News
Loading...

சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது!

சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது!

2011 டிசம்பர் மாதம் சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. சசிகலாவோடு அவரது உறவுகளையும் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். எல்லாம் மூன்று மாதங்கள்தான். 2012-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி சசிகலாவிடம் இருந்து அதிரடியாக வந்தது ஓர் அறிக்கை. ‘‘என் உறவினர்கள் அக்காவுக்கு துரோகம் செய்தது எனக்குத் தெரியாது. அக்காவுக்கு எதிரான சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன. துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’’ என்றெல்லாம் சசிகலா வெளியிட்ட அந்த அறிக்கையை அரசியல் மேகங்கள் மாறியிருக்கிற சூழலில், 5 ஆண்டுகள் கழித்து இப்போது படித்தால் சிரிப்புதான் வருகிறது. அந்த அறிக்கை அப்படியே இங்கே ரீப்பீட்டு...

‘பத்திரிகைகளில் என்னைப் பற்றி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1984-ல் முதல் முறையாக அக்காவை சந்தித்தேன். பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவர் என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார். 1988-ல் இருந்து அக்காவின் போயஸ் கார்டன் வீட்டில் அவருடன் வசித்து வந்தேன். அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் அக்காவின் பணிச்சுமையை ஓரளவாவது குறைக்கும் வகையில் உதவியாக இருந்தேன். அப்போது வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு முழு விவரம் தெரியாது. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த நான், கடந்த டிசம்பரில் (2011-ல்) அக்காவை பிரிந்து வெளியேவந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. பிறகுதான் அதுவரை வெளியில் என்ன நடந்தது என்ற உண்மைகள் எனக்கு தெரிய வந்தன.

அக்கா எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் புரிந்தது. என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்ததை சாக்கிட்டு, என் பெயரைப் பயன்படுத்தி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர்; அதனால் கட்சிக்குப் பாதிப்புகள் ஏற்பட்டன; பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன; அக்காவுக்கே எதிரான சதி திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வேதனை அடைந்தேன். இவை எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்துள்ளன. அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேன். கனவிலும் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை. என் உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அவர்கள் யாராக  இருந்தாலும் எனக்கு வேண்டாத
வர்கள்தான். அவர்களுடன் தொடர்புகளை  துண்டித்து விட்டேன். இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.

அரசியலில் ஈடுபட வேண்டும், கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும், அமைச்சர் பதவியை அடைய வேண்டும், ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு கிடையாது. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவுக்கு அர்ப்பணித்துவிட்டேன். இனியும் அக்காவுக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன்.’ - இதுதான் சசிகலா வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.

சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது!

சசிகலா அறிக்கைக்கு ஜெயலலிதா காட்டிய ரியாக்‌ஷன் என்ன? அதையும் பார்ப்போம். 2012 மார்ச் 31-ம் தேதி ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் என்ன சொல்லியிருந்தார்?  

‘திருமதி. வி.கே.சசிகலா எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதே பொருள் கொண்ட ஒரு அறிக்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார். வி.கே.சசிகலா அளித்துள்ள விளக்கத்தினை நான் ஏற்றுக் கொள்கிறேன். 19.12.2011 அன்று வி.கே.சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயத்தில் 19.12.2011 அன்று எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோர் மீதும், 22.12.2011 அன்று கலியபெருமாள், எம்.பழனிவேல் ஆகியோர் மீதும், 26.1.2012 அன்று தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் மீதும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நடவடிக்கை அப்படியே தொடரும். எனவே கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார் ஜெ.

‘அக்காவுக்குத் துரோகம் செய்த உறவுகளின் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை’ என சொன்ன சசிகலாதான், ஜெயலலிதா உடலுக்குப் பக்கத்தில் மன்னார்குடி  உறவினர்களுடன் சேர்ந்து அரண் அமைத்திருந்தார். ‘எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’ என்றவர்தான் ஜெயலலிதா இறந்தபிறகு சமாதியின் ஈரம் காய்வதற்குள் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

‘அரசியல் ஆசை இல்லை’ என்று சொன்ன சசிகலாவுக்கு இப்போது ஆசைகள் துளிர் விட்டிருக்கின்றன. ‘‘கட்சியை சின்ன அம்மாதான் வழி நடத்த வேண்டும்’’ என கட்சிக்காரர்கள் எல்லாம் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு கூடும்போது சசிகலா பொதுச் செயலாளர் ஆக்கப்படலாம். ஆனால் அது  முடியுமா? அ.தி.மு.க. சட்ட விதி என்ன சொல்கிறது?

சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது!

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க-வின் சட்ட திட்ட விதிகளில் திருத்தங்கள் செய்து வரப்பட்டன. ‘அ.தி.மு.க. பொதுச் செயலாளர், கட்சியின் அனைத்து அடிப்படைப் பொது உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்கிறது கட்சியின் சட்ட திட்ட விதி 20, பிரிவு- 2. அதன்படிதான் கடந்த 2014-ம் ஆண்டு 7-வது முறையாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆனார் ஜெயலலிதா. கடந்தமுறை அப்படி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகுதான் அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தலே தொடங்கியது. 2014-ல் உட்கட்சித் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட்டன. அது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் ஒரு முக்கியமான விஷயம் இடம்பெற்றிருந்தது. உட்கட்சி தேர்தலில் போட்டியிடுகிறவர்களின் தகுதிகள் என்ன? என்பதையும் குறிப்பிட்டிருந்தார்கள் ‘கட்சியின் சட்ட திட்ட விதி 30, பிரிவு -5ன் படி உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்’ என சொல்லியிருந்தார்கள். இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றால் அந்த அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது என அ.தி.மு.க. சட்ட திட்ட விதி சொல்கிறது.

இதன்படி பார்த்தால் 2011 டிசம்பரில் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 2012 ஏப்ரல் 1-ம் தேதிதான் ஜெயலலிதாவால் மன்னிக்கப்பட்டார். அன்றோ அல்லது அதற்கு பிறகோதான் சசிகலா கட்சியில் மீண்டும் இணைந்திருக்க முடியும். ஐந்தாண்டுகள் கட்சியில் இருந்திருக்க வேண்டும் என்கிற அ.தி.மு.க. சட்ட திட்ட விதி கணக்குப்படி அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு (2017-ம் ஆண்டு) பிறகுதான் சசிகலாவால் கட்சியின் பொதுச் செயலாளராக முடியும். ஆனால், இந்த சட்ட திட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வர முடியுமா என்கிற கேள்விகளும் எழுகிறது. அதற்கும் பொதுக்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். அது சாத்தியமா?

‘ஆண்டுக்கு  ஒரு முறை கட்சியின் பொதுக் குழுவை கூட்ட வேண்டும்’ என்பது கட்சியின் சட்ட திட்ட விதி. அதன்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட வேண்டும். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விரைவில் பொதுக்குழு கூடும் தேதி அறிவிக்கப்படலாம். அதில் பொதுச் செயலாளராக யாரைத் தேர்வு செய்கிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் உடையும்.

சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது!

தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு கட்சியின் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத்தான் இருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கச் சொல்லி தேர்தல் கமிஷனுக்கு அளிக்கப்படும் ஃபார்ம் பி-யில் இதுவரை ஜெயலலிதாதான் கையெழுத்து போட்டு வந்தார். அப்போலோவில் இருந்தபோது நடந்த இடைத் தேர்தலில் கைநாட்டு வைத்தார். இந்த அதிகாரம் இனி யாருக்கும் போகும் என்பதும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படலாம்.

‘‘கட்சியைவிட்டு நீக்கப்பட்ட பின்பும் நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களைப் பழி வாங்குவோம் என தலைமை மீது சந்தேகம் வருமளவுக்கு பேசுவோருக்கும் அவர்கள் பேச்சை நம்பி செயல்படும் கழகத்தினருக்கும் மன்னிப்பே கிடையாது’’ - 2011 பொதுக் குழுவில் ஜெயலலிதா இப்படி கர்ஜித்தார். அதாவது சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்ட 12-வது நாள் நடந்த பொதுக்குழுவில்தான் இந்த அஸ்திரத்தை ஜெயலலிதா வீசினார். அப்படிப்பட்ட சசிகலாவும் அவருடைய உறவுகளும் ராஜாஜி ஹாலில் சூழ்ந்திருந்தது போல பொதுக்குழுவிலும் கோலோச்சுவார்களா? 

அப்படி கோலோச்சுவதற்கு எதிராக யாராவது நீதிமன்றத்தை நாடுவார்களா என்பதே அ.தி.மு.க-வில் நடக்கப் போகும் அடுத்தடுத்த காட்சிகள்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...