அட்டையின் வகை, எரிவாயு விவரம் உள்ளிட்ட தகவல்களும் மிஷினில் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனாலும், 75 சதவீதத்திற்கும் குறைவாகவே ஆதார் எண் தகவல்கள் ரேஷன் கடைகளில் பதிவாகியுள்ளது. 2017ம் ஆண்டு ஜனவரியில் ஸ்மார்ட் கார்டு கொடுக்க முடியாவிட்டாலும், ஆதார் எண் பதிவை வைத்தே ரேஷன் பொருட்கள் வழங்க தற்போது தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஆதார் எண் விவரங்களை தெரிவித்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க உணவு வழங்கல் துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வந்தது. ஆனால் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஆதார் பதிவு செய்யாதவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும், ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்” என்றும் பதில் அளித்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் (டிசம்பர் 1ம் தேதி) முதல் ஆதார் எண் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, “டிசம்பர் 1ம் தேதி முதல், குடும்பத்தில் ஒரு நபராவது ரேஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்திருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் எண் பதிவு செய்யாதவர்களிடம் ஆதார் அட்டை கொண்டு வர செய்து, மிஷினில் பதிவு செய்த பின்னர் பொருட்கள் வழங்குகிறோம். 

ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பித்தவர்கள் அதற்கான ரசீசை காட்டினாலும் பொருட்கள் வழங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு குடும்பத்தில் யாருமே ஆதார் கார்டு இதுவரை எடுக்கவில்லையென்றாலோ அல்லது ரேஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யாவிட்டாலோ அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதில்லை. டிசம்பர் 1ம் தேதி முதல் எந்த ரேஷன் கடையிலும் கையால் பில் போடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லாமே `பாயின்ட் சேல்ஸ் மிஷின்’’ மூலமே பதிவு செய்து பொருட்கள் வழங்குகிறோம்” என்றனர். பொதுமக்கள் ரேஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்திருந்தால் மட்டுமே டிசம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று தமிழக அரசு தரப்பில் எந்த உத்தரவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், ரேஷன் கடைகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆதார் கார்டு இதுவரை பெறாதவர்களுக்கு, ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

போன் நம்பர் இல்லையா? அது போலி ரேஷன் கார்டு

குடும்பத்தில் ஒருவராவது ஆதார் எண் தகவலை ரேஷன் கடைகளில் பதிவு செய்திருந்தால் மட்டுமே கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, ஆதார் கார்டு இணைப்புடன் செல்போன் நம்பர் அளித்தால்தான் அவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். போன் நம்பர் தராவிட்டால், அந்த ரேஷன் கார்டை போலியாக அறிவிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோன்று, ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே இருந்தாலும், ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் சென்று விசாரித்து அவர் தனியாக இருக்கிறாரா அல்லது மகன், மகளுடன் கூட்டு குடும்பத்தில் வசிக்கிறாரா என்று சோதனை செய்த பிறகே பொருட்கள் வழங்க வேண்டும். குடும்பத்தோடு வசித்தால் அந்த கார்டையும் போலி என அறிவிக்க வேண்டும் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...