News
Loading...

விரட்டப்பட்டவர்களால் வளைக்கப்பட்ட அ.தி.மு.க!

விரட்டப்பட்டவர்களால் வளைக்கப்பட்ட அ.தி.மு.க!

“மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் சசிகலா மட்டும் அங்கம் வகித்திருந்தால், பிரிட்டிஷ்காரன் இந்தியாவுக்குள் நுழைந் திருக்கவே முடியாது. பிரிட்டிஷ் கொடி இந்தியாவில் எங்கும் பறந்திருக்காது.” - இந்த வார்த்தைகளை தீர்க்கதரிசனமாகச் சொன்னவர் வலம்புரி ஜான். ஜெயலலிதாவின் உடன்பிறவாத் தோழியாக வலம்வந்த சசிகலாவை, 20 ஆண்டுகளுக்கு முன்பே, வலம்புரி ஜான் இப்படி கணித்திருந்தார். அந்தக் கணிப்பை, ஒருநாளும் சசிகலா பொய்த்துப்போகவிட்டது இல்லை. ஜெயலலிதா என்ற மாபெரும் பிம்பம் டிசம்பர் 5-ம் தேதி இரவு கலைந்தது. மரணித்த அந்த உடல் மருத்துவமனையில் இருந்து, போயஸ் கார்டன் வீட்டுக்கு வருவதற்குள், சிறிய எதிர்ப்புகூட எழாமல், ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் முதலமைச்சராக்கினார் சசிகலா. அதன்மூலம், தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். இதைச் செய்ததன்மூலம், அ.தி.மு.க என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தையும் தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்துள்ளார் சசிகலா.

2010-க்குப் பிறகு, கடந்துபோன இரண்டு டிசம்பர் மாதங்கள், சசிகலாவின் இத்தனை பெரிய சாதுர்யத்துக்கு,  வரலாற்றுச் சாட்சியாகப் பதிவாகி உள்ளன.

முதல் டிசம்பர் : 2011 டிசம்பர் 18

 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதலமைச்சராகி இருந்தார். தமிழகத்துக்கு மூன்றாவது முறையாக முதலமைச்சராகி இருந்த ஜெயலலிதா, உற்சாகமாக ஆட்சி நடத்தத் தொடங்கி இருந்தார். அதே காலகட்டத்தில், பெங்களூருவில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கும் வேகம் பிடிக்கத் தொடங்கி இருந்தது. அந்த வழக்கில், ஜெயலலிதாவோடு சம்பந்தப்பட்ட சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் உள்ளிட்டவர்கள், அடிக்கடி பெங்களூரு சென்று ஆஜராகிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு அந்த வழக்கின் போக்கு ஓரளவுக்கு அப்போதே புரிந்தது. இதில் ஜெயலலிதா கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார் என்பதை அவர்கள் கணித்தே வைத்திருந்தனர். பெங்களூரு நீதிமன்றத்தை ரகசிய ஆலோசனைக்கூடமாகவும் மன்னார்குடி உறவுகள் மாற்றி இருந்தனர். “ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால், அதற்குப்பிறகு கட்சியையும் ஆட்சியையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்ற ரீதியில் அவர்கள் ஆலோசனை போய்க்கொண்டு இருந்தது. மேலும், 1996-க்குப் பிறகு, ஜெயலலிதாவால் துரத்தி விடப்பட்ட வி.என்.சுதாகரனோடு, இளவரசியும் சசிகலாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இந்தத் தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்குப்போனபோது, அதனால், அவர் சசிகலா மீது எரிச்சலாகி இருந்தார். அதேநேரத்தில், மற்றொரு விவகாரமும் கார்டனில் வெடித்தது.

விரட்டப்பட்டவர்களால் வளைக்கப்பட்ட அ.தி.மு.க!

அன்றைக்கு குஜராத் முதலமைச்சராக இருந்தவர் இன்றைய பிரதமர்  நரேந்திர மோடி. அவர் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு நல்ல நண்பராகவும் இருந்தார். குஜராத்தில் மோடி பதவியேற்றபோது, ஜெயலலிதா நேரில் சென்று வாழ்த்தினார். போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்த நரேந்திரமோடி விருந்து சாப்பிட்டுச் சென்றார். அந்த நட்பின் அடிப்படையில், ஜெயலலிதாவின் உடல் நிலையிலும் மோடி அப்போதே கவனம் எடுத்துக்கொண்டார்.

