News
Loading...

சசிகலா, உறவினர்கள் துரோகிகள்! மன்னிப்பே கிடையாது! சென்ற பொதுக்குழுவில் ஜெ.,ஆவேசம்!

சசிகலா, உறவினர்கள் துரோகிகள்..! மன்னிப்பே கிடையாது..! சென்ற பொதுக்குழுவில் ஜெ.,ஆவேசம்..!

மிழக முதல்வர் ஜெயலலிதா 2011ம் ஆண்டு இதே நாளில் டிசம்பர் 30 ல் நடந்த பொதுக்குழுவில் பேசுகையில்,‘‘ ‘‘அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களிலும் பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் தவறு செய்கின்றனர்.

அதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர்.

அப்படி நீக்கப்படும் ஒரு சிலர், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்ற முடிவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவர்.

ஒரு சிலர் வேறு கட்சியில் சேர்ந்துவிடலாம் என முடிவு எடுப்பர். தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக இன்னொரு கட்சியில் சேர்வதில் நாம் தவறு காண முடியாது.

ஆனால், இன்னும் சிலரோ கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, ‘நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவோம்.

எனவே, எங்களைப் பகைத்துக்கொண்டால் நாங்கள் மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம’ என்று மிரட்டுபவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு கட்சித் தலைமையின் முடிவின்மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது.

அத்தகையவர்களின் பேச்சை நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சியினருக்கும் மன்னிப்பே கிடையாது’’ என முழுங்கினார் ஜெயலலிதா.

அந்த பொதுக்குழு கூட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் டிசம்பர் 19ம் தேதி ஜெ.,ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.

அதில் சசிகலா மற்றும் அவரது உறவுகளை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார்.

‘வி.கே.சசிகலா, எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், எம்.பழனிவேல், தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

அவர்களுடன் உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

மூன்று மாதம் கழித்து, ‘‘அக்காவுக்குத் துரோகம் செய்த உறவுகளின் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன்.

அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை’ என சொன்ன சசிகலாவை திரும்ப சேர்த்துக் கொண்டார்.

ஆனால், அவர் உறவுகளை சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

எனக்கு ஒரு கவுன்சிலர் பதவி கூட வேண்டாம் என்று கூறிய சசிகலா இன்று பொதுச்செயலாளர், ஜெ.,வால் நீக்கப்பட்டவர்கள் சசிகலாவை சுற்றி நிற்கின்றனர்.

இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும் என ஜெ.,உண்மை விசுவாசிகளின் குமுறல் கேட்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்