ஜெயலலிதாவுக்காக பிரத்யேகமாக குஜராத்தில் இருந்து நர்ஸ் ஒருவரையும் அனுப்பிவைத்தார். அந்த நர்ஸை, ஒரு கட்டத்தில் சசிகலாவும் இளவரசியும் மிரட்ட, அவர் மோடியிடம் முறையிட, மோடி ஜெயலலிதாவைத் தொடர்புகொண்டு, “நான் அனுப்பிய நர்ஸை யாரோ மிரட்டினார்களாமே” எனக் கேட்க, கொதித்துப் போனார்  ஜெயலலிதா. உடனடியாக, கார்டன் ஊழியர்களை அழைத்து விசாரித்தார். சசிகலாவும் இளவரசியும் அப்போது கார்டனில் இல்லை. பெங்களூருவில்  இருந்தனர். அவர்கள் இல்லாத தைரியத்தில், கார்டன் ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என்று வரிசையாக ஜெயலலிதாவிடம் சசிகலாவைப் பற்றி புகார் பட்டியலைக் கொடுத்தனர். சசிகலா, இளவரசி, நடராஜன், ராவணன், திவாகரன், பாஸ்கரன், மகாதேவன் என மன்னார்குடி குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் செய்யும் காரியங்களை இவர்கள் புட்டுப் புட்டு வைத்தனர். அதைக் கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே போன ஜெயலலிதா, சசிகலாவை கார்டனை விட்டு வெளியேற்றினார். சசிகலா உறவினர்களைக் கட்சியில் இருந்து தூக்கினார்.

விரட்டப்பட்டவர்களால் வளைக்கப்பட்ட அ.தி.மு.க!

2011 டிசம்பர் 18-ம் தேதி அது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “அ.தி.மு.க தலைமையில் அமைந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும்வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குகிறேன். அ.தி.மு.க-வினர் யாரும் அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” என்று தெரிவித்து இருந்தார். அந்தப் பட்டியலில், 1. சசிகலா (தலைமை செயற்குழு உறுப்பினர்), 2. சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், 3. திவாகரன் (சசிகலாவின் சகோதரர்), 4. டி.டி.வி.தினகரன் (முன்னாள் எம்.பி), 5. வி.பாஸ்கரன் (ஜெயா தொலைக்காட்சி பொறுப்பாளர்), 6. வி.என்.சுதாகரன் (வளர்ப்பு மகன்), 7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ், 8. எம்.ராமச்சந்திரன், 9. இராவணன், 10. மோகன் (அடையாறு), 11. குலோத்துங்கன் ஆகியோர் இருந்தனர். அதன்பிறகு, சில மணிநேரங்களில், அடுத்த அறிக்கை வந்தது. அதில், ராஜராஜன், ஜெயலலிதா மன்றத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் வி.மகாதேவன், வி.தங்கமணி, பாதுகாப்பு அதிகாரி திருமலைசாமி, கார்டனுக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் படிக்கும் குமார் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஜெயலலிதா குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகு  சில வாரங்கள்தான், சசிகலா மெதுவாக மீண்டும் கார்டனுக்குள் வந்தார். அது உணர்வுபூர்வமான பந்தம். அதை ஜெயலலிதாவால் தவிர்க்க முடியவில்லை. 

ஆனால், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் ரத்த சொந்தங்களான திவாகரன், பாஸ்கரன், சுதாகரன், தினகரன் உள்ளிட்ட இன்னபிற ‘கரன்கள்’ யாரையும் கார்டனுக்குள் ஜெயலலிதா மீண்டும் அனுமதிக்கவே இல்லை. அதன்பிறகு அவர்கள் யாரும், கட்சிக்குள் நேரடியாகத் தலையிடவில்லை; ஆட்சியில் நேரடியாக அதிகாரம் செலுத்தவில்லை; கார்டன் பக்கமே தலைகாட்டவில்லை. அந்த நிலையை  இப்போது மாற்றிக்காட்டி உள்ளார் சசிகலா. வெளியேற்றப்பட்ட 2011-க்குப் பிறகு, 5 ஆண்டுகள் கழித்து, 2016-ல் வந்த டிசம்பரில், சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் அந்த மாற்றம் சாத்தியமாகி உள்ளது.

விரட்டப்பட்டவர்களால் வளைக்கப்பட்ட அ.தி.மு.க!

இரண்டாவது டிசம்பர் : 2016 டிசம்பர் 5

2016 டிசம்பர் 6-ம் தேதி, பிரமாண்டமான, வரலாற்றுப் பெருமை கொண்ட ராஜாஜி ஹாலில், ஜெயலலிதாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி இரும்பு அரண் அமைத்து நின்றவர்கள் சசிகலாவும் அவருடைய மன்னார்குடி ரத்த உறவுகளும் மட்டும்தான். அவர்கள், அ.தி.மு.க முக்கியப் பிரமுகர்கள் யாரையும், ஜெயலலிதாவின் உடலுக்கு அருகில் நிற்கவிடவில்லை. முதல்வர் பன்னீர் செல்வமே ஓரமாக உட்கார்ந்து இருந்தார். ஜெயலலிதாவின் சொந்தங்களை சில நொடிகளுக்கு மேல் அங்கு அனுமதிக்கவில்லை. ஆனால், சசிகலா நின்றார். அவருக்குப் பக்கத்தில், ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி, ஜெயலலிதாவால் துரத்திவிடப்பட்ட சசிகலாவின் உறவுகள் நின்றன.  இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியே, தலையை வருடி சசிகலாவுக்குத்தான் ஆறுதல் சொன்னார். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன்கள், தினகரன், பாஸ்கரன், வி.என்.சுதாகரன்  ஜெயலலிதா உடலைச் சுற்றி நின்றனர். சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மகன் மகாதேவன் வந்திருந்தார். முறுக்கேறிய கதர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து திவாகரன் நின்றிருந்தார். நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக சசிகலாவின் கணவர் நடராஜன் நின்றிருந்தார். ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டிக்கு ஒரு புறம் பாஸ் என்ற பாஸ்கரன் நின்றிருந்தார். மறுபுறம் வெள்ளை ஜிப்பா அணிந்து திவாகரனின் மகன் ஜெயானந்த் அரண் அமைத்து நின்றார்.  சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ், மகள் அனுராதா, மற்றொரு மகள் பிரபா ஆகியோர் நின்றனர்.  சசிகலாவின் அண்ணன் மறைந்த ஜெயராமன்- இளவரசி தம்பதியின் மகள் பிரியா, சசிகலாவின் அருகிலேயே நின்றார். மகன் விவேக் ஜெயராமன், விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனா உள்ளிட்டவர்கள் அங்கு நின்றனர். ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த அகில இந்தியத் தலைவர்கள், அண்டை மாநில முதலமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் சசிகலாவிடம்தான் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றவராக எல்லோருக்கும் சசிகலா அடையாளமாகி இருந்தார். அந்த அடையாளம், அவருடைய குடும்பத்தினருக்கு ராஜாஜி ஹாலில் அங்கீகாரம் கொடுத்தது. ஜெயலலிதாவால், போயஸ் கார்டனை விட்டு துரத்தப்பட்டவர்கள், சசிகலா குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையினர். டிசம்பர் 6-ம் தேதி,  ஜெயலலிதா உடலுக்கு அரண் அமைத்தது, ஜெயலலிதாவால் துரத்தி அடிக்கப்பட்ட சசிகலா குடும்பத்தின் சாட்சாத், இரண்டாம் தலைமுறைதான். அதையும்தாண்டி, அங்கே, சசிகலா குடும்பத்தின்  மூன்றாம் தலைமுறை தலையெடுத்து இருந்ததையும் பார்க்க முடிந்தது.

விரட்டப்பட்டவர்களால் வளைக்கப்பட்ட அ.தி.மு.க!

சசிகலா குடும்பத்துக்கு விசுவாசமாக இருப்போம் என்று சத்தியம் செய்து கொடுத்த, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராஜாஜி ஹாலின் படிக்கட்டுகளில், அப்பாவியாக நின்று கொண்டிருந்தார். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பரபரப்பாக இருந்தார். அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதா உடலுக்கு அருகில் போகவில்லை. சசிகலாவுக்கு எப்போதும் ஆகாத செங்கோட்டையன் 3 மணிக்கு ராஜாஜி ஹாலைவிட்டே வெளியேறிவிட்டார். இந்தக் காட்சிகளுக்கு, ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்கிறது. “இறந்துபோன ஜெயலலிதா மட்டுமல்ல,  இருக்கும் அ.தி.மு.க-வுக்கும் நாங்கள்தான் சொந்தம். அவை எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்” என்பதுதான் அது. ஆக, ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழகத்தின் ஆட்சி, இனி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். சசிகலாவை மையமாகவைத்து இயங்கும் மன்னார்குடி குடும்பம், தமிழகத்தின் ஆட்சியைக் கட்டுப் படுத்தும். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த அ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்கு இனி சசிகலா பொதுச் செயலாளராக இருப்பார். அது அறிவிக்கப்பட்டும் நடக்கலாம்; அறிவிக்கப் படாமலும் நடக்கலாம். ஆனால், அந்த இடத்தில் சசிகலாதான் இருப்பார். அவரைச் சுற்றி மன்னார்குடி குடும்பம் இருக்கும். இவர்களால், அ.தி.மு.க என்ற கட்சியும், அதன் தலைமையில் அமைந்த ஆட்சியும் வளைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். சமாதிக்கு வெளியில், சசிகலாவின் கணவர் நடராஜன், “ஜெயலலிதா அமைத்த கட்சியையும் ஆட்சியையும் அவர் வழியில் நாங்கள் கட்டிக்காப்போம்” என்று சொன்ன வார்த்தைகளில் இது தெரிந்தது.

கட்டிக் காப்பார்களா என்று இப்போது சொல்ல முடியாது!          

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